வெள்ளி, பிப்ரவரி 27, 2009

விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி?

இன அழிவைத் தடுக்குமாறு தமிழர்கள் பேரணிகள் நடத்த, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு சொல்கின்றது உலகம். உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது என்கின்றனர் விடுதலைப் புலிகள். போரும், இனப்படுகொலையும் தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் தி.வழுதி.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த முழு உலகமும் முனைப்புப்பெற்று நிற்கின்றது என்பது எம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம்.
 
ஆனால் - தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உரிய சகல அருகதைகளையும் பெற்ற ஒரு இயக்கத்தை அழிப்பதற்கு இந்த உலகம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது எதற்காக...?
 
சுருக்கமாகச் சொல்வதானால் - உலகத்தைப் பொறுத்த வரை - 'இது ஒரு தவறான முன்னுதாரணம்.'
 
'ஹல்க்' என்ற ஆங்கிலப் படத்தின் ஒரு காட்சியில் - மிக நல்லவனாக இருந்த போதும், மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி பெற்றவனாக வளர்ந்து விட்ட தனது மகனை அழிக்க உலகம் ஏன் விடாப்பிடியாக முயற்சிக்கின்றது என்பதை தந்தை ஒரே வரியில் சொல்கிறார்: "He is unique; this world couldn't tolerate him" ("அவன் தனித்துவமானவன்; இந்த உலகத்தால் அவனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.")
 
எமது கதையும் இதுதான்.
 
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் - பெரிதும் அறியப்படாத ஒரு மிகச் சிறிய மக்கள் இனத்திற்குள் இருந்து - உருவாகிய ஒரு இயக்கம், உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு முன்னுதாரணமாக ஆகி, தனித்துவமாய் எழுந்து நிற்பதை இந்த உலகத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
 
உலகத்தைப் பொறுத்தவரை - புலிகள் இயக்கம் தமக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லாத போதிலும், புலிகளின் இந்த வளர்ச்சி தமது நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு 'தவறான முன்னுதாரணம்.'
 
எனவே, விடுதலைப் புலிகளை அழித்து விடுவதற்கு முடிவு செய்து விட்டார்கள்.
 
எமது பங்கிற்கு, வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்களும் விடுதலைப் புலிகள் தொடர்பாகப் பேசுவதனை தவிர்க்க முடிவெடுத்து விட்டோம்.


அவுஸ்திரேலியாவில் தமிழர் பேரணி - 05.02.09

விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு மேற்குலகம் சொன்னதையிட்டோ, ஆயுதங்களைக் கைவிடுமாறு இந்தியா சொன்னதையிட்டோ அவற்றின் மீது எனக்கு அவ்வளவாகக் கோபம் வரவில்லை. மேற்குலகிடமும், இந்தியாவிடமும் வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்...?
 
கடந்த ஏழு வருடங்களாக - படிப்படியாகத் தமது சுயரூபத்தைக் காட்டி எம்மைச் சீரழித்தது அவர்கள் தானே.
 
இந்தியா எங்கள் தலைகள் மீது நிகழ்த்தும் திருவிளையாடல்கள் தொடர்பாக ஏற்கெனவே நான் சற்று எழுதிவிட்டதால், ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும் என சிதம்பரம் சொன்னதற்காக ஆச்சரியப்படவோ, அது தொடர்பாக இன்னும் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்கவோ விரும்பவில்லை.
 
விடுதலைப் புலிகளை சரணடையுமாறு மேற்குலகம் சொன்னதையிட்டுத் தான் நாம் சற்று யோசிக்க வேண்டும்.
 
மேற்குலகம் அவ்வாறு சொன்னதையிட்டு தமிழர்களில் பெரும் பகுதியினருக்கு கோபம். ஆனால், அவ்வாறு கோபப்படுவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.
 
நாம் உண்மையில் கோபப்பட வேண்டியது எம் மீதே தான்.
 
மேற்குலகின் போக்கிற்கு இடமளித்து - விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக வாய் திறந்து பேசுவதனை நாம் தான் இவ்வளவு காலமாகத் தவிர்த்து வந்தோம்.

