தமிழக முதல்வர் கதிரையில் அனாயாசமாக உட்கார்ந்த ஜெயலலிதா, அத்துடன் திருப்தி அடையத் தயாரில்லை. நெடுகாலமாகவே அவர் மனதிலுள்ள கனவு நாட்டின் பிரதமராவது என்பதாகும்.
அவரது முக்கிய குணாம்சங்களில் ஒன்றான பழி தீர்க்கும் பழக்கத்துடன் தொடர்புடையதே அவரது பிரதமர் கனவும். அதாவது மாநில மட்டத்தில் தன்னை சிறை அனுப்பிய கருணாநிதியை பழி தீர்க்க நள்ளிரவில் அவரை கைது செய்து நடுத்தெருவில் இழுத்துச் சென்றார். அவ்வாறே தேசிய அளவில் தன்னை எடுத்தெறியும் பி.ஜே.பி. யையும் காங்கிரஸையும் பழி தீர்க்க இந்த இரு தரப்பையும் சாராத மூன்றாவது அணியை உருவாக்கி அதன் மூலம் பிரதமராக நெடுநாட்களாக கனவு காண்கிறார்.
தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் நிரந்தர பகையாளிகள், அவர்களால் ஒரு காலத்திலும் இணைய முடியாது என நம்பினார் ஜெயலலிதா. குறிப்பாக ராஜீவ் கொலையில் தி.மு.க. குற்றவாளி என முன்பு கருதப்பட்டதால் சோனியா காந்தியின் காங்கிரஸுடன் தி.மு.க. கை கோர்ப்பது கடினமென கருதப்பட்டது. ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதாவின் இந்த எண்ணத்தில் மண் விழுந்தது.
காங்கிரஸுக்கு அ.தி.மு.க. வைவிட்டால் வேறுகதி கிடையாது என இறுமாந்திருந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு தி.மு.க.- காங்கிரஸ் நட்பு பெரும் இழப்பாயிற்று. லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தலில் அடுத்தடுத்து தி.மு.க.- காங்கிரஸ் அணி வெற்றிக் கொடி நாட்டியது. ராஜீவ் கொலையாளிகளுடன் சோனியா சேர்வதாக ஜெயலலிதா வசை பாடியதும் எடுபடவில்லை. தனிப்பட்ட விதமாக சோனியா மீது தாக்கிய ஜெயலலிதாவை சோனியா காந்தி மறந்துவிடவில்லை. காங்கிரஸை கவர ஜெயலலிதா விடுத்த சமிக்ஞைகள் காங்கிரஸ் தலைமையினால் உதாசீனப்படுத்தப்பட்டன.
சமீபத்தில் பாராளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தியை ஜெயலலிதா அழைத்தும் அவர் வரவில்லை. பழைய கோபதாபம் சோனியாவால் மறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்திருக்கும் ஜெயலலிதா என்ன விலை கொடுத்தாவது காங்கிரஸ் ஆட்சியை அகற்றியே தீருவேன் என சபதமிட்டுள்ளார். ஆனால், இதற்காக பி.ஜே.பி. யுடன் இணைய அவர் தயாரில்லை. காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்தபோது பி.ஜே.பி. காட்டிய எதிர்ப்புத்தான் அதற்கு காரணம். அது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் வாஜ்பாய் கருணாநிதியை மதித்த அளவு ஜெயலலிதாவை மதிக்கவில்லை. பி.ஜே.பி. யுடன் சேராமல் தேசிய அரசியலில் ஒரு சக்தியாக பரிணமிக்க முடியும் என்பது ஜெயலலிதாவின் நம்பிக்கை. அதற்காக அவர் தீட்டும் திட்டமே மூன்றாவது அணி.
ஆந்திர முன்னாள் முதல்வர் நாயுடு, ஹரியானா முன்னாள் முதல்வர் சௌத்தாலா, அஸாமில் ஏ.ஜி.பி. என்ற பிராந்திய கட்சி, உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் முலாயம் சிங் ஆகிய சக்திகளை ஒன்றிணைக்க ஜெயலலிதா முயல்வதாகத் தெரிகிறது.
