ரஜினியின் பொருள்கள் அனைத்தும் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. - ஒரு அவசிய அலசல்!
பகல் முழுவதும் உழைத்து வியர்வையை ஆறாக்கி, விளைச்சலைப் பெருக்கிய விவசாயத் தொழிலாளர்கள் 3 ரூபாய்க் கூலி உயர்வு கேட்டதற்காகச் சாட்டையடியையும் சாணிப்பாலையும் பரிசாகப் பெற்ற மண்தான் தமிழகம். இங்கேதான், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை நடிகர் ரஜினிக்குக் கூலியாகக் கொடுத்தார்கள் தமிழக மகா ரசிகர்கள்.
இந்த அநியாயக் கூலிக்கு நன்றிக்கடனாக, உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரஜினி தருவார் என்று பாட்டு எழுதினார் கவிப்பேரரசு வைரமுத்து. ரஜினியின் பொருள்கள் அனைத்தும் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. மிச்சமுள்ள உடலையும் ஆவியையும் கேட்கக்கூடிய அளவுக்குக் கொடூர எண்ணம் கொண்டவர்களல்லர் தமிழக மகா ரசிகர்கள். குறைந்தபட்சம், தன்னுடைய படங்களில் தமிழைக் கொல்லாமலாவது இருக்கட்டும் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினிக்காகக் கவிப்பேரரசு கொடுத்த உறுதிமொழியைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு, அதே ரஜினியின் அனுமதியோடு தமிழ்க் கொலை செய்திருக்கிறார் வித்தக் கவிஞர் பா.விஜய்.
பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சிகளைத் தொடர்ந்து உலகப் புரட்சி செய்யப்போகிற 'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில், தன் வியர்வைக்குத் தங்கக்காசு கொடுத்த தமிழுக்கு ரஜினி செய்திருக்கும் 'சேவை'யைப் பாருங்கள்.
ஒரு கூடை முன்லைட்
ஒன்றாகச் சேர்ந்த கலர்தானே என் வெய்ட்
.... ........... ....................
......... ............ ..............
ஆ.. ஓ.. லெட்ஸ் த்ரொ எ ஃபிடோ
ஹீரோ...ஹீரோ... ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ ஸ்டாரோ.... நீ சூப்பர் ஸ்டோரோ
-இப்படி செம்மொழித் தமிழில் பொளந்து கட்டியிருக்கிறார்கள். பாடலின் இசையும் 100% மேற்கத்திய பாணிதான். தமிழ் மண்ணின் வாசனையைத் தேடினாலும் கிடைக்காது.
கதையமைப்பின்படி இது வெளிநாட்டில் பாடப்படும் பாடல் என்று வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள் ரஜினியின் ரசிகாதி ரசிகர்கள், நிற்க...
'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா'
என்பதும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்பட பாடல்தான். 'பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ' என்பதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல்தான். 'அன்பு நடமாடும் கலைக்கூடமே, ஆசை மழை மேகமே, கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே.. கன்னித் தமிழ் மன்றமே' என்பதும் வெளிநாட்டுப் படப்பிடிப்புப் பாடல்தான். சில மாதங்களுக்கு முன் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நியூயார்க் நகரின் எழிலைக் கண்களுக்கு விருந்தாக்கிய பாடலும்கூட, 'வெள்ளி நிலவே... நட்சத்திரப் பட்டாளம் கூடிக்கொண்டு வந்தாய்' என்றுதான் அமைந்திருக்கிறது.
ரஜினியே ஒரு காலத்தில், 'அக்கறைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே' என்று தான் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் வாயசைத்தார். அவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தும் அதற்கு நன்றிக்கடனாக மூன்லைட், டியூப்லைட் என வெளுத்து வாங்குகிறார். ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட இசைப்புயல்கள், சூறாவளிகள், சுனாமிகள் வருகைக்குப்பின் தமிழ்ப்படப் பாடல்களில் தலைதூக்கிய ஆங்கில ஆதிக்கம் இப்போதுதான் மெல்ல மாறிவந்தது. பாவலர்கள் அறிவுமதி, தாமரை, நா.முத்துக்குமார், யுகபாரதி உள்ளிட்டோர் முடிந்த அளவு பிற மொழிக்கலப்பைத் தவிர்த்து வந்த நிலையில்தான் ரஜினி+ஷங்கர்+ஏ.ஆர்.ரகுமான்+சுஜாதா+பா.விஜய் கூட்டணி மீண்டும் ஆங்கிலத் திணிப்பை நடத்தியிருக்கிறது.
செத்த மொழியான சமஸ்கிருதத்தின் கருட புராணத்தைத் தூக்கிப்பிடிக்கும் 'அந்நியன்', சமூக நீதிக்கு எதிரான சித்தரிப்புகளைக் கொண்ட 'ஜென்டில்மேன்', வாலிபத்தின் வக்கிரங்களை மட்டும் தேடியெடுத்து ஆராதிக்கும் 'பாய்ஸ்' என்று தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் நிறையவே 'புண்ணியம்' செய்திருக்கிற ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கர் தனது 'டேக் இட் ஈசி பாலிசி'யின் படி, ரஜினியுடன் கூட்டணி போட்டுக்கொண்டு தமிழ்க் கொலைகளைப் புரிய, திரைப்படம் எனும் கலை அரிவாளைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார். இவர்களின் வியர்வைக்குத்தான் நாமும் தங்கக்காசுகளை அள்ளித் தரப்போகிறோம். தமிழக அரசும் 'சிவாஜி' என்கிற தமிழ் 'டைட்டிலுக்கு' வரிவிலக்கு தரப்போகிறது.
நன்றி -தாகம் இதழ்