தமிழீழத்தின் 80 வீதமான நிலத்தை விடுதலைப் புலிகள் ஆளுகை செய்த காலத்தில் - வீதிகளில் இறங்கி, "விடுதலைப் புலிகள் தான் எம் அரசியல் பிரதிநிதிகள்" என்று நாம் முழங்கியிருக்க வேண்டும்; "தமிழீழத் தனியரசுக்கான எமது போராட்டத்தை அங்கீகரியுங்கள்" என மேற்குலக அரசுகளை வற்புறுத்தியிருக்க வேண்டும்.
 
அதனை விடுத்து விட்டு, நாம் என்ன செய்தோம்...?
 
விடுதலைப் புலிகளின் பெரும் இராணுவ வெற்றி ஒன்றிற்காக கடந்த இரண்டு வருடங்களாகக் காத்திருந்தோம்.
 
பெரும் போர் வெற்றியைப் படைத்து - தமிழீழத்தை எடுத்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து விடுதலைப் புலிகள் எமக்குத் தருவார்கள் என்று நாம் பார்த்திருந்தோம்.
 
விடுதலைப் புலிகளை ஏதோ "பந்தயக் குதிரைகள்" போல கருதி - நாம் கொடுத்த பணத்துக்கு எமக்காகப் போராடி விடுதலைப் புலிகள் நாட்டைப் பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசுவதற்கு மறுத்தோம்.
 
இன்னொரு பக்கத்தில் - இந்தப் பேராசையாலும், எதிர்பார்ப்பாலும் - விடுதலைப் புலிகளின் போர் வெற்றி ஒன்று தொடர்பான அதீத நம்பிக்ககையில் மயங்கி, வெறும் சில்லறை வேலைகளில் மினக்கெட்டோம்.
 
போராட்டத்திற்கு அடிப்படையான அரசியல் விவகாரங்களைப் பேசுவதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டும், விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவதில்லை என்ற முடிவையும் ஒரு "தந்திரோபாயமாக" எடுத்துவிட்டும், வெறும் "மனிதாபிமானப்" பிரச்சினைகளைப் பேசிக்கொண்டும் மேற்குலகில் போராட்டங்களை நடத்தினோம்.
 
விளைவு - 2004 ஆம் ஆண்டில் சோனியா அம்மையார் அதிகாரத்தை எடுத்த பின், போரை நடத்தும் வேலையை இந்தியாவிடம் விட்டுவிட்டது மேற்குலகம் -
 
இப்போது - தமிழர் சீரழிந்து பேரவலப்படும் போது - நல்ல பிள்ளை வேடம் காட்டி - தமிழர் மீது அன்பானவர்கள் போல நடித்து - "மக்களைக் காப்பதற்காக" புலிகளைச் சரணடையச் சொல்கின்றது.
 
தமிழரைச் சீரழிக்கும் வேலையை மேற்குலகிடம் இருந்து தாம் பொறுப்பெடுத்த இந்தியாவோ - விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால், தாம் தலையிட்டு "மக்களைக் காப்பதாக" வாக்குறுதிகள் வழங்குகின்றது.
 
விடுதலைப் புலிகளை ஆதரித்த நாங்களோ -
 
80 வீதமான நிலத்தை ஆளுகை செய்து விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த போது சும்மா இருந்தவிட்டு - இப்போது, வெறும் 5 வீதமான நிலத்திற்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்ட பின்பு ஏமாற்றமடைந்து - அவர்களைச் சரணடையச் சொன்னதற்காக மேற்குலகத்தின் மீது கோபப்படுவதில் அர்த்தம் எதுவுமில்லை.
 
எங்களில் இன்னொரு சாராரோ - இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகள் தொடர்பாக புகழ் சொல்லிவிட்டு, இப்போது குறைகள் தேடி புறம் பேசவும் தொடங்கி விட்டார்கள்.
 
அது மட்டுமல்லாது -
 
அந்த "இன்னொரு சாரார்", விடுதலைப் புலிகளை எப்போதும் விமர்சித்தவர்களுடன் இப்போது சேர்ந்துகொண்டு - விடுதலைப் புலிகளின் கதை இனி முடிந்தேவிட்டது என இப்போது நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.
 
"ஐயோ! சிங்களவன் எம்மை இனப்படுகொலை செய்கின்றான்!" என்று கூவி இந்த உலகத்தின் முற்றத்தில் நாம் கதறி அழுதால் - எம்மைக் காக்க எல்லோரும் ஓடோடி வருவார்கள் என்று நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.
 