கலைஞர் கருணாநிதி திராவிட இயக்கத்தின் கால்கோள்களில் ஒருவராவார். எனவே, தமிழுக்கு முதன்மை ஸ்தானத்தை வெல்வதில் முனைப்பு காட்டுவது இயற்கை. இந்த ஆட்சியில் தான் தி.மு.க. வின் அழுத்தத்தால் மத்திய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது. திராவிட இயக்கமே இந்தி எதிர்ப்பில் வளர்ந்த ஒன்று. அப்படிப்பட்ட திராவிட பாரம்பரிய கட்சியான அ.தி.மு.க. தலைவர் சமீபத்தில் உத்தரப் பிரதேச தேர்தல் மேடைகளில் சாட்சாத் அதே ஹிந்தியில் உரையாற்றியது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. ஜெயலலிதா ஆங்கிலத்தில் அற்புதமாக உரையாற்றக் கூடிய `கொன்வென்ட்' படிப்பாளி என்பது தெரிந்த விடயம். ஆங்கிலத்தையும் தாண்டி ஹிந்தியில் பேச இறங்குகின்றார் என்பது புது விடயம்.
இங்கு ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். கலைஞர் திராவிட பாரம்பரியத்தை போற்றி தமிழுடனும் தமிழ்நாட்டுடனும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள ஜெயலலிதா இந்திய தேசியம் என்ற போர்வைக்குள் தன்னைப் புகுத்தும் முயற்சியில் விடாது தொடர்ந்து வருகிறார். கலைஞரும் தேசிய அரசியலில் ஈடுபடாதவர் அல்ல, வி.பி. சிங் பிரதமராகுவதற்கு பிள்ளையார் சுழியிட்ட தேசிய முன்னணியின் கலைஞர் வகித்த பாத்திரம் முக்கியமானது. ஆனால், வடநாட்டு தேர்தல் மேடைகளில் அதுவும் ஹிந்தியிலேயே முழங்கித் தீர்க்குமளவுக்கு கலைஞர் துணியவில்லை. காரணம் பிரதமர் பதவி மீது ஒருபோதும் கலைஞர் கண் வைத்தவரல்ல. பிரதமர் பதவி மோகம் மட்டுமன்றி, தன்னை எடுத்தெறிந்தவர்களை பழி தீர்ப்பதும் கூட ஜெயலலிதாவின் சமீப காய் நகர்த்தல்களின் நோக்கமாகும். நடிகையாக வாழ்வை தொடங்கியபோது பல வகையிலும் ஆண்களால் இம்சைப்பட்ட ஜெயலலிதா தான் முதல்வரான பிறகு தனது அமைச்சரவையின் ஆண் அமைச்சர்களை தனது காலில் சாஷ்டாங்கமாக விழ வைத்து திருப்திப்பட்டுக் கொண்டார். அத்தகைய உளவியல் அவருடையது. தேசிய அரசியலில் தன்னை அலட்சியப்படுத்திய வாஜ்பாய்க்கும் சோனியாவுக்கும் ஒரு பாடம் புகட்டுவதே அவர் நோக்கமாகும்.
