செவ்வாய், ஜனவரி 30, 2007

முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு!!!


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் கொண்ட உருவமாகவும், உசேன் என்பவருக்கு ஐந்துவிரல் கொண்ட உருவமாகவும் வடிவமைத்து சப்பரத்தில் வைத்து ஊரை வலம் வருகின்றனர்.

நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இந்துக்கள் முறைப்படி காப்புக்கட்டி, விரதமிருந்து தீ மிதிக்கின்றனர். ஆண்கள் தீ மிதிப்பதும், பெண்கள் பூ மெழுகுதல் என தீக்கங்குகளை எடுத்து உடலில் கொட்டுவதுமாக விழா நடக்கிறது. இதனால் நோய் தாக்காது என நம்புகின்றனர்.

மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதிப்பதற்கு குழிகளை வெட்டுகின்றனர். ஐந்தாம் நாள் வரை குழிகளை காய வைக்கின்றனர். அடுத்த மூன்று நாள் குழிகளில் விறகுகளை காய வைத்து தீ மிதிப்பதற்கு தயார்படுத்துகின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவு முடிந்து அதிகாலை 3 மணியளவில் தீ மிதி திருவிழா நடக்கிறது. 10ம் நாளான மொகரம் பண்டிகையில் தீமிதிக்கும் குழியை மூடி விழாவை நிறைவு செய்கின்றனர். பள்ளிவாசலை கோவிலாக வழிபடும் இந்துகளுக்கு பூசாரியாக முஸ்லிம் உள்ளார். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத் திருவிழாவைக்காண ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜாங்க்பிரித், மனைவி ஹோடி வந்திருந்தனர்.
http://www.dinamalar.com/

வேகமாக நகரங்கள் கடலில் புதையும் ஆபத்து!!!

விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. வெப்பநிலை அதிகரிப்பால் பனி மலை உருகி நகரங்கள் மூழ்கும் ஆபத்து.


உலகின் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.


இந்த மாநாட்டில் உலகின் வெப்ப நிலை அதிகரித்து வருவது குறித்து விஞ்ஞானிகள் தங்கள் கவலையை வெளியிட்டனர். வெப்ப நிலை காரணமாக பனி மலைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வும், இதற்கு முன் இருந்ததை விட இப்போது வேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருவதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் 55 அங்குலம் வரை கடல் மட்டம் அதிகரித்து விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் சில நாடுகளில் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கிரீன்லாந்து, இந்தோனேஷியா உள்பட சில நாடுகளில் 2030-ம் ஆண்டுக்குள் கடற்கரை பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.
நன்றி>லங்கசிறீ

ராமரின் பலம் பாலத்தில் இருக்கா?

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்ட கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் தற்போது ஆழப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை) உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

பாலத்தை உடைப்பதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரிஸ் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள தோண்டும் கருவி 50 டன் எடை கொண்டது. இதை வைத்துத்தான் ராமர் பாலத்தை உடைக்க முயன்றனர்.

ஆனால் முதல் இடிப்பிலேயே இக்கருவி உடைந்து கடலில் மூழ்கி விட்டது. இதனால் உடைப்புப் பணி நிறுத்தப்பட்டது. கடலில் விழுந்த கருவியை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சென்னையிலிருந்து 150 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் சக்தி கொண்ட ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. இந்த கிரேன் கடலில் விழுந்த பகுதியை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது இந்த கிரேனும் உடைந்து விட்டது.

ஏற்கனவே விழுந்த கருவியோடு, தற்போது ராட்சத கிரேனும் கடலில் விழுந்து விட்டது. இதனால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். தற்போது விசாகப்பட்டனத்திலிருந்து 200 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் இன்னொரு கிரேன் வரவழைக்கப்படவுள்ளது.

ஒரு வேளை கருவியை தோண்டி எடுத்து கப்பலில் பொருத்தி சரி செய்ய முடியாவிட்டால் அக்வாரிஸ் கப்பல், கொச்சி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சரி செய்யப்படும்.