இதுவரை காலமும், "நேரம் வரும்போது" விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசலாம் என்று சாட்டுக்கள் சொல்லி வந்தவர்கள் - இப்போது - விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசாமலேயே தமிழரின் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.
 
ஐயா பராக் ஒபாமாவின் செல்வாக்கும், ஐக்கிய நாடுகள் சபை வைக்கும் பொது வாக்கெடுப்பும் (Referendum) தமிழருக்கு விடுதலையை வாங்கித் தந்துவிடும் என்று நம்பவும் வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.


கனடாவில் தமிழர் பேரணி - 17.02.09

ஆனால் -
 
எல்லாப் பழியையும் இவ்வாறாக வெளிநாட்டுத் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீது மட்டும் போட்டு விடவும் முடியாது.
 
வெளிநாட்டுத் தமிழ்ச் செயற்பாடுகளை உரிய முறையில் அரசியல் மயப்படுத்தும் தமது தலையாய கடமையில் இருந்து, விடுதலைப் புலிகளின் பரப்புரைச் செயற்பாடுகள் தவறிவிட்டன என்பதையும் இங்கே சொல்லியே ஆக வேண்டும்.

"நீங்கள் பணத்தை கொடுத்தால் போதும்; ஊரில் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள்" என்று புலம் வாழ் தமிழர்களைப் பார்வையாளர்களாக வைத்திருந்தது தான் இந்தச் செயற்பாடுகளின் மைய ஓட்டமாக இருந்த வந்தது.

இந்தவிதமான அணுகுமுறை தான் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் முன்னெடுப்புக்கள் வெளிநாடுகளில் தேவையற்றவை என்ற எண்ணத்தையும், வெளிநாட்டுத் தமிழர்களின் வெளிப்படையான அரசியல் ஆதரவுகள் இல்லாமலேயே விடுதலைப் புலிகள் போரை வெல்வார்கள் என்ற நம்பிக்கையையும், ஊரில் புலிகள் வெற்றிவாகை சூடி இந்த உலகத்தின் போக்கையே தமிழர்க்குச் சார்பாக மாற்றுவார்கள் என்ற மாயையும் புலம் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கி -
 
அவர்களை வெறுமனே அரசியலுக்கு அப்பாற்பட்ட "மனிதாபிமான" பிரச்சினைகளை மட்டும் பேச வைத்துவிட்டன.
 
உலகத் தமிழர் செயற்பாடுகளை நேர்த்தியாக ஒருங்கிணைத்து -
 
இராஜதந்திர மற்றும் அனைத்துலகப் பரப்புரைச் செயற்பாடுகளில் தெளிவான வழி நடத்தல்களை வழங்கி -
 
இன்றைய "மனிதாபிமான"ப் பிரச்சினைகள் எல்லாம் அரசியலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதைப் புரிய வைத்து -
 
அரசியலை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் புலம் வாழ் தமிழ் சமூகத்திற்குத் தெளிவுபடுத்தி -
 
அனைத்துலக ரீதியில் - எல்லா நாடுகளிலும் - ஒரே குரலில் தமிழர்களுக்கு என்ன தேவை என்ற அடிப்படையான அரசியல் கோரிக்கையை, எல்லா வழிகளிலும் தெளிவாகச் சொல்ல வைத்து -
 
தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்துலகக் குரலுக்கு ஒரு தேர்ந்த தலைமைத்துவத்தைக் கொடுக்கும் தம் பணியில் இருந்து விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயற்பாடுகள் இதுவரை தவறிவிட்டன.
 
குறிப்பாக - விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் இடப்பட்ட நாடுகளில் - தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டதன் பின்னான காலத்தில் - ஏற்பட்ட அரசியல் தலைமைத்துவ வெற்றிடங்கள் சரிவர நிரப்பப்படாமல் விடப்பட்டு விட்டன.
 
விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் போராட்டம் பற்றிய தர்க்கரீதியான - விஞ்ஞான பூர்வமான - தெளிவு ஊட்டப்படாமல், வெறுமனே "போர் வெற்றி" தொடர்பான அதீத நம்பிக்கைகள் மட்டும் மக்களுக்கு ஊட்டப்பட்டதன் விளைவு தான் -
 
துணிந்து - எவ்வித தயக்கமும் இன்றி - விடுதலைப் புலிகளை சரணடையுமாறு இன்று மேற்குலகம் சொல்வதும், விடுதலைப் புலிகள் இல்லாமலேயே எமக்கு விடுதலை எடுத்து விடலாம் என்று ஒரு பகுதித் தமிழர்கள் நம்ப தொடங்கியிருப்பதும் ஆகும்.


