வியாழன், ஜூன் 07, 2007

விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு அடி உதை!

திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர்.

விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.

ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.

அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.

ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.

இப்படியாக அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2007/06/07/passenger.html

இராமர் பாலமும் இந்துத்துவா சதித்திட்டமும்.

கி.பி. 1528ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த இராமர் கோயிலை முகலாய மன்னனான பாபரின் ஆணைப்படி இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக அப்பட்டமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறி மதவெறியை வளர்த்த கும்பல் இறுதியாக 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது.

அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததற்கும் அது இடிக்கப்பட்டதற்கும் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதற்கும் வரலாற்று ரீதியான எத்தகைய ஆதாரமும் இல்லை. புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இத்தகைய கருத்தை ஆதாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளனர். ஆனாலும் இல்லாத இராமர் கோயிலை இருந்ததாகக் கூறி இன்றுவரையிலும் மதவெறியை வளர்த்து வரும் இந்துத்துவா கும்பல் வடஇந்திய மாநிலங்களில் மதரீதியான கலவரங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இப்போது இந்துத்துவா கும்பலின் கவனம் தெற்கே திரும்பியுள்ளது. தென்னிந்தியாவிலும் இராமர் பெயரால் ஏதேனும் கலவரத்திற்கு வித்திடவேண்டும் என்பதற்காக திடீரென இராமர் பாலம் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

சேதுக் கால்வாய்த் திட்டம் என்பது நூறாண்டு காலத்திற்கு மேலாக தமிழர்கள் வலியுறுத்திவரும் திட்டமாகும். பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றபோது பிரதமர் வாஜ்பாய் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை அளித்தார். ஆனாலும் திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை. பா.ஜ.க. ஆட்சி மாறி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டவுடன் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இத்திட்டத்தின் தொடக்கவிழா மதுரையில் நடைபெற்றபோது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி போன்றவர்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சித் தலைவர்களும் இவ்விழாவில் பேசினார்கள். பா.ஜ.க.வின் பிரதிநிதியும் இவ்விழாவில் பங்கேற்றார். அப்போது இராமர் பாலப் பிரச்சினையை அவரோ வேறு யாருமோ கிளப்பவில்லை. திட்டம் தொடங்கி 2 ஆண்டு காலம் கடந்த பிறகு திடீரென இராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்ற முழக்கத்தை இந்துத்துவாக் கும்பல் எழுப்பியுள்ளது.

இல்லாத இராமர் கோயில் பிரச்சினையை உருவாக்கி வட இந்திய மாநிலங்களில் மதக் கலவரங்களுக்குக் காரணமாகி அதையே அடிப்படையாகக் கொண்டு தேர்தல் வேளையில் வாக்குகளை அறுவடை செய்தவர்கள் இப்போது இல்லாத இராமர் பால பிரச்சினையை எழுப்பி தென்மாநிலங்களில் மதரீதியாக வாக்குகளை அறுவடை செய்ய முயலுகிறார்கள்.

இலங்கையில் இராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்கு வானரப்படையுடன் கடலைக் கடக்கத் திட்டமிட்ட இராமன் இராமர் பாலத்தை கட்டியதாக இராமாயணம் கூறுகிறது. திருமா
லின் அவதாரமான இராமன் நினைத்திருந்தால் பாலம் கட்டாமலேயே தன் படையுடன் கடலைக் கடந்து சென்றிருக்க முடியும். இராமதூதனான அனுமான் மகேந்திர மலையில் ஏறி ஒரே தாவாகத் தாவிக் கடலைக் கடந்து இலங்கை சென்றதாக அதே இராமாயணம் கூறுகிறது.

இராமதூதனுக்கு இருந்த வலிமை இராமபிரானுக்கு இல்லாமல் போனதால் பாலம் கட்ட நேர்ந்ததோ என்னவோ?
அதுபோகட்டும். இராமபிரானால் கட்டப்பட்ட பாலம் ஆழ்கடலுக்குள் அமிழ்ந்துபோனது ஏன்?
இந்தியாவும் இலங்கையும் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே நிலப்பரப்பாக இருந்தது எனவும் பின்னால் காலப்போக்கில் கடற்கோளின் விளைவாக கடல்நீர் உள்புகுந்து இருநாடுகளாகப் பிரிந்தன எனவும் நிலவியல் அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளனர். அவ்வாறு கடலுக்குள் மூழ்கிய மணல் திட்டுப் பகுதியைத்தான் இராமர் பாலம் என இந்துத்துவவாதிகள் கதை திரிக்கின்றனர். தங்கள் கதைக்கு உலகப் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனத்தை துணைக்கு அழைத்துள்ளனர். இராமர் பாலம் என்பது உண்மையில் இருப்பதாக நாசா நிறுவனம் கூறி அதற்கு ஆதாரமாக விண்வெளியில் இருந்து எடுத்த படத்தையும் வெளியிட்டிருப்பதாக பொய்யான செய்திகளை திட்டமிட்டுப் பரப்பிவருகின்றனர்.

