பழனி: சினிமா மோகத்தால், சீரழியும் இளைஞர்கள், கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, படம் பார்க்க கால் கடுக்க தியேட்டர்கள் முன்பு காத்துக் கிடப்பது ஆகியவற்றை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில் நேரத்தை செலவிட வேண்டும் கூடுதல் டிஜிபி திலகவதி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு திலகவதி பேசுகையில், சினிமாவும், டி.வி.யும் சேர்ந்து இன்றைய சமுதாயத்தை மிகவும் பாதிக்கின்றது. இதன் மூலம் எந்த ஆங்கில ஆதிக்கம் வேண்டாமென்று நாம் சொன்னோமோ அது மீண்டும் நமது நாட்டில் வந்து விட வாய்ப்புள்ளது.
பெரும்பாலான இளைஞர்கள், சினிமா மோகம் கொண்டு அலைகின்றனர். எந்த சினிமா ரிலீஸ் ஆனாலும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு மாலை இடுவதும், பாலாபிஷேகம் செய்வதும், படத்தைக் காண டிக்கெட்டுக்காக கால் கடுக்க வரிசையில் நிற்பதுமாக சீரழிந்து வருகிறார்கள்.
திரைப்படங்கள் கவர்ச்சியைக் காட்டி பணம் சம்பாதிக்கின்றன. இதில் பெரும்பாலான இளைஞர்கள் நேரத்தை வீண் செய்வதை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
திரைப்படங்கள் மூலம் வன்முறை, கொலை, கொள்ளை தான் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.
குடும்ப நல ஆணையத்தின் கணக்கெடுப்பின் படி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, அநியாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே, இளைஞர்கள் பகத்சிங், சேகுவாரா போன்ற தியாகிகளைப் போன்று, உண்மைக்காக போராட வேண்டும் என்றார் திலகவதி.
மூலம்: http://thatstamil.oneindia.in/news/2007/07...ilagavathy.html