திருவனந்தபுரம்: பெங்களூரில் ஒற்றைக் கண் சிவராஜனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடிப்படையினர் திட்டமிட்ட நேரத்தில் நுழைவதை சிறப்பு விசாரணைப் படைத் தலைவர் கார்த்திகேயன் தடுத்து விட்டதால்தான் அவர்களை உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக அந்த அதிரடிப் படையில் இடம் பெற்றிருந்த முன்னாள் ராணுவ மேஜர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் விசாரித்தார். தற்போது கார்த்திகேயன் தனக்கு நல்ல பெயர் வாங்குவதற்காக எடுத்த ஒரு நடவடிக்கையால், சிவராசனையும், சுபாவையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக முன்னாள் ராணுவ மேஜர் ரவி என்கிற ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேஜர் ரவி தற்போது திரைப்பட இயக்குநராக உருவெடுத்துள்ளார். அரண் என்கிற படத்தை இயக்கியவர்தான் இந்த ரவி. தற்போது சிவராசன்-சுபாவை அதிரடிப்படையினர் முற்றுகையிட்ட நேரத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மிஷன் 90 டேஸ் என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார்.
கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு விசாரணைப் படையில் இடம் பெற்றிருந்த அதிரடிப்படையில் மேஜர் ரவியும் இடம் பெற்றருந்தார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ரவி கூறுகையில், சிவராசனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டை கமாண்டோ படையினர் முற்றுகையிட்டனர். உள்ளே புகுந்து அவர்களை உயிருடன் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.
ஆனால் அந்த சமயத்தில் கார்த்திகேயன் ஹைதராபாத்தில் இருந்தார். தான் வரும் வரை யாரும் உள்ளே நுழைய வேண்டாம் என அவர் உத்தரவிட்டார். இதனால் எங்களால் நடவடிக்கையில் இறங்க முடியவில்லை.
கிட்டத்தட்ட 36 மணி நேரம் நாங்கள் கார்த்திகேயனுக்காக காத்திருக்க நேரிட்டது.
திட்டமிட்டபடி நாங்கள் வீட்டுக்குள் புகுந்திருந்தால் இருவரையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். ஆனால் தான் நேரடியாக களத்தில் இறங்காமல், மற்றவர்கள் சிவராசன், சுபாவை பிடித்து விட்டால் தனக்கு பெயர் கிடைக்காமல் போய் விடுமே என்ற கார்த்திகேயனின் சுயநலம் காரணமாக இருவரையும் நாங்கள் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டது.
நாங்கள் வீட்டை முற்றுகையிட்ட சமயம் அங்கு 10 காவல்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் 3 பேர் டிஐஜி அந்தஸ்து படைத்தவர்கள். இவர்களில் யாரிடமாவது வீட்டுக்குள் நுழையுமாறு கூறி இருவரையும் உயிருடன் பிடிக்க கார்த்திகேயன் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.
முக்கிய வேலை காரணமாகவே தான் ஹைதராபாத் சென்றிருந்ததாக தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார் கார்த்திகேயன். சிவராசன், சுபாவை விட அந்த சமயத்தில் வேறு வேலை அவருக்கு முக்கியமாகப் போய் விட்டதா? என்று கேட்டுள்ளார் ரவி.
ரவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-தற்ஸ் தமிழ்