நாசா வலைத்தளத்தில் பொய்யான கருத்துக்களை இவர்களே நுழைத்து அதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் நாசா நிறுவனம் இவர்களின் கூற்றை அடியோடு மறுத்துவிட்டது.

ஊடகங்களின் மூலமாக இவர்கள் பரப்பி வரும் பொய்களுக்கு அளவே கிடையாது. எடுத்துக்காட்டாக சமஸ்கிருதம்தான் கணினித் துறைக்கு ஏற்றமொழி என நாசாவின் ஆராய்ச்சியாளரான ரிக்பிரிக்ஸ் என்பவர் கூறியிருப்பதாக ஒரு செய்தியை வலைத்தளத்தின் மூலம் இந்துத்துவா வாதிகள் பரப்பினார்கள். அத்தகைய பெயருடன் யாரும் நாசா ஆராய்ச்சி நிறுவனத்தில் இல்லை என்பது விரைவில் அம்பலமாயிற்று.

1999ஆம் ஆண்டு என்.எஸ். இராசாராம், டாக்டர் நட்வர்ஜா ஆகியோர் பின்வரும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்கள். "சிந்து சமவெளி முத்திரைகளை தாங்கள் கண்டறிந்துவிட்டதாக இவர்கள் தெரிவித்தார்கள். சிந்து சமவெளி நாகரிகத்துடன் ரிக்வேதத்தை இணைத்துக்காட்டுவது இவர்களின் நோக்கமாகும். பிற்காலத்தில் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தவர்கள் ஆரியர் என்பதை மறைத்து சிந்துசமவெளி நாகரிகத்துடன் ஆரியர்களை இணைத்துக்காட்டுவதற்காக இவர்கள் ஆதாரம் இல்லாத கற்பனைகளை வெளியிட்டனர்.

சிந்துசமவெளி நாகரிக காலத்தில் குதிரைகள் கிடையாது. ஆரியர் வருகைக்குப் பிறகே குதிரைகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. வரலாற்றுப்பூர்வமான இந்த உண்மையை மறைக்க சிந்து சமவெளி முத்திரைகளில் குதிரைகளைக் குறிக்கும் முத்திரை ஒன்று இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். அரப்பா மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதமே என்றும் இவர்கள் கூறினர். உண்மையில் சமஸ்கிருத மொழி தோன்றுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது அரப்பா நாகரிகம் ஆகும்.

இவர்கள் எழுதிய நூலை முழுவதுமாகப் படித்த இந்தியவியலாளர்கள் மிகப்பெரிய மோசடியாக இதை வர்ணித்தனர். ஹார்வர்டு பல்கலைக் கழக சமஸ்கிருதப் பேராசிரியரான மைக்கேல் விட்சல் மற்றும் சில ஆய்வாளர்களும் இவர்களின் மோசடியை அம்பலப்படுத்தினார்கள்.

ஆனால் இந்துத்துவா வாதிகள் இராசாராம், ஜா ஆகியோரின் ஆய்வுளை ஊடகங்களின் வாயிலாக உலகெங்கும் பரப்ப இடைவிடாது முயற்சி செய்தனர். அதைப்போலவே இப்போதும் இராமர் பால பிரச்சினையில் பொய்யான செய்திகளைப் பரப்பி தங்கள் கருத்தை நிலைநாட்ட முயன்று வருகின்றனர்.
சேதுக் கால்வாய் திட்டம் என்ற தமிழன் கால்வாய் திட்டம் நீண்ட நெடுங்காலமாகத் தென் தமிழக மக்கள் கனவு கண்ட திட்டம் ஆகும். 100 ஆண்டுகாலத்திற்குப் பிறகு அது செயல்வடிவம் பெறத் தொடங்கியிருக்கிறது. இராமர் பாலத்தை இடிக்காதீர் என்ற பொய்யான கூக்குரலைக் கிளப்புவதன் மூலம் தமிழன் கால்வாய் திட்டத்திற்கு உலை வைக்க இந்துத்துவா வாதிகள் முயற்சி செய்கிறார்கள். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சிபெறும். தூத்துக்குடி, குளச்சல் போன்ற துறைமுகங்கள் சர்வதேசத் துறைமுகங்களாக மாறும். இன்னும் பலவகையிலும் இந்த மாவட்டங்கள் வளம்பெறும். இதையெல்லாம் தடுக்கவே இந்துத்துவா வாதிகள் இல்லாத இராமர் பாலப் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

-தென்செய்தி
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us