புதன், ஜூன் 06, 2007

ஆதாம் ஒரு முஸ்லீமா?

இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது!

இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய `முஸ்லிம் பூர்வீகம்' நூலின் நான்காவது அறிமுக விழா அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

`எழுவான்' வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் அதன் தவிசாளர் ஆசுகவி அன்புடீன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அங்கு முபாறக் அப்துல் மஜீத் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"விண்ணுலகில் இறைவனால் படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்கள் முதலில் இலங்கைக்கே அனுப்பப்பட்டார்கள். அந்த முதல் மனிதன் இலங்கையில்தான் தோன்றினார் என்பதை வரலாறும் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால், அந்த முதல் மனிதன் முஸ்லிம் என்பதால் எமது பூர்வீகம் இலங்கையில்தான் ஆரம்பிக்கிறது. இந்த தேசத்தில் தோன்றிய முதல் மனிதன் ஆதம் - முஸ்லிம் என்பதால் இந்த மண் முஸ்லிம் சமூகத்திற்கே சொந்தமானதாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் நாம் அப்படி உரிமை கொண்டாடவில்லை. சகல இனத்தவரையும் சகோதரர்களாகவே பார்க்கிறோம். எவரையும் குரோத மனப்பாங்குடன் நோக்கவில்லை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளின் விஷமப் பிரசாரத்தை முறியடிப்பது அவசியமாகும்.

அதற்கு எமது வரலாறு பற்றிய தெளிவு எம்மிடம் இருக்க வேண்டும். நாம் இந்த நாட்டின் வந்தேறு குடிகளா அல்லது எமது பாரம்பரிய பூர்வீகத் தாயகமா? இங்கு எமக்கிருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பில் தர்க்கரீதியாக வாதிடும் ஆற்றல் எம்மிடையே உருவாக வேண்டும்.

முஸ்லிம் சமூகம் வாசிப்புத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால்தான் இவை பற்றிய போதிய அறிவு எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இருக்கிறது. இதனால் எம்மை மாற்று சமூகத்தினர் அடிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அறிவுபூர்வமான எழுத்துகளை வாசிப்பதற்கு சமூகம் தயாரில்லை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தமது வாசிப்பை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இது மிகவும் கவலை தரும் விடயமாகும், இவ்வாறான சமூகத்தினர் மத்தியில் தனி ஊடகம் ஒன்றை செயற்படுத்துவதற்கான ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.

முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பில் ஒரு தெளிவான பார்வையை சகோதரர் நூநுல்ஹக் செலுத்தியிருக்கிறார். நுனிப்புல் மேய்வது போல அல்லாமல் ஆய்வு ரீதியாக எழுதும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவருடைய எழுத்துகள் ஆழமான கருத்துகளைக் கொண்டவை என்பது மாத்திரமல்ல ஆதாரபூர்வமானவையாகவும் அமைந்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பற்றிச் சொல்லக் கூடிய நூல்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில் நூறுல்ஹக் `முஸ்லிம் பூர்வீகம்' நூலை வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொரு விடயமாகும். முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை அவர் மிகத் தெளிவாக தைரியத்துடன் விவரித்துள்ளார்" என்றார்.

இவ்வைபவத்தில் தெ.கி.பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச்.காவிதீன், மாவட்டநீதிபதி கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர், காதி நீதிவான் சம்சுதீன் மௌலானா, முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பீர்முஹம்மட் தம்பி, பிரதேச செயலாளர் யூ.எவ்.நியாஸ், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, அமைச்சர் அதாவுல்லாவின் பொதுஜனத் தொடர்பு அதிகாரி ஏ.பி.தாவூத், விரிவுரையாளர் எஸ்.எம்.அய்யூப், கலையன்பன் எஸ்.எம்.ஏ.அஸீஸ், தேசிய முஸ்லிம் கவுன்ஸில் உபதலைவர் எம்.ஐ.எம்.இஸ்திகார் உட்பட மற்றும் பல பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
தினக்குரல் இல் இருந்து.....
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us