சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் பரபரப்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியாகாமல் ஆழ்ந்த அமைதி நிலவுகிறது.
அதேபோல இந்த சம்பவத்தை எல்லா மேடைகளிலும் ஹைபிட்சில் பேசி வந்த ஒரே அரசியல்வாதியான வைகோவும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் படு சைலன்ட்டாக இருக்கிறார்.
இந்தியாவை உலுக்கிய பரபரப்புச் சம்பவங்களின் வரிசையில், இடம் பெற்ற கோர நிகழ்வு தர்மபுரி பேருந்து எரிப்பு. 3 அப்பாவி மாணவிகளை உயிரோடு கருக்கிய கொடூரச் செயலால் நாடே அதிர்ந்தது.
தங்களது தலைவி ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்ற காரணத்துக்காக தமிழ்நாட்டையே வன்முறைக் களமாக்கி வெறியாட்டம் போட்ட அதிமுகவினர்.
மாணவர்களும், மாணவிகளும், ஆசிரியர்களும் கதறி, கெஞ்சி அழுது, காலில் விழுந்து மன்றாடியதையும் புறக்கணித்து விட்டு பெட்ரோல் ஊற்றி கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மொட்டுக்களை அலறக் கூட வழியில்லாமல் அனலில் கருக்கி தங்களது அகோரப் பசியைத் தீர்த்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 25 பேருக்கும் கூட 7 ஆண்டு தண்டனை கிடைத்துள்ளது.
இந்தத் தீர்ப்பை தமிழக மக்கள் அத்தனை பேருமே நிச்சயம் வரவேற்பார்கள்.
ஆனால், இந்த தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் பெரும் அமைதி காத்து வருகிறார்.
இதை விட முக்கியமானது, வைகோவின் அமைதிதான். காரணம், அவர் அதிமுக கூட்டணியில் சேருவதற்கு முன், எந்த மேடையில் பேசினாலும் தர்மபுரி பஸ் எரிப்பு குறித்து சிறிது நேரமாவது நரம்பு புடைக்க, குலுங்கி குலுங்கி பேசுவது வழக்கம்.
மிகக் கடுமையாக அந்த சம்பவத்தை அவர் உணர்ச்சிகரமாகப் பேசுவார். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிப்பார். ஆனால் இப்போது தீர்ப்பு வெளி வந்துள்ளது குறித்து அவரிடமிருந்து ஒரு சொல்லையும் காணவில்லை.
எது எப்படியோ, பிள்ளைகளை வைத்துள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தத் தீர்ப்பு மிக மிகப் பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கும். அரசியல் காரணத்துக்காக சம்பந்தாமில்லாதவர்களின் உயிரோடு வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும், போடத் துடிக்கும் கயவர்களுக்கு இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய கசையடியாக அமையும்.
http://thatstamil.oneindia.in/