வெள்ளி, ஜூன் 15, 2007
'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி!!!
ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டால் என்ன நிகழும்.... கீழே விழும். ஆனால் ரஜினி சுண்டிவிட்டால் மட்டும் கோடி கோடியாய் பணம் கிடைக்கும். 'சிவாஜி'யில் ஷங்கர் காட்டியிருக்கும் மேஜிக் இதுதான்.
சாப்ட்வேர் துறையில் சம்பாதித்த 200 கோடி ரூபாயுடன் தாய்நாட்டுக்கு வந்திறங்கும் ரஜினி, இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவி ஏழைகளுக்கு உதவ எண்ணுகிறார். இதற்காக இத்துறையில் அனுபவமுள்ள சுமனின் உதவியை கேட்கிறார்.
உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தில் விஷத்தையும் வைத்திருக்கும் சுமனோ ரஜினியின் திட்டம் தனது பிழைப்பில் மண்ணை போட்டுவிடும் என்பதால் அவரை கவிழ்க்க சகுணி வேலைகளில் ஈடுபடுகிறார். சுமனின் நயவஞ்சக புத்தியை புரிந்துகொள்ளும் ரஜினி, சுமனின் மிரட்டலுக்கு அடிபணியாமல் சொந்த முயற்சியால் தனது லட்சியத்தை நிறைவேற்ற முயல்கிறார்.
வில்லன் சுமன் சும்மா இருந்துவிடுவாரா? தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆப்பு மேல் ஆப்பு வைக்க ஆடிப்போகிறார் ரஜினி. சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து கையில் ஒற்றை ரூபாயுடன் தெருவில் நிற்கும் ரஜினி 'இதைவைத்தே சாதித்து காட்டுகிறேன்...' என்று நாணயத்தை சுண்டிவிட இடைவேளை.
அதன்பிறகு பிறகு ரஜினி போராடுவார், வில்லன் சுமனின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவார், கடைசியில் ஜெயிப்பார் என்ற வழக்கமான சினிமா பார்முலாவுக்கு உத்திரவாதம் தருகிறது படம்.
எடுத்தவுடனேயே முகத்தை காட்டிவிடக்கூடாது என்னும் ஹீரோயிச பில்டப்புடனேயே இதிலும் காட்டப்படுகிறார் ரஜினி. மேக்கப்மேனின் உபயத்தில் ரஜினியிடம் பத்துவருடத்திற்கு முந்திய இளமை. ரம்யாகிருஷ்ணன் பாணியில் சொல்லப்போனால் 'வயசானலும் ஸ்டைலும் அழகும் ரஜினியைவிட்டு இன்னும் போகல...'
சுமனின் சதியால் ஓட்டாண்டியாகி திரும்புவதிலிருந்து ரஜினியின் நடிப்பும் வேகமும் ரசிகர்களுக்கு தீனிபோடுகிறது. டீக்கடை பெஞ்சில் சுமனை உட்கார வைத்து பேசுவது, கறுப்புபணத்தை வெள்ளையாக்கி வெளிநாட்டிலிருந்து மொட்டை கெட்டப்பில் திரும்புவது, ஸ்ரேயா வீட்டில் மிளகாய் தின்றுவிட்டு காரம் தாங்காமல் கத்துவது என நிறைய இடங்களில் ரசிக்கவைக்கிறார். காதை பஞ்சராக்கும் பஞ்ச் டயலாக்குகள் இல்லாத ரஜினியை பார்ப்பது ஆறுதல்.
ரஜினியை தன்பின்னால் சுற்ற வைக்கும் அழகு மலராக ஸ்ரேயா. கணவனின் (சிவாஜி) உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்று துடிக்கும் காட்சியில் மட்டும் முகம் காட்டுகிறது நடிப்பு. மற்ற இடங்களில் காட்டுகிறார் இடுப்பு.
ரஜினியின் மாமனாக விவேக். காமெடி செய்வதாக நினைத்து கடுப்பேற்றுகிறார். குண்டு பெண்மணியை பார்த்து 'பங்களா வருது பார்...' என்பதும் அமைச்சரின் பி.ஏ. வாக வருபவரிடம் 'மனைவின் ரேட்' என்ன என்பதுமாக சுஜாதாவின் இரண்டாம் தர எழுத்துகளை டப்பிங் செய்திருக்கிறார்.
