ஞாயிறு, ஜூன் 17, 2007

பாபாவுக்கு ஏற்பட்ட கதி சிவாஜிக்கும் ஏற்பட வேண்டும்!



தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலை மீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்
இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!

திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!
உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?

சிந்திக்க வைக்கும் இந்தப் பாடலைப கலைமாமணி குப்புசாமி தனது தேனான குரலில்; பாடும்போது மனதுக்கு தெம்பாக இருக்கும்.

ஆனால் தமிழர்கள் திருந்தவே மாட்டார்கள். ஆயிரம் பெரியார், பதினாயிரம் அண்ணா போன்றோர் வந்தாலும் தமிழர்களைத் திருத்தவே முடியாது.

'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே உட்காருகின்றார்கள், ஈரத்திலேயே நடக்கின்றார்கள், ஈரத்திலேயே படுக்கின்றார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்" என மகாகவி பாரதியார் மனம் நொந்து கூறிய வார்த்தைகள் நூறு ஆண்டுகள் கழித்தும் சரியாகவே இருக்கின்றன!

பிரபாவதி என்ற படத்தில் ஒரு காட்சி. கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் கீழே படுத்திருந்த அசுரனின் தலையை மிதித்துவிடுவார். உடனே அசுரன் அவரோடு சண்டைக்குப் போவான்.

அதற்கு கலைவாணர் 'இப்படித்தான் வாமன அவதாரத்தில் கிருஷ்ண பரமாத்மா மாபலியின் தலையை தனது காலால் மிதித்தார்" என்பார்.

'அப்படியா? அப்ப இன்னும் மிதி" என்று அந்த அப்பாவி அசுரன் தலையைக் காட்டுவான். அந்த அசுரன் நிலையிலேயே பெரும்பான்மைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

திரைப்படம் அறிவியல் உலகுக்கு வழங்கிய நன்கொடை. அதன் வாயிலாக மனித வாழ்வை நல்வழிப்படுத்திப் பகுத்தறிவுச் சிந்தனையைப் பெருக்கலாம். சமத்துவத்தை நிலைநாட்டலாம். குடிமக்கள் சொற்படி ஆட்சி என்ற கோட்பாட்டை நிறுவலாம். ஆனால் இன்று அது பெரும்பாலும் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்கும், தன்னம்பிக்கையைக் குலைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மனித சமுதாயத்;துக்கு இரண்டகம் இழைக்கும் செயலாகும்.

கதாநாயகன் தாத்தா ஆகிப் பேரப்பிள்ளையை எடுத்துக் கொஞ்சுகிறார். இன்னும் சில ஆண்டுகள் போனால் பூட்டப்பிள்ளையையும் கண்டுவிடுவார். அதலானென்ன? அவர் நடித்த படத்தைப் பார்க்கத் தமிழ்நாடு, குறிப்பாகச் சென்னைத் திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறதாம்!

அறுபது அகவைக் கிழவனை 30 அகவை இளைஞனாகக் காட்டத்தான் இப்போது ஒப்பனை வந்து விட்டதே? ஒப்பனையாளர் ரஜினியின் உண்மையான தோற்றத்தை மறைத்து, ரஜினியை மீண்டும் கண்ணெடுத்துப் பார்க்கக் கூடிய 'கதாநாயகன்" ஆக மாற்றிக் காட்டுகிறார். ரஜினியின் நரைத்த தாடியையும் மொட்டந்தலையையும் மறைக்க இங்கிலாந்தில் இருந்து படத்தயாரிப்பாளர்கள் செயற்கை முடி (றுபை) வரவழைத்தார்களாம்!

வழக்கம் போல் ரஜினியின் இரசிகர் கூட்டம் சிவாஜி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தார்களாம்! வடபழனி கமலா திரையரங்கில் ரஜினியின் பிரம்மாண்டமான கட் அவுட்டுக்கு 25 லீட்டர் பாலை கொண்டு அபிசேகம் நடைபெற்றது. ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

சில பெருங்குடியினர் பாலுக்குப் பதில் ரஜினியின் கட் அவுட்டுக்கு பீர் அபிசேகம் செய்தார்களாம். ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில்தான் பீர் அபிஷேகம் நடைபெற்றது. 'ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரசிகைகள் குடங்களில் பாலை எடுத்து வந்து அவற்றை அபிசேம் செய்த காட்சி அனைவரையும் புல்லரிக்க வைத்தது" இப்படி பார்ப்பன ஏடான 'தினமலர்" (யூன் 16, 2007) வருணிக்கிறது.

