
ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை பதிவு செய்வதற்காக
வன்னியை சென்றடையும் தமிழகத்தின் பெண்
செய்தியாளர் ஒருவரின் திகில் மிக்க அனுபவப் பதிவாக,
கதை விரிகின்றது.
பல மாதங்களுக்கு தமிழீழத்தில் தங்கியிருந்து
நேரடியாகவும், வாய் வழியாகவும்
மக்களின் அவல வாழ்வை பதிவு செய்யும்
இவர், யுத்தத்தால் சிதைவடைந்து காணப்படும்
நிலப்பரப்பில் சமூக பணிகளுக்காக தன்னை
அர்ப்பணித்து நிற்கும் மருத்துவர் ஒருவர் மீது
காதல் கொள்கின்றார்.
எனினும் கனத்த நினைவுகளுடன் தமிழகம் செல்லும் இவர்,
மீண்டும் தமிழீழம் திரும்பி வன்னியில் மருத்துவரை தேடிக்
கண்டுபிடிப்பதற்கான பகீரத பிரயத்தனங்களில் ஈடுபடுகின்றார்.
இவரது தேடலின் போது பழைய நினைவுகள் இரைமீட்டப்படுகின்றன.
கிருசாந்தி குமாரசுவாமியின் படுகொலை, வலிகாம மக்களின்
பாரிய இடப்பெயர்வு, கிளிநொச்சியிலும் வன்னியின் ஏனைய
இடங்களிலும் இடப்பெயர்வையே வாழ்வாகக் கொண்ட மக்களின்
அவல நிலை என வரலாற்றுக் காலத்திற்கும் இவரது
நினைவுகள் சென்று திரும்புகின்றன.
தமிழீழ மக்களின் அவல வாழ்வையும், சிறீலங்கா
அரசாங்கத்தின் கொடூர யுத்த முன்னெடுப்புக்களின்
கோர வடுக்களையும் மட்டும் இந்தத் திரைக்காவியம்
சுமந்து நிற்கவில்லை. வரலாற்று ரீதியாக தமிழினத்தை சிங்கள தேசம்
அணுகும் முறையையும், சிங்கள தேசத்தில் புரையோடிக்
கிடக்கும் கர்ணவழி மகாவம்ச கருத்தியல்களையும், ஆணி வேர்
தெளிவாக புட்டுக் காட்டியுள்ளது.
தமிழீழ தாயகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையில்
நிலவும் தொப்புள் கொடி உறவின் வெளிப்பாடாக, தாய் - சேய்
பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, கடல் பிரித்தாலும்
உள்ளத்தால் பிரியாத உறவின் ஆதர்ச ஒளியாக, இந்த
திரைக்காவியம் திகழ்கின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பட வசதிகளுடன், முதற்
தடவையாக தமிழீழ தாயகத்தில் பதிவு செய்யப்பட்ட தரம் வாய்ந்த
இந்த முழு நீள வெண்திரைக் காவியம் போற்றுதற்குரியது.
திரைக்காவியங்களின் மூலம் காத்திரமான செய்திகளை
வெளிக்கொணர முடியும் என்பதற்கு இந்த திரைக்காவியம்
உவமை கூறுகின்றது.
இது பார்வையிடும் சகலரின் சிந்தனையையும் தூண்டக்
கூடியதெனக் கூறின் அது மிகையாகாது.
http://www.aanivaer.com/aanivaer_flash/index2.html