புராதண காலத்தில் ராமரால் போடப்பட்ட பாலம் என்பது ஐதீகம். இதனால் இந்த பாலத்தை உடைக்கக் கூடாது என பாஜக, இந்து முன்னணி, அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகள் ஆகியவை கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதேபோல சுப்பிரமணியம் சுவாமியும் ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் பாலத்தை இடிக்க முயன்ற கருவி உடைந்ததும், அதை மீட்க முயன்ற கிரேன் உடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
http://thatstamil.oneindia.in/news/2007/01/30/sethu.html

வெள்ளி, ஜனவரி 26, 2007

மூட்டை மூட்டையாக வெடிபொருட்களாம், சட்டம் ஒழுங்கு கெட்டுட்டாம், அம்மா சொல்லுறாக.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இலங்கை தமிழர்கள் உள்பட 9பேர் கைது. 100 மூட்டை வெடிகுண்டு பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி. கைதான 9 பேரில் 6 பேர் விடுதலைப்புலிகளாம்.

நிறையவெடி பொருட்களை அவர்களிடம் இருந்து கைப் பற்றியிருக்கிறார்கள். இது ஒருவரிச் செய்தி போல தோன்றும். உண்மையில் இந்த ஒருவரிச் செய்திக்குள் ஓராயிரம் செய்திகள் புதைந்திருக்கின்றன. வெடி பொருட்கள் கிடைக்குமிடம் எதுப அதன் விற்பனை எப்படி? அதனை யார் விற்றது? யார் வாங்கினார்கள்? அதன் நடமாட்டம் எவ்வாறு? இதனை எப்படி எடுத்துச் சென்றார்கள்? விடுதலைப் புலிகள் எப்படி வந்தார்கள்? என பல கேள்விகள் எழுகின்றன. விசாரணையும் பலமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் நம்மைப் பொறுத்த வரையில் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற தி.மு.க. ஆட்சியில் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. சட்டம்-ஒழுங்கு மற்றும் உளவுப் பிரிவு முற்று லுமாக கெட்டு விட்டது. வெடி பொருட்கள் கட தல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் ஊடுருவல் மட்டு மல்ல, கோடம்பாக்கம் பகுதி யில் ஒருவரது வீட்டில் குண்டு வெடித்திருக்கிறது.

அந்த வீட்டுக்குரியவர் மீது மதுரைத் தேர்தலில் குண்டு வீசிய வழக்கும் இருக்கிறது. இவையெல்லாம் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு உதாரணங்களாக இருக்க முடியாது.

எனது ஆட்சிக் காலத்தில் கோவையில் தீவிரவாதிகள் பிடிபட்டார்கள். அவர்கள மீது கடும் நடவடிக்கை எடுத்தோம். தீவிரவாத இயக்கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தோம். எனது ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகள், பயங்கர வாதிகள், தீவிரவாதிகள் தமிழ் நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கவே அஞ்சினார்கள்.

அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் இருந்து பயங்கர வாதிகளையும் தீவிரவா திகளையும் விரட்டியடித்தோம். காவல்துறை என்பது எனது ஆட்சியில் கட்டுக் கோப்பாக இருந்தது. பயங்கர வாதம், தீவிரவாதம் என் பது கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

இன்று நிலைமை என்னப காவல்துறை என்பது நிலை குலைந்து, ரவுடிகளின் முன்னே கைகட்டி நிற்கிறது. பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். விடுத லைப்புலிகள் மீண்டும் ஊடு ருவி அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். மக்கள் இந்த சூழ் நிலையை கவலையுடன் கவ னிக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்ட ஒருவர், சீருடை தைத்துக் கொடுத்த ஒருவர், இன்று மத்திய அமைச்சராகவே ஆகிவிட்ட பின் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கத் தான் செய்யும்.

மக்களை காக்க வேண்டிய அரசு, பயங்கர வாதிகளையும், தீவிரவாதிகளையும், ரவுடி களையும் பாதுகாப்பது தான் இன்றைய ஆட்சியின் அவலம். மக்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

நன்றி>maalaimalar.com

புதன், ஜனவரி 24, 2007

தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்கள்.