சரி. சென்னையில் படியாத பாமரர் கூட்டம் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறதென்றால் அமெரிக்காவிலும் அதே கதைதான். வழக்கமாக 10 திரையரங்குகளில் ஓடுவதற்குப் பதில் சிவாஜி படத்தை 50 திரையரங்குகளில் திரையிடத் திட்டமாம்!

கனடா பற்றி கதையில்லை. ஆனால் இங்கும் ரஜினியின் இரசிகர்கள் இருக்கிறார்கள். பால் அபிசேகம் செய்யாவிட்டாலும் இருபது அகவைக் குமரிப்பெண்ணோடு 60 அகவை தாத்தா நடித்த படத்தைப் பார்க்க திரையரங்கை நிரப்பப்போகிறார்கள்.

வழக்கமாக கன்னடத்தில் தமிழ்ப் படங்கள் தமிழ்நாட்டில் 7 கிழமை ஓடின பிற்பாடுதான் திரையிடப்படும். ஆனால் சிவாஜி படத்துக்கு விதிவிலக்கு. காரணம் சிவாஜி கன்னடக்காரர்.

ஆனால் அதே கன்னடத்தில் தமிழர்கள் இரண்டாந்தாரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். தமிழர்கள் பெங்களுர் தெருக்களில் தமிழில் பேசினால் கன்னட வெறியர்கள் கன்னத்தில் அறைகிறார்கள்!

திரைப்படத்தில் கூட தமிழ் உரையாடல் மருந்துக்கும் இடம்பெறக் கூடாது. இடம் பெற்றால் திரைச்சீலைகள் கிழிக்கப்பட்டு விடும்! நாற்காலிகள் அடித்து உடைக்;கப்படும்.

எந்த மொழியிலும் விளம்பரம் போடலாம். ஆனால் தமிழ்மொழியில் விளம்பரம் போட்டால் கன்னட வெறியர்கள் தார் பூசி அதனை அழித்து விடுவார்கள்.

தமிழ்நாடு போட்ட பிச்சையில் வயிறு வளர்ந்;த கன்னட நடிக, நடிகைகள் ஒன்று சேர்ந்து தமிழர்களையும் தமிழ்நாட்டின் நலன்களை எதிர்க்கிறார்கள். அங்கு வாழும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள்.

1991 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கன்னடம் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பெங்களூர், மைசூர், மாண்டியா, சென்னப்பட்டனா உள்ளிட்ட தமிழர்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளைக் குறிவைத்து கன்னட வெறியர்கள் தாக்கினார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பெண்கள் குழந்தைகள் உட்பட 200-க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சுமார் 10,000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த 50,000 தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழகத்துக்கு ஓடிப் போனார்கள். காவிரி நீரில் ஒரு பகுதியை தமிழ்நாட்டுக்குக் கொடு என்று காவிரி நடுவர் மன்றம் சொல்லிவிட்டதாம். அதற்காக அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள்.

கன்னட அரசே மக்களைத் தூண்டிவிட்டு இந்தக் கலவரத்தை தமிழர்களுக்கு எதிராக நடத்தியது. கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது இரசிகர்கள்தான் தமிழர்களுக்கு எதிராகப் பேரணி நடத்தினார்கள். முழக்கம் எழுப்பினார்கள். கலவரத்துக்கும் தலைமை தாங்கினார்கள். பெங்களுர் தமிழ்ச் சங்கம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் குண்டு வெடித்தால் அய்ரோப்பாவில் அது எதிரொலிக்கிறது, ஈராக்கில் குண்டு விழுந்தால் இசுலாமியர்கள் கொதித்து எழுகிறார்கள். கஷ்;மீரத்துப் பண்டிதர்களுக்குக் கூடக் குரல்; கொடுக்க இந்துத்துவா சக்திகள் இருக்கின்றன. ஆனால் பெங்களூரில் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் வீடுகள் எரிக்கப்பட்டாலும் வணிக நிலையங்கள் எரியூட்டப்பட்டாலும் தமிழ்ப் படங்களை ஓடவிடாமல் திரையரங்குகளைக் கொளுத்தினாலும் தமிழ்நாட்டுப் பேருந்துகளைத் தடுத்தாலும் தமிழ்நாட்டுத் தமிழன் மூச்சே விடுவதில்லை!

மூச்சுவிடா விட்டாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டில் உழைத்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்யும் ரஜினிகாந்தின் கட் அவுட்டுக்குக் கற்பூரம் காட்டிப் பால் அபிசேகம் பீர் அபிசேகம் செய்கிறான்.