நோர்வேயில் தமிழர் பேரணி 04.02.09

இப்போது நாங்கள் இரண்டு விடயங்களில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
 
அந்தத் தெளிவு இல்லை என்றால் - நாம் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாமே வீணாகிவிடும்; அந்தத் தெளிவு இருந்துவிட்டாலோ - குழப்பம் இல்லாமல் இலக்குகளை நிர்ணயித்துத் தமிழர்கள் முன்னேற முடியும்.
 
1) இன்று நடக்கின்ற போரை இந்த உலகில் யாருமே தடுத்து நிறுத்தப் போவதில்லை.
 
2) விடுதலைப் புலிகளின் பீரங்கியில் இருந்து கடைசிக் குண்டு வீசப்பட்ட பின்பு, தமிழர்கள் சொல்வதனை இந்த உலகில் யாருமே கேட்கப் போவதில்லை.
 
இன்று நடப்பது இது தான்; சுருக்கமான, புரிந்து கொள்வதற்கு கடினமற்ற விடயம்:
 
விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்குலகத்தால் "பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியல் இடப்பட்டிருக்கின்றது.
 
இந்த பட்டியல்களைச் சாட்டாக வைத்துக்கொண்டு, தான் நடாத்தும் இன அழிப்புப் போரை சிறிலங்கா புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்றது.
 
அதேவேளை, வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாம் போரை நிறுத்தி போருக்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களைக் காக்குமாறு மேற்குலகத்திடம் வேண்டுகின்றோம்.
 
ஆனால், 'பயங்கரவாத' இயக்கம் ஒன்றிற்கு எதிரான போரை நிறுத்தும் படி யாருமே சிறிலங்காவுக்குச் சொல்ல முடியாது.
 
அப்படியானால் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காக்க என்ன தான் வழி...?
 
அதற்கு இருக்கும் ஒரே வழி - ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்.
 
புலிகள் சரணடைந்தவுடன் - போரும் நிற்கும், வன்னி மக்களும் காப்பாற்றப்படுவார்கள், "நடக்கின்றது!" என்று நாம் கதறும் "இனப்படுகொலை"யும் நடக்காது.
 
- இது தான் இன்றைய நிலை.
 
ஆனால் - தமிழர்களின் அரசியலில் விடுதலைப் புலிகள் பலமிழந்து போன பின்பு எமது எதிர்காலம் என்ன என்பதே எம் முன்னால் இன்று உள்ள ஒரே கேள்வி.
 
விடுதலைப் புலிகளை ஆதரிப்போர், வெறுப்போர், ஏற்றுக்கொண்டோர், நிராகரிப்போர் என யாராக இருந்தாலும் - இன்று எமக்குத் தேவையானது விடுதலைப் புலிகள் தொடர்பான ஒரு ஆழமான புரிந்துணர்வு.
 
கடந்த கலங்களில் விடுதலைப் புலிகள் எடுத்த முடிவுகள் எல்லாவற்றையும் சரியானவை என்று வாதிடுவது எனது நோக்கமல்ல.
 
அதே சமயம் - தவிர்க்க முடியாத சூழல்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும், "தவறானவை" எனக் கருதப்படக்கூடிய சில நடவடிக்கைகளை முன்னைய காலங்களில் விடுதலைப் புலிகள் எடுத்திருந்தனர் என்பதையும் மறந்துவிட முடியாது.

இப்போது நாம் செய்ய வேண்டியது - விருப்பு வெறுப்புக்களை ஒர் ஓரத்தில் வைத்துவிட்டு - யதார்த்தத்தைப் பார்க்க முனைவது.
 
பிரபாகரன் என்ற மனிதர் வாழ்கின்ற அதே சமகாலத்திலேயே நாமும் வாழ்வதால் - அவர் தொடர்பான செய்திகளையும், அவரது படங்களையும் அடிக்கடி பார்ப்பதால் - அந்த மனிதருக்கு உள்ளே இருக்கின்ற வரலாற்று நாயகனை நாங்கள் பார்க்கத் தவறுகின்றோம்.
 