பெருத்த ஆரவாரத்துடன் இவ்வாறு தொடங்கப்படும் 3 ஆவது அணி சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராத கதையாகவே முடிய வாய்ப்புண்டு. காரணம் எந்த இரு சக்திகளுக்கு மாற்றாக 3 ஆவது அணி அமைக்கப்படுகிறதோ அவ்விரு சக்திகளும் லோக்சபாவில் கணிசமான எம்.பி.க்களை கொண்டிருப்பதே. 542 எம்.பி.க்களில் காங்கிரஸுக்கு 147 பேரும் பி.ஜே.பி. க்கு 130 பேரும் உள்ளனர். ஆக, 3 ஆவது அணிக்கு உச்சபட்சம் 265 எம்.பி.க்களின் ஆதரவு தான் கிடைக்கும். ஆனால், இந்த 265 இல் காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கட்சிகளான லல்லு பிரசாத் யாதவின் கட்சிக்கு 22 பேரும் தி.மு.க. வுக்கு 17 பேரும் உள்ளனர். இதுதவிர, மூன்றாவது அணியில் மூலைக்குத் தலைக்கல்லாக உள்ள முலாயமின் எதிரியான மாயாவதிக்கு 25 எம்.பி.க்கள் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் 63 இடங்களை கொண்டுள்ளன. ஆக, 3 ஆவது அணி மொத்தம் 100 எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே திரட்ட முடியும். சமீபத்தில் ஜெயலலிதா உத்தரப் பிரதேசத்தில் உரையாற்றிய கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய எம்.பி.க்களே உள்ளனர். ஆந்திராவில் நாயுடுவுக்கு 5 பேர், ஏ.ஜி.பி. கட்சிக்கு ஒருவர் என இருக்கையில், ஜெயலலிதாவுக்கு லோக்சபாவில் ஒரு எம்.பி. தானும் கிடையாது என்பது தான் வேடிக்கை. இத்தகைய ஜெயலலிதாவால் வெறும் விளம்பரத்தையும் வசீகரிப்பையும் தர முடியுமேயன்றி மாற்று அரசு அமைக்கத் தேவையான எண்ணிக்கை எம்.பி.க்களைத் தரவே முடியாது. முலாயம் சிங் யாதவுக்கு 36 எம்.பி.க்கள் உள்ளனர். அதனால் தான் அவரை சுற்றி கூட்டம் மொய்க்கிறது.
மூன்றாவது அணி தனித்து ஆள முடியாவிட்டாலும் பி.ஜே.பி. ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். காங்கிரஸை அகற்றுவதற்காக பி.ஜே.பி. யும் 3 ஆவது அணிக்கு ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால், பி.ஜே.பி. யும் மூன்றாவது அணியும் சேர்ந்தாலும் 272 என்ற பெரும்பான்மையை எட்ட 30- 40 எம்.பி.க்கள் தேவைப்படும். கம்யூனிஸ்ட் கட்சிகளோ தி.மு.க.- லல்லு பிரசாத் கூட்டணியோ காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முன்வந்தால் தான் காரியம் ஈடேறும். கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச்சார்பற்ற நேர்மையாளர்கள். அவர்கள் பி.ஜே.பி. ஆதரவைப் பெற்ற ஒரு அரசை ஆதரிக்க முன்வரமாட்டார்கள். லல்லு பிரசாத் பி.ஜே.பி. யின் பரமவைரி. அவரும் பி.ஜே.பி. யுடன் சேர அரசில் இருக்க முடியாது. தி.மு.க. வோ கூட்டாளியான பா.ம.க. வுடனான மோதலால் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் தயவில் தங்கியுள்ளது. எனவே மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசை விட்டு தானாக ஒருபோதும் வெளியேற முடியாதபடி பொறிக்குள் அகப்பட்ட நிலை இருக்கிறது. மொத்தத்தில் 3 ஆவது அணி உண்டாகலாம். ஆனால், அது மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதே யதார்த்தம். இங்கு 3 ஆவது அணியில் சேர்வதற்கு சரத்பவார் தயார் என்று கருதினாலும் கூட பெரும்பான்மை போதாது. சரத்பவாருக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். சரத்பவார் பிரதமராவதற்கு அவரது பரமவைரியான சிவசேனா தலைவர் பால்தக்கரே கூட ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் 3 ஆவது அணியின் பிரதமர் முலாயம் சிங்கோ அல்லது சரத்பவாராகவோ தான் இருக்க முடியும். ஜெயலலிதா கனவு காண்பது போல் 3 ஆவது அணியின் பிரதமராக வேண்டுமானால் அவர் கையில் கணிசமான எம்.பி.க்கள் இருக்க வேண்டும். இல்லாவிடின் பிரதமர் கதிரை பகற்கனவு தான்.
அரசியல் கணக்கு வழக்கில் காங்கிரஸின் அரசு விழ வாய்ப்பில்லை. என்றாலும், கொள்கையை உதறிவிட்டு கூட்டணி சேர்வது இந்திய தேசத்தில் சர்வசாதாரணம் .
நன்றி>தினக்குரல்