அவ்வப்போது வைகோ, மருத்துவர் இராமதாஸ், திருமாவளவன் போன்றோர் கன்னடத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

காவிரி ஆற்று நீரைத் திறந்துவிடக் கோரி இயக்குநர் பாரதிராசாவும் தமிழ்நாட்டு நடிகர் சங்கத் தலைவருமான விஜயகாந்த் தஞ்சையில் பேரணி நடத்திய போது ரஜனி அதில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.

இளித்த வாய்த் தமிழர்கள் தமிழர் அல்லாத நடிகர் - நடிகைகளுக்கு கோயில் எழுப்பிக் கும்பிடுகிறான்! தமிழரல்லாத நடிக, நடிகைகளுக்கு தலையிடி என்றால் தீக்குளிக்கிறான். காவடி எடுக்கிறான். தனது கைவிரல்களை மட்டுமல்ல கைகளையும் வெட்டிக்கொண்டு தனது பக்தியைக் காட்டுகிறான்!

ரஜினி பெரிய நடிகர் இல்லை. நடிகர் கமல்காசனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உறைபோடக் கூடக் காணாது.

ஆனால் மருத்துவர் இராமதாஸ் சொன்னது போல பீடியை மேலே எறிந்து வாயில் கவ்வுவது, தலைமுடியை தடவி விடுவது போன்ற சேட்டைகளை படியாத - பகுத்தறிவற்ற இரசிகர் கூட்டம் இரசிக்கிறது. கைதட்டி மகிழ்கிறது.

ரஜினி தமிழ்நாட்டில் மூடத்தனத்தை வளர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார். இமயமலையில் அவர் அடிக்கடி போய் தரிசித்து ஆசி பெற்று வரும் பாபாவின் அகவை 2000 ஆண்டாம்! திருமூலர் காலந்தொட்டு உயிரோடு வாழ்ந்து வருகிறாராம்! படியாத பாமரன் கூட இப்படி விசர்த்தனமாகப் பேசமாட்டான்.

அந்த சகாவரம் பெற்ற பாபாவின் பெயரில் எடுத்த படம் பலத்த தோல்வியைச் சந்தித்தது. திரையரங்குகளை விட்டு ஓடிப் போய்விட்டது.

சிவாஜி படத்தில் நடித்த ரஜனி சரி, அதனைத் தயாரித்த ஏவிஎம் குழுமமும் சரி. இரண்டுக்கும் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று அறவே கிடையாது.

தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியபோது பேரழிவு ஏற்பட்டது. உயிர்களும் உடைமைகளும் அழிவுற்றன. ஆனால் ரஜினி சரி, ஏவிஎம் குழுமமும் சரி அந்த மக்களின் கண்ணீரைத்துடைக்க ஒரு துரும்பைத்தன்னும் தூக்கிப் போடவில்லை.

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ நெடுமாறன் நடைப்பயணம் மேற்கொண்டு தமிழீழ மக்களுக்கு ஒரு கோடி பெறுமதியான உணவும் உடையும் மருந்தும் சேகரித்தார். ஆனால் அதனை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. அறப்போர் நடத்தியும் இந்திய அரசு இதுவரை அசைந்து கொடுக்கவில்லை.

தமிழக நீதிமன்றங்களில் தமிழ்மொழியில் வழக்குரைக்கச் சட்டம் இயற்றியும் அதனை செல்லாக்காசாக்கி விட்டது இந்திய மத்திய அரசு! அதே நேரம் இராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் இங்கெல்லாம் இந்திதான் நீதிமன்ற மொழி!

கோடி கோடியாக பொருள் தேடிய ரஜினி ஒரு பள்ளிக்கூடம் கட்டவில்லை. ஒரு கல்லூரி கட்டவில்லை. ஏழைகளுக்கு ஒரு மருத்துவமனை கட்டிக்கொடுத்தது கிடையாது. சம்பாதித்த பணத்தை அய்ந்து நட்சத்திர கோட்டல்களில் கன்னடத்தில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தமிழீழ மக்கள் சிங்களப் படையினரின் தொடர் தாக்குதலால் கண்ணீரில் மிதக்கிறார்கள். மொத்தம் 300,000 மக்கள் வீடு, வாசல்களை விட்டோடி ஏதிலி முகாம்களில் தஞ்சம் அடைந்தார்கள். இந்த மனித அவலத்தை ரஜினியோ ஏவிஎம்மோ கண்டு கொள்ளவில்லை.

கன்னடன், தமிழன் என்று பிரித்துப் பேசலாமா என்று சிலர் கேட்கிறார்கள். பேசக்கூடாததுதான். ஆனால் அவர்கள் பேச வைக்கிறார்களே!