சில விடயங்கள், நாம் வாழ்கின்ற அதே சமகாலத்திலேயே - சாதாரண நாளாந்த நிகழ்வுகளாய் கட்டவிழ்ந்து செல்வதால் - அந்த நிகழ்வுகளின் ஊடாக விரிந்து செல்கின்ற வரலாற்றின் பரிமாணங்களை நாங்கள் உணரத் தவறுகின்றோம்.
 
நிகழ்கால நிகழ்வுகளின் உடனடி விளைவுகளை வைத்து அவற்றுக்குத் தீர்ப்பளித்து, எதிர்கால வரலாறே அந்த நிகழ்வுகளின் தாக்கங்களைத் தீர்மானிக்கும் என்பதை உணரத் தவறுகின்றோம்.
 
ஆனால் - இந்த உலகம் அவற்றைச் சரிவர உணர்ந்து கொண்டதால் தான், இன்று  எம்மையும், எமது போராட்டத்தையும் மட்டுமல்லாமல், நாம் படைத்து வரும் தனித்துவமான இந்த வரலாற்றையும் கூட அழித்துவிட முனைப்போடு நிற்கின்றது.


சுவிசில் தமிழர் பேரணி - 20.02.09

விடுதலைப் புலிகள் இயக்கம் - தமிழர் சரித்திரம் மட்டுமல்ல, இந்த உலக சரித்திரமே கண்டிராத ஓர் ஆச்சரிய உண்மை.
 
அந்த இயக்கம் எங்கள் இனத்தில் பிறந்தது என்பதும், நாங்களே அதனை வளர்த்து எடுத்தோம் என்பதும் தமிழர்கள் ஒவ்வொருவருக்குமே பெருமை.
 
ஓர் அரசு ஆகுவதற்கு முன்னதாகவே - எல்லா முட்டுக்கட்டைகளையும் கடந்து -
 
பீரங்கிகளையும் சிறப்புப் படையணிகளையும் கொண்ட ஒரு மரபுவழித் தரைப்படையையும், பெரும் தாக்குதல் படகுகளுடன் கூடிய ஒரு அரை-மரபு வழிக் கடற்படையையும், இவற்றின் மகுடமாய் ஒரு வான் படையையும், மிகத் திறமை வாய்ந்த ஒரு புலனாய்வுத்துறையையும் கொண்டிருப்பதை விடவும் -
 
ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய அனைத்து துறைசார் அலகுகளுடனும் கூடிய - கண்ணியமும், ஒழுக்கமும் நேர்மையும் மிக்க - ஒரு நடைமுறை அரசை உருவாக்கி, பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை ஆளுகை செய்வதை விடவும் -
 
பல்லாயிரம் ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு பெரும் இனத்தினது மனக் குகைக்கு உள்ளேயே ஒரு போராட்டத்தை நிகழ்த்தி - "எம்மால் முடியும்!" என்ற நம்பிக்கையை ஊட்டி, துணிவோடு நிமிர வைத்து - ஒரு முழு இனத்தினது சிந்தனைப் போக்கையும், வாழ்வு முறையையும் மாற்றியமைத்தது தான் விடுதலைப் புலிகள் படைத்த உண்மையான வரலாறு.
 
போர் முனையில் ஏற்படும் வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால் - முன்னேற்றத்திற்கும், பின்னடைவுக்கும் அப்பால் - அவற்றுக்குப் பின்னால் படைக்கப்படுகின்ற இந்த மாபெரும் வரலாற்றை நாங்கள் உணர வேண்டும்.
 
அந்த வரலாற்றின் படைப்பாளிகளாக - அந்த வரலற்றின் அங்கமாக - தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவருமே அதனோடு இணைந்திருப்பதை நாங்கள் உணர வேண்டும்.
 
நாமே படைத்த இந்த வரலாறு சிதைந்து போக நாமே இடமளித்து விடக்கூடாது.
 
25 வருடங்களுக்கு முன்னதாக தமிழர்கள் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்காத - இனி நாங்கள் திரும்பிப் போக முடியாத - ஓர் அரசியல் உச்ச நிலைக்கு தமிழினத்தை அழைத்து வந்து விட்டார் தலைவர் பிரபாகரன்.
 
எமது தேசத்தின் 24 ஆயிரம் வரையான போர் வீரர்களின் உடலங்களையும் 100 ஆயிரம் வரையான குடிமக்களின் உடலங்களையும் கடந்து -
 
இந்த நீண்ட பயணத்தில் - அவருக்குத் துணையாக, அவருக்குப் பலமாக நாம் எல்லோரும் அவரோடு சேர்ந்தே நடந்து வந்தோம்.
 