- பின்னணியில் மருத்துவர்கள் -
தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர்.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்கு பழக்கமானவர் மல்லிகா. கடன், வறுமையில் சிக்கித் தவித்த மல்லிகை திடீர் வசதியான ராஜியை சந்தித்து' பணம் சம்பாதிக்க ஏதாவது வழி உண்டா?' என்று கேட்டுள்ளார். அப்போது தான் சிறுநீரக விற்பனை குறித்து ராஜி கூறியுள்ளார். முதலில் பயந்த மல்லி வறுமையின் பிடியில் இருந்து மீண்டு வர, சிறுநீரக புரோக்கர் ராஜியுடன் திருச்சிக்கு சென்றார். திருச்சி புரோக்கர் மல்லிகாவை மதுரைக்கு அழைத்துச் சென்றார். மதுரை சிவகங்கை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மல்லிகா. மருத்துவமனையில் மல்லிகாவின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் இருந்த மற்றொரு இலங்கை நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீரக புரோக்கர் ராஜி பேசிய தொகையை கொடுக்காதது குறித்து பொலிஸில் புகார் கொடுத்தார் மல்லிகா. அவ்வழக்கு மாநில குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.பி.சி.ஐ.டி.,) மாற்றப்பட்டது. சிறுநீரகத்தை விற்பனை செய்த மல்லிகா வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி., பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நடந்துள்ள சிறுநீரக மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

சிறுநீரக மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜி சி.பி.சி.ஐ.டி., பொலிஸாரிடம் சிக்கினார். பொலிஸில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

காசிமேடு குப்பத்தில் வசித்து வருகிறேன். எனது முதல் மனைவி லட்சுமி. இரண்டாவது மனைவி அஞ்சலை. நான்கு குழந்தைகள் உள்ளனர். இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறேன். போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை காப்பாற்ற சிரமப்பட்டேன். இந்நிலையில் தான் திருச்சியைச் சேர்ந்த சிறுநீரக தரகர் சீனி பாய் என்பவர் என்னை அணுகினார். திருச்சி, புரோக்கருடன் மதுரைக்கு சென்ற நான் 2003 ஆம் ஆண்டு எனது சிறுநீரகத்தை வேறு ஒருவருக்கு கொடுத்தேன். அதில் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதேபோல், 2004 இல் எனது மனைவி லட்சுமியின் சிறுநீரகத்தை, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேறு ஒருவருக்கு கொடுத்தேன். அதில் 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. எண்பதாயிரம் ரூபாய் பணத்தில் பெட்டிக் கடை நடத்தி வருகிறேன். மல்லிகாவிடம் சிறுநீரகத்தை கொடுக்கச் சொல்லி நான் வற்புறுத்தவில்லை. வறுமையில் இருந்த மல்லிகாவுக்கு நான் உதவி செய்வதற்காக அவருடன் திருச்சி சென்றேன். திருச்சி புரோக்கர் தான் எங்களை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு ராஜி தெரிவித்துள்ளார்.

ஐந்து இலட்சத்துக்கு சிறுநீரகம் விற்பனை:

சிறுநீரகம் பாதிப்படைந்த வெளிநாட்டினர். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஐந்து இலட்சம் வரை புரோக்கர்களுக்கு கொடுத்துள்ளனர். மீனவ பெண்களை ஏமாற்றி முப்பதாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை தரகர்கள் சிலரும் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை மருத்துவமனை டாக்டர்களும், முக்கிய தரகர்கள் சிலரும் பகிர்ந்துள்ளனர். சிறுநீரக தரகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட டாக்டர்களுக்கும் சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் வலை விரித்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனைகளில் இருந்து எக்ஸ்ரே உட்பட முக்கிய ஆவணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

thanks> thinakkural.com

செவ்வாய், ஜனவரி 09, 2007

திமிர் பிடித்த சென்னை இமிகிரேஷன் அதிகாரி.

