சென்னை: சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் மிகவும் கடுமையாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட குடியுரிமை (இமிகிரேஷன்) அதிகாரிகளுக்கு எதிராக விமான பயணிகள் ஒன்று திரண்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
துபாயில் உள்ள பிரிட்டிஷ் ஆயில் நிறுவனத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள் கிளிண்டன், பெத்தேல் தம்பதியினர். அவர்கள் தங்களது மகள் கெல்லி யுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட சென்னை வந்தனர்.
பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டில் கிறிஸ்துமஸைக் கொண்டாடி விட்டு பெத்தேலும், கெல்லியும் துபாய் திரும்ப இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர். சனிக்கிழமையன்று டிக்கெட் உறுதி செய்யப்படாததால், ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் வந்தனர். அவர்களுடன் உறவினர் சரவணனும் வந்தார்.
இரவு 8 மணி விமானத்தில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் குடியுரிமை சோதனைப் பிரிவுக்கு பெத்தேலும், கெல்லியும் சென்றனர். பெத்தேலிடம் சோதனை நடத்திய குடியுரிமை அதிகாரி ஒருவர் அவரை கேலி செய்ததாக தெரிகிறது. மேலும் தரக்குறைவாகவும் அவர் பேசியுள்ளார்.
இதையடுத்து பெத்தேல் அதிர்ச்சி அடைந்து அந்த அதிகாரியைக் கண்டித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. பெத்தேலுக்கு ஆதரவாக சக பயணிகளும் குரல் கொடுத்தனர்.
பெத்தேல் திட்டியதால் ஆத்திரமடைந்த குடியுரிமை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், கேலி செய்த குடியுரிமை அதிகாரிக்கு ஆதரவாக திரண்டனர்.
விமான நிலைய மேலாளர் ஏழுமலையிடம் சென்ற அவர்கள், பெத்தேலை விமானத்தில் ஏற்றக் கூடாது என்று வலியுறுத்தினர். அவர்களின் மிரட்டல் கலந்த வலியுறுத்தலுக்கு பணிந்த ஏழுமலை, பெத்தேலை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்தார். பெத்தேல், கெல்லியின் உடமைகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெத்தேல், போலீஸில் புகார் கொடுக்கப் போவதாகவும், இங்கிலாந்து தூதரகத்தில் புகார் செய்து பெரிய பிரச்சினையாக்கப் போவதாகவும் ஆவேசமாக கூறினார். இதனால் பயந்து போன விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து அவர்களை பயணம் செய்ய அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து பெத்தேலும் அவரது மகளும் விமானத்திற்குள் ஏறி அமர்ந்தனர். விமானம் கிளம்ப தயாராக இருந்தபோது, குடியுரிமை அதிகாரிகள் சிலர் விமானத்திற்குள் ஏறி பெத்தேலையும், கிள்ளியையும் வலுக்கட்டாயமாக கீழே இறக்க முயற்சித்தனர்.
பெண் என்றும் பாராமல் குடியுரிமை அதிகாரிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதைப் பார்த்து, விமானத்தில் இருந்த அத்தனை பயணிகளும் ஒன்று திரண்டு குடியுரிமை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பெத்தேலை கீழே இறக்கினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அனைவரும் கீழே இறங்கி விடுவோம் என ஆவேசமாக கூறவே குடியுரிமை அதிகாரிகள் அரண்டு போயினர்.
அதேபோல விமான பைலட், ஏர்லைன்ஸ் ஊழியர்களும் குடியுரிமை அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பெத்தேல், கெல்லியை கீழே இறக்க மாட்டோம் என தெரிவித்து விட்டு திமிர் பிடித்த குடியுரிமை அதிகாரிகள் விமானத்தை விட்டு இறங்கினர். அதன் பின்னர் சுமார் 4 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் நள்ளிரவு 12.15 மணிக்கு விமானம் கிளம்பிச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் குடியுரிமைத் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2007/01/08/airport.html