சோர்வுகள், தோல்விகள், துரோகங்கள், முரண்பாடுகள், மனக்கசப்புக்கள் எல்லாவற்றையும் நாங்களும் அவரோடு சேர்ந்தே கடந்து வந்தோம்.
 
தமிழினம் இனி அவருக்கு முன்னரிலும் விட வித்தியாசமான ஒரு பரிமாணத்தில் துணையிருக்க வேண்டும்; முன்னரிலும் பலமான, உறுதியான ஒரு வழிமுறையில் துணை இருக்க வேண்டும்.
 
இந்தப் புதிய பரிமாணம் - அரசியல் பரிமாணம். எமது போராட்டத்திற்கும், போராட்டத்தின் இலக்கிற்கும் ஓர் அனைத்துலக அங்கீகாரத்தைத் தேடும் பரிமாணம்.
 
அது தான் இன்று எமது அவசர, அவசியத் தேவை!


அமெரிக்காவில்  தமிழர் பேரணி - 20.02.09

கடந்த 61 ஆண்டு கால தமிழர்களின் சரித்திரத்தைப் படித்து, அவதானித்து, அதற்குள் வாழ்ந்து பார்த்த பின் ஒரு விடயத்தை நாம் எந்தச் சலசலப்பும் இல்லாமல் மிகத் தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியும்.
 
பிரபாகரன் என்ற தனிமனிதரைச் சுற்றித் தான் - அவரைப் பற்றிப் பிடித்த வண்ணம் தான் - தமிழர்களின் கடந்த கால வரலாறும், எதிர்கால வாழ்வும் இருக்கின்றது. இது ஒர் உணர்ச்சிமயமான முழக்கம் அல்ல; ஒரு விஞ்ஞான ரீதியான நிரூபணம்.
 
விடுதலைப் புலிகள் இயக்கம் தான் தமிழர்களது ஒரே அரசியல் சக்தி: விடுதலைப் புலிகளைத் தவிர்த்துவிட்டு தமிழர்களது அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கற்பனை செய்வது கூட அறிவிலித்தனம்.
 
விடுதலைப் புலிகள் தொடர்பாகப் பேசுவதனை தவிர்த்துக்கொண்டு தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம் என நம்புவது நகைப்புக்கு இடமானது.

விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல.

நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழையான - உயர் பண்புகளை உடைய - சுயமரியாதை மிக்க - ஒன்பது கோடி உயிர்களைக் கொண்ட - ஒரு மிகப் பெரிய தேசிய மக்கள் இனம்.

அது நாங்கள் பெருமைப்பட வேண்டிய விடயம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தான் எமது தமிழ் தேசிய இனத்தினது பெருமைகளின் முகமாக இந்த உலகில் இன்று விளங்குகின்றது.

புலிகள் இயக்கத்தைப் "பயங்கரவாதிகள்" என்று இந்த உலகம் சொல்லுவது - முழுத் தமிழ்த் தேசிய இனத்தையுமே "பயங்கரவாதிகள்" என்று சொல்லிச் சிறுமைப்படுத்துவது போன்றதாகும்.

அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த உலகத்திற்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
 
தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்: எமது சுதந்திரத்திற்காகவும், தேசத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுகின்ற ஒரு மக்கள் இனம் நாங்கள். விடுதலைப் புலிகள் எமது இனத்தின் சுதந்திரப் போராளிகளே என்பதை நாங்கள் வெளிப்படையாக இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.
 
"பயங்கரவாத"ப் பட்டியல்களில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துவிட்டு, "பயங்கர வாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் அவர்கள் மீது நடாத்தப்பட்டும் போரை, எம் மீதே நடாத்தப்படும் போராகவே தமிழர்கள் கருதுகின்றோம் என்பதை நாங்கள் ஆணித்தரமாக இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.
 
இரண்டாம் உலகப் போரில் - ஒவ்வொரு நாடுகளாக ஆக்கிரமித்து - "நாசி"ப் படைகள் நடத்திய நில விழுங்கும் போருக்கு நிகரானதாகவே, தமிழர் தாயகம் மீது இன்று நடத்தப்படும் நில ஆக்கிரமிப்புப் போரை நாங்கள் கருதுகின்றோம் என்பதை நாங்கள் குழப்பமில்லாமல் இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.
 