சுஜாதாவின் எழுத்தென்னும் போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. 'சாகிற நாள் தெரிந்சிடுச்சுன்னா வாழுற நாளெல்லாம் நரகமாயிடும்' இந்த வசனம் மட்டுமே சுஜாதாவின் ஆளுமையை காட்டுகிறது.
ரொம்ப நாளைக்கு பிறகு வில்லனாக தரிசனம் தரும் சுமனின் நடிப்பும் பிரமாதம் என்ற வகையறாவில் சேர்க்கமுடியாது. தமிழ்சினிமா வில்லன்களின் தலையெழுத்தே சுமனிடமும் எழுதப்பட்டுள்ளது. ரஜினி 200 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும்போது அவரை ஆட்டிவைக்கும் சுமனின் பலம், ரஜினி சாதாரண ஆளாகி எதிர்க்கும்போது பவர் கட்டாவது ஏனோ?
கே.வி. ஆனந்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பாளர் செய்திருக்கும் செலவு பளிச்சிடுகிறதே தவிர பாராட்டும்படியான தனித்துவம் தென்படவில்லை. டிரைவின் தியேட்டரில் சண்டை காட்சி, பிரம்மாண்ட செட்டில் பாடல்களை படம்பிடித்த இடங்களில் உழைப்பு தெரிகிறது.
ரஜினி, நயன்தாரா ஆடும் பாடல்காட்சியின் பின்னணியில் தொழில்நுட்ப உதவியுடன் செயற்கை பசுமையை காட்டுவது ரசிக்கும்படி இல்லை.
'சஹாணா சாரலில்....'செவிகளை இனிக்க வைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையில் தன் மீதான கவனத்தை திருப்பியதாக தெரியவில்லை.
'இலவச கல்வி, இலவச மருத்துவத்துடன், கறுப்பு பணமில்லாத தேசமே நாட்டின் வளத்தை மேம்படுத்தும்.' படத்தில் ஷங்கர் சொல்லவரும் கருத்து இதுதான். படம் பார்ப்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற இயக்குனரின் எண்ணம் வரவேற்கக் கூடியதே. ஆனால் அதனை சொல்ல வேண்டிய விதத்திலிருந்து விலகிப்போய் வேறொரு தடத்தில் பயணிப்பதால் சொல்லவரும் கருத்தின் உருவம் மங்கி ரஜினி என்ற நடிகர் என்ன செய்திருக்கிறார் என்ற மாய பிம்பமே மனதில் வேரூன்றுகிறது.
வில்லனால் ரஜினி பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருவாயிலேயே ஸ்ரேயாவுடனான காதல் காட்சிகளும், காமெடிகளும் கதையின் சீரியஸை அனாதையாக்கி விடுகிறது.
"பகட்டு இல்லாத பாசாங்கு செய்யாத சினிமா எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் சில சூழல்கள் என்னை பிரம்மாண்டத்திற்குள் தள்ளிவிட்டது," என்பது போன்ற கருத்துடன் பேட்டிகளில் தனது ஆசையை சொல்லியிருக்கும் ஷங்கர், தொடர்ந்து அந்த பள்ளத்துக்குள் பதுங்கியிருக்கவேண்டாம் என்பதுதான் நமது ஆசையும்.
'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி சினி சவுத்தில் இருந்து.....
சவுதி அரேபியாவில் இரண்டு சிங்களவர்களுக்கு ஆயுள் தண்டனை!
சவுதி அரேபியா, ஜெத்தாவில் கடந்த ஏப்ரல் மாதம் அரேபியப் பெண்ணொருவரின் நகைகளைக் கொள்ளையிட முயன்ற இரண்டு சிங்களவர்களுக்கும், மற்றொரு இந்தியருக்கும் கொலை முயற்சிக் குற்றத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேலும் ஐந்து சிங்களவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும், 500 சாட்டை அடியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இந்தத் தகவலை அறிவித்துள்ளது.
பதிவில் இருந்து.....
அத்துடன், இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேலும் ஐந்து சிங்களவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும், 500 சாட்டை அடியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இந்தத் தகவலை அறிவித்துள்ளது.
பதிவில் இருந்து.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us