சென்னை: சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் மிகவும் கடுமையாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட குடியுரிமை (இமிகிரேஷன்) அதிகாரிகளுக்கு எதிராக விமான பயணிகள் ஒன்று திரண்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

துபாயில் உள்ள பிரிட்டிஷ் ஆயில் நிறுவனத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள் கிளிண்டன், பெத்தேல் தம்பதியினர். அவர்கள் தங்களது மகள் கெல்லி யுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட சென்னை வந்தனர்.

பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டில் கிறிஸ்துமஸைக் கொண்டாடி விட்டு பெத்தேலும், கெல்லியும் துபாய் திரும்ப இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர். சனிக்கிழமையன்று டிக்கெட் உறுதி செய்யப்படாததால், ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் வந்தனர். அவர்களுடன் உறவினர் சரவணனும் வந்தார்.

இரவு 8 மணி விமானத்தில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் குடியுரிமை சோதனைப் பிரிவுக்கு பெத்தேலும், கெல்லியும் சென்றனர். பெத்தேலிடம் சோதனை நடத்திய குடியுரிமை அதிகாரி ஒருவர் அவரை கேலி செய்ததாக தெரிகிறது. மேலும் தரக்குறைவாகவும் அவர் பேசியுள்ளார்.

இதையடுத்து பெத்தேல் அதிர்ச்சி அடைந்து அந்த அதிகாரியைக் கண்டித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. பெத்தேலுக்கு ஆதரவாக சக பயணிகளும் குரல் கொடுத்தனர்.

பெத்தேல் திட்டியதால் ஆத்திரமடைந்த குடியுரிமை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், கேலி செய்த குடியுரிமை அதிகாரிக்கு ஆதரவாக திரண்டனர்.

விமான நிலைய மேலாளர் ஏழுமலையிடம் சென்ற அவர்கள், பெத்தேலை விமானத்தில் ஏற்றக் கூடாது என்று வலியுறுத்தினர். அவர்களின் மிரட்டல் கலந்த வலியுறுத்தலுக்கு பணிந்த ஏழுமலை, பெத்தேலை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்தார். பெத்தேல், கெல்லியின் உடமைகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெத்தேல், போலீஸில் புகார் கொடுக்கப் போவதாகவும், இங்கிலாந்து தூதரகத்தில் புகார் செய்து பெரிய பிரச்சினையாக்கப் போவதாகவும் ஆவேசமாக கூறினார். இதனால் பயந்து போன விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர்.

இதையடுத்து அவர்களை பயணம் செய்ய அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து பெத்தேலும் அவரது மகளும் விமானத்திற்குள் ஏறி அமர்ந்தனர். விமானம் கிளம்ப தயாராக இருந்தபோது, குடியுரிமை அதிகாரிகள் சிலர் விமானத்திற்குள் ஏறி பெத்தேலையும், கிள்ளியையும் வலுக்கட்டாயமாக கீழே இறக்க முயற்சித்தனர்.

பெண் என்றும் பாராமல் குடியுரிமை அதிகாரிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதைப் பார்த்து, விமானத்தில் இருந்த அத்தனை பயணிகளும் ஒன்று திரண்டு குடியுரிமை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பெத்தேலை கீழே இறக்கினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அனைவரும் கீழே இறங்கி விடுவோம் என ஆவேசமாக கூறவே குடியுரிமை அதிகாரிகள் அரண்டு போயினர்.

அதேபோல விமான பைலட், ஏர்லைன்ஸ் ஊழியர்களும் குடியுரிமை அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பெத்தேல், கெல்லியை கீழே இறக்க மாட்டோம் என தெரிவித்து விட்டு திமிர் பிடித்த குடியுரிமை அதிகாரிகள் விமானத்தை விட்டு இறங்கினர். அதன் பின்னர் சுமார் 4 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் நள்ளிரவு 12.15 மணிக்கு விமானம் கிளம்பிச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் குடியுரிமைத் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2007/01/08/airport.html
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us