இன்று -
 
விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பொறித்த கொடி தான் தமிழர்களது கொடி.

தமிழர்களுக்கான உலக அடையாளமாக, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாக, தமிழர்களின் இன்பங்களினதும் துன்பங்களினதும் வெளிப்பாடாக, உலகத் தமிழினம் முழுவதையும் ஒன்றிணைக்கும் - ஒற்றுமையாக்கும் - ஒரு புனிதப் பொருளாக - ஒரு தாயிற்குச் சமமாக, அந்தக் கொடி தான் விளங்குகின்றது.
 
அந்தக் கொடி - தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஒரு இயக்கத்தின் கொடி என்ற குறுகிய வரைமுறையைக் கடந்து - எங்கள் மனங்களில் உண்மையாய் வாழும் 'தமிழீழம்' என்ற தேசத்தின் கொடியாக - எமது இனத்தின் ஆன்ம தாகத்தினை இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் ஒரு குறியீடாக - தமிழர்களின் கம்பீரமாக இன்று இந்த உலகில் விளங்குகின்றது.
 
இன்று -
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழ்த் தேசியம்"
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை."
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழர் தனியரசு"
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழர்களது அரசாங்கம்"

தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இவை எல்லாவற்றினதும் காவலர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத தமிழர்களின் அரசியலில் இவை எதுவுமே இருக்கப் போவதில்லை: அது தான்; யதார்த்தம்.


பிரான்சில் தமிழர் பேரணி - 05.02.09

எமது உடனடிப் பணி
 
போகிற போக்கில் 2008 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளின் கதையை முடித்து விடுவோம் என சிறிலங்கா இந்த உலகத்திற்கு நம்பிக்கைகளைக் கொடுத்தது.
 
தமிழினப் படுகொலை மெதுவாக நடக்கின்றது என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் - சிறிலங்கா கொடுத்த நம்பிக்கையை நம்பி - விடுதலைப் புலிகளின் கதையை முடிக்க சிறிலங்காவுக்கு காலத்தைக் கொடுத்தது உலகு.
 
அதாவது - "இனப்படுகொலை" என்ற விவகாரம் பூதாகாரமாக எழுந்து வெளியே வருவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை சிறிலங்கா அழித்துவிடும் என இந்த உலகம் உண்மையாகவே நம்பியது.

விடுதலைப் புலிகள் அழிந்து போவதற்கும், "இனப் படுகொலை" பூதம் வெளியே வருவதற்கும் இடையில் இருக்கும் சிறிய இடைவெளியில் புகுந்து விளையாடி - தமிழர்களைத் தாங்கள் காப்பாற்றி விட்டது போல நடிப்பதற்காக இந்த உலகம், தமிழர்கள் கொல்லப்படுவது தெரிந்திருந்தும் வஞ்சகமாகக் காத்திருந்தது.
 
ஆனால், எல்லோருடைய ஆசைகளையும் முறியடித்து - விடுதலைப் புலிகள் போரில் நின்று பிடித்துப் போராட - உலகத் தமிழனம் ஒன்றாகத் திரண்டு "இனப்படுகொலை" பூதத்தை வெளியே கொண்டு வந்துவிட்டது.

இந்த உலகத்திற்கு தான் கொடுத்த நம்பிக்கையையும், இந்த உலகத்தின் எதிர்பார்ப்புக்களையும் சிறிலங்காவால் காப்பாற்ற முடியவில்லை.
 
விடுதலைப் புலிகளின் கதை முடிவதற்கு முன்னதாகவே "இனப்படுகொலை" விவகாரம் வெளியில் வந்துவிட்டதானது இந்த உலகம் எதிர்பார்த்திராத ஒரு திருப்பம்.
 
இப்போது - பெரும் தமிழினப் படுகொலை ஒரு புறத்திலும், பெரும் விடுதலைப் போர் மறுபுறத்திலுமாக, இரண்டும் ஒரு சேர நடக்கின்றன.

இந்த உலகத்தின் கவனத்தையும் நாங்கள் தேவையான அளவுக்கு ஈர்த்தாகி விட்டது: இப்போது - ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்த சூழலுக்குள் உலக நாடுகள் தள்ளப்பட்டுவிட்டன.
 