கன்னடருக்கு திராவிட தேசிய உணர்வோ நம்பிக்கையோ இல்லாது இருக்கும் போது தமிழன் மட்டும் எதற்காக திராவிட தேசியம் பேச வேண்டும்?

பெங்களுரில் திருவள்ளுவருக்குச் சிலை திறப்பதை கன்னடர் எதிர்க்கிறார்கள். வள்ளுவர் சிலை சாக்குகளால் கட்டி எங்கோ ஒரு மூலையில் வைத்திருக்கிறார்கள். பாவம் வள்ளுவர்.

தமிழ்நாட்டில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட மொழியின் முதல் பெண் கவிஞர் அக்கமகாதேவிக்கு சென்னையில் சிலை வைக்க கன்னடர்கள் முன்வந்தால் அதனைத் தமிழர்கள் ஒருபோதும் எதிர்க்கமாட்டார்கள்.

தமிழர்களே முன்னின்று தங்கள் செலவில் சிலை வைத்துவிடுவார்கள்! அது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனப் பேசும் தமிழர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று விளக்கம் வேறு கொடுத்து விடுவார்கள்.

காவிரி தண்ணீர் சிக்கல், வள்ளுவர் சிலை திறப்பு, காவிரிக் கலவரத்தில் கன்னடத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட தமிழர்கள் எனப் பட்டியல் நீளுகிறது.

தமிழ் மக்களுக்கோ, தமிழினத்துக்கோ, தமிழ் மொழிக்கோ ஒரு எள்முனை ஆதரவையும் நல்காத ரஜினி மற்றும் ஏவிஎம் தயாரித்து வெளியிட்டுள்ள சிவாஜி படத்தை புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே அவர்களுக்குப் பாடம் படிப்பிக்க முடியும்.
நன்றி - தமிழ்நாதம்



முறியடிப்போம், காத்திரு!

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை?..
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை?..
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை?..
இன்னொருவன் உருவம்மீது பால்சொரியும் நிந்தனை!..

கண்ணகிக்குச் சிலையெடுத்தான்: அது தமிழன் சாதனை!
கலிங்கம் வரை படையெடுத்தான்: அது தமிழன் போர்முனை!
மன்னுதமிழ்க் குறள்படைத்தான்: அது தமிழன் நூல்வினை!
மாயைகளில் மயங்குகின்றான்.. என்ன இது சோதனை?..


சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ?
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ!...


கடல்கடந்து கலம்செலுத்திக் களங்கள்கண்ட நாட்களும்
கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவகுத்த வாட்களும்
மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகி விட்டது!
மானமிக்க தமிழினம், இம் மந்திகளால் கெட்டது!..


காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன் -
காழ்ப்புடனே தமிழர்தமைச் சதிபுரியும் வஞ்சகன் -
நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன் -
நாம் அவனைப் பூஜைசெய்தால், எவன் இங்கே திராவிடன்?


நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்..
நல்லதமிழ் படியென்றால், நாணமின்றி முழிக்கிறான்...
கொடிய திரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்..
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்..


திரையுலகம் தமிழினத்தின் வழிபாட்டுத் திருத்தலம் -
சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம் -
திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் -
செந்தமிழா! உனக்கெதற்கு, நாகரிகச் சீதனம்?...

விரசமிக்க திரைமடந்தை காலில் வீழும் தமிழனே!
விபரமற்ற விலங்குகூட உனைவிட மேல்: கயவனே!
அரசியலில் நடிகைதனை "அம்மா" வாய்ப் பார்த்தவன் -
ஆறறிவின் ஈறறிவை வயிற்றுக்காய் விற்றவன்!..


பகுத்தறிவுப் பெட்டகங்கள் பிறப்பெடுத்த மண்ணிலே...
பைத்தியங்கள் பாய்ச்சுதுபார் வேலை, வெந்த புண்ணிலே!
வெகுண்டெழுந்து வீணர்தம்மை விரட்டுதற்கு வருமினோ!
வெட்கம் கெட்ட "விசிறி"கட்கும் வெட்கமில்லை, அறிமினோ!


ஈழமண்ணின் சோதரனே! உன்னிதயம் நொந்திடும் -
எத்தரையும் பித்தரையும் எண்ணிமனம் வெந்திடும் -
மூளையற்ற பேதைகட்கும் முடிவுஒன்று வந்திடும்!
முறியடிப்போம், காத்திரு! நம் புனிதகுலம் வென்றிடும்!

- தொ. சூசைமிக்கேல்
tsmina2000@yahoo.com
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us