வெள்ளி, ஏப்ரல் 01, 2011

தமிழகம் கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி

புதுதில்லி,மார்ச் 31: தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக - தேமுதிக - கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - ஹெட்லைன்ஸ் டுடே - மெயில் டுடே - ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆட்சியைப் பிடிக்கும், அசாமில் எந்தக் கட்சிக்கும் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்தும், இப்போதைய பிரச்னைகள் தொடர்பாக சில கேள்விகளுக்கு வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையிலும் இந்தக் கணிப்பு நடைபெற்றுள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், விலைவாசி உயர்வு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் - அதிகாரிகள் நிலையில் காணப்படும் ஊழல் போன்ற காரணங்களால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பில் பங்கு கொண்டவர்களில் பெருவாரியானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் 51% பேர் ஊழலை முக்கிய பிரச்னையாகக் கருதுகின்றனர். 34% பேர் அது பெரிய பிரச்னை இல்லை என்கின்றனர்.முதல்வர் பதவிக்கு ஏற்றவர் ஜெயலலிதாவே என்று 37% பேரும் கருணாநிதியே என்று 34% பேரும் கருதுகின்றனர்.கருணாநிதியின் அரசுதான் ஊழல் மிகுந்தது என்று 39% பேரும் ஜெயலலிதாவின் அரசுதான் ஊழல் அரசு என்று 21% பேரும் கூறினர்.அலைக்கற்றை ஊழல் குறித்து தெரியும் என்று 51% பேரும், தெரியாது என்று 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி குடும்பத்தாருக்குத் தொடர்பு உள்ளது என்று 38% பேரும் இல்லையென்று 26% பேரும் நினைக்கின்றனர்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்த விவகாரத்தை சரியாகக் கையாள கருணாநிதி அரசு தவறிவிட்டது என்று 41% பேரும் சரியாகத்தான் கையாண்டது என்று 25% பேரும் கருதுகின்றனர். விலைவாசி உயர்வு தங்களை பாதிக்கும் பிரச்னை என்று 59% பேரும், இது முக்கிய பிரச்னையே இல்லை என்று 29% பேரும் கருத்து தெரிவித்தனர்.

2009 மக்களவை பொதுத் தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு அடிப்படையில் ஹெட்லைன்ஸ் டுடே ஓஆர்ஜியின் கருத்துக் கணிப்பு முடிவு வருமாறு:2009 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 37% வாக்குகள்தான் கிடைத்தன, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 43% வாக்குகள் கிடைத்தன.இப்போது நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 50% வாக்குகளும் 164 தொகுதிகளும் கிடைக்கும்.திமுக கூட்டணிக்கு 45% வாக்குகளும் 68 தொகுதிகளும் கிடைக்கும்.மற்றவர்களுக்கு 5% வாக்குகளும் 2 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு 44% வாக்குகளும் 182 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கிடைக்கும். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு 43% வாக்குகளும் 101 தொகுதிகளும் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 11 தொகுதிகளும் கிடைக்கும்.கேரளம்: கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 48% வாக்குகளும் 96 தொகுதிகளும் கிடைக்கும்.மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு 40% வாக்குகளும் 41 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 12% வாக்குகளும் 3 தொகுதிகளும்தான் கிடைக்கும்.

அசாம்: அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 32% வாக்குகளும் 46 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் கண பரிஷத் கட்சிக்கு 25% வாக்குகளும் 38 தொகுதிகளும்தான் கிடைக்கும்.பாஜகவுக்கு 12% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 14% வாக்குகளும் 15 தொகுதிகளும்தான் கிடைக்கும். மற்றவர்களுக்கு 16% வாக்குகளும் 12 தொகுதிகளும் கிடைக்கும். எனவே அசாமில் இழுபறி நிலைமை ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அவுட்லுக் - எம்டிஆர்ஏ கணிப்பு: 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் - பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4% பேரும் அதிமுக -தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54% பேரும் மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்று 8.6% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

-தினமணி .
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us