தமிழர்களின் முன்னால் இப்போது உள்ள ஒரே பணி -
 
"இனப்படுகொலை" விவகாரத்தை மட்டும் சொல்லி - அதனைத் தடுத்து நிறுத்துமாறு மட்டும் கோரி - அழுதுகொண்டே இருக்காமல் -
 
"இனப்படுகொலை" விவகாரமும் வெளியே வந்து, விடுதலைப் போரும் உச்சம் பெற்று - காலம் எமக்கு அமைவாகக் கனிந்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி -
 
அடிப்படையான அரசியல் கேரிக்கைகளை முன்வைத்துப் போராடி எமது தேசத்தையும் அந்த மக்களையும் ஒரேயடியாக மீட்க வேண்டியது தான்.
 
நாம் இப்போது - மிகத்தெளிவான குரலில் - சுத்தி மழுப்பாமல் பேசி -
 
இரண்டு விடயங்களை இந்த உலகத்தை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்; அந்த இரண்டு விடயங்களுக்குமான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
 
முதலாவது -
 
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள்: தமிழர் தேசியப் போராட்டத்திற்கு முடிவு காணும் எந்தச் சமரச முயற்சியிலும், தமிழர்களின் சார்பாக விடுதலைப் புலிகளே பங்கேற்பர்; தமிழர்களின் சார்பில் விடுதலைப் புலிகளுடனேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.

இரண்டாவது -
 
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, முழுச் சுயாட்சி அதிகாரம் கொண்ட - மாற்றப்பட முடியாத அரசியலமைப்பிற்குள் (Constitution) உள்ளடக்கப்பட்ட - ஒரு நிரந்தரத் தீர்வு: அந்தத் தீர்வானது - ஆகக்குறைந்தது - நிலம், இயற்கை வளம், நிதி, நீதி-ஒழுங்கு, பொருளாதார மேம்பாடு, வெளிநாட்டு உதவிகள், வர்த்தக மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் அகியவற்றில் முழுமையான அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதாக மட்டும் அல்லாமல் -
 
தமிழர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தமக்கு என ஒரு ஆயுதப் படையை வைத்திருக்கும் அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்குவதாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு விடயங்களுக்குமான உலக அங்கீகாரத்தைப் பெறுவதை நோக்கி - தமிழர் செயற்பாடுகள் எல்லா வழிகளிலும் - எல்லா முறைகளிலும் - முன்னெடுக்கப்பட வேண்டும்.
 
இது தான் எம் முன்னால் உள்ள அவசரமான - அவசியமான பணி.
 
அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்கள், கொள்கை வகுப்பாளர்களுடனான கலந்துரையாடல்கள், ஆய்வுக் கட்டுரைகள், நிலைப்பாட்டு அறிக்கைகள், பல்கலைக்கழக கருத்தரங்குகள், ஊடகப் பேட்டிகள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் என எல்லா வழிகளிலும் - தமிழ் அல்லாத மற்றைய எல்லா மொழிகளிலும் - இந்த இரண்டு விடயங்களுக்குமான உலக அங்கீகாரம் பெறும் செயற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.
 
வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், தமிழர் அமைப்புக்கள்,  குறிப்பாக - உலக மொழிகளைப் பேசும் வல்லமை பெற்று, உலக மக்களின் வாழ்வு முறைகளில் பரிச்சயமும் கொண்ட தமிழ் இளம் சமூகத்தினர் எமக்கான இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை உடன் தொடங்க வேண்டும்.
 
முடிப்பதற்கு முன்னதாக ஒன்றை வலியுறுத்திச் சொல்லி விடுகின்றேன்: "இனப்படுகொலை" விடயத்தை இப்போது பார்த்துக் கொள்ளலாம், அரசியல் விடயங்களை "நாளை" முன்னெடுக்கலாம் என்று தயவு செய்து ஒத்திப் போடாதீர்கள்.
 
ஏனென்றால் - "நாளை" என்பது எமக்கு வராமலேயே போய் விடலாம்: எங்கள் கையில் நேரம் என்பது இப்போது இல்லவே இல்லை.

எப்போதாவது ஏதாவது செய்வதற்கு நாம் இதுவரை காத்திருந்தோம் எனில், நாம் செயற்படுவதற்கான அந்த சரியான நேரம் இதுவே தான்!

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

நன்றி்>புதினம்


Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us