தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 இந்தியர்கள் செய்யாத குற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடுவதாக பொன்னானியைச் சேர்ந்த அஷ்ரப் இலங்கையில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னானியை அடுத்து மரக்கடவையைச் சேர்ந்த பி.அஷ்ரப், ஆன்டனி சுதி (கேரளா), மரியா ஜான் (தூத்துக்குடி) உள்ளிட்ட பலர் இலங்கைச் சிறைகளில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் என்று இலங்கை நீதிமன்றம் அறிவித்த எம்.சண்முக சுந்தரம் (கேரளா), எஸ்.எம்.புகாரி (திருச்சி) , என்.தங்கவேல் (மதுரை) உள்ளிட்ட பலருக்கு இலங்கை நீதிமன்றம் குற்றப்பத்திரிகை அளித்தும் இன்னும் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நீர்கொழும்பு, வெலிக்கடை , அனுராதபுரம் ஆகிய சிறைகளில் பத்து ஆண்டுகளாக வெளி உலகத்தைப் பார்க்காமல் இவர்கள் வாழ்கின்றனர். வேலை தேடி 10 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்றபோது இலங்கை விமான நிலையத்தில் 63 பேர் போதைமருந்து கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். கைதான 30 பாகிஸ்தானியர்களுக்கு குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அரசு தலையிட்டு சார்க் உடன்படிக்கையின்படி அவர்களை விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றது.
ஆனால், இந்திய கைதிகள் ஜனாதிபதி, பிரதமர் சோனியா , வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் அந்த ஈ- மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - தினக்குரல்