சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுவது அமெரிக்க மற்றும் விடுதலைப் புலிகளின் கூட்டுச் சதி என்று விஸ்வ இந்துப் பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.
ராமர் பாலம் இடிக்கப்படுவதைக் கண்டித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் விஸ்வ இந்துப் பரிஷத் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதன்போது இக்கருத்தை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆயம் இத்திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தபோதிலும் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்தும், மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு கூறியிருந்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறிராமர் பாலம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மேலும் ராமர் பாலம் இடிக்கப்படுவதால் திருகோணமலை அருகே உள்ள புல்மோட்டைப் பகுதியில் கனியவள இல்மனைட் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் அதனை இடிப்பதற்கு விடுதலைப் புலிகளும் சதி செய்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு அவசர அவசரமாக ராமர் பாலத்தை இடிக்க முயற்சி செய்து வருகின்றது. இதனால் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார். (க9)
நன்றி - சுடர் ஒளி