இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிவதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு போதும் காரணமாயிருக்க மாட்டாதெனத் தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அண்டை மாநிலங்களான கர்நாடகமும் கேரளமுமே அதற்குக் காரணமாயிருக்குமென எச்சரித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையெனக் கூறி நேற்று சனிக்கிழமை சென்னையில் ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே நெடுமாறன் இவ்வாறு எச்சரித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
ஒருவேளை தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிய வேண்டுமென்ற எண்ணம் மக்களிடையே உருவாகுமானால், வளருமானால் அதற்கு தமிழீழப் போராட்டம் ஒரு போதும் காரணமாயிருக்காது.
அண்டை மாநிலமான கர்நாடகமும் கேரளமும் தமிழர்களுக்கெதிராக செயல்படுவதாலும் வஞ்சிப்பதாலுமே எமக்கு அவ்வாறானதொரு எண்ணம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதனால் பிரிவினையை நோக்கி எம்மைத் தள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்.
இங்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றுகையில்;
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் படி கர்நாடக மாநிலம் 11 இலட்சத்து 20,000 ஏக்கருக்கு மேலே பாசனம் பெறக்கூடாது என்று கூறியிருந்தும் இன்று இந்தத் தடையை அவர்கள் எடுத்துவிட்டார்கள்.
15 இலட்சத்து 85,000 ஏக்கருக்கு பாசனம் செய்யப்போகின்றோம் என்று இன்று கர்நாடகம் கூறுகிறது. அவர்களது அடுத்த குறி 25 இலட்சம் ஏக்கர் பாசனமாகும்.
இதன்மூலம் அவர்களுக்கு பெரும் அநியாயமான சாதகமும் எமக்கு வஞ்சகமான பாதகமும் நடந்துள்ளதை தமிழக மக்கள் உணரவேண்டும். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு இழந்துகொண்டிருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கேரளத்தின் முல்லை பெரியாறு ஒரு பக்கம் பாலாறு ஒரு பக்கம், ஜீவநதியாம் காவிரி ஒரு பக்கம் என தமிழர்களின் உரிமைகள் பறிபோகும் நிலையில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தமிழகமே திரண்டெழ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்ததுடன் தொடர்ந்தும் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுமானால் இந்தியாவின் ஒற்றுமைக்கே குந்தகம் ஏற்படுமென்றும் எச்சரித்தார்.
http://www.thinakkural.com/news/2007/2/18/default.htm