திங்கள், நவம்பர் 03, 2008

இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியாவின் நிவாரண உதவிகளை இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்பதை விட கடலில் கொட்டுவது சிறந்தது

இலங்கைத் தமிழர் பிரச்சி;னை தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் மேலும் அதிகமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்திக்க இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



இலங்கையில் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழர்களின் குடும்பங்கள் காட்டுக்குள் மர நிழல்களில் தங்கியுள்ளனர். இது தொடர்பான குறுந்தகடுகள் தமிழகத்தில் பலருடைய பார்வைக்குக் காட்டப்பட்டுள்ளன.

அக்டோபர் 2-ம் திகதி இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகள் தமிழகத்தில் வேகமடைந்தன.

அக்டோபர் 14-ம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த, மத்திய அரசு அடுத்த 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய நேரிடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தக் கெடு கடந்த 28-ம் திகதியுடன் முடிந்துள்ள நிலையில் இந்திய, மத்திய அரசின் முயற்சிகள் திருப்தி தரும் வகையில் இருப்பதாகக் கூறிய தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என தமிழக பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்: தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், திரைத் துறையினர், வணிகர்கள் என எல்லோரும் தந்த அழுத்தம் காரணமாகத்தான் மத்திய அரசு இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்பது ஆறுதலளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.

தமிழர்களைத் தாக்கினால் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, தற்போது தமிழக மக்களும், இந்திய அரசும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ்நாட்டில் எழுந்த எண்ணங்களுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ பயப்படுவாரா என சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது, தற்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அந்த அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் இந்த உணர்வு இந்தியா முழுவதும் பரவும்போது மகிந்தவின் தைரியம் குறையும் எனவும் கூறியுள்ளார். இதனால் இலங்கை ஜனாதிபதியின் மனதில் மாற்றங்கள் ஏற்படும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் திரட்டப்படும் உணவு, மருந்துப் பொருள்களும் நிவாரண நிதியும் இலங்கை அரசு மூலமாக அனுப்பப்பட்டால் தமிழர்களுக்கு முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு இருக்குமா என கேட்டதற்கு, அது சாத்தியமற்றது என சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் திரட்டப்படும் உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் மூலம் அனுப்பினால் அந்த உதவிகள் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும் எனவும் இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்பதை விட கடலில் கொட்டுவதோ அல்லது தீ வைத்துக் கொளுத்திவிடுவதோ சிறந்தது எனக் கூறிய சிவாஜிலிங்கம், இது குறித்த உண்மை நிலைமையை தமிழக அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விளக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. அவர்களுடைய தந்திரத்தின் ஒரு பகுதியாகத்தான் இது இருக்கும். தற்போது, ராணுவத்தினரை விடுதலைப்புலிகள் தமது பகுதிக்குள் நுழையவிட்டுள்ளனர். பின்னாளில் என்ன நடக்கும் என்பது தெரியாது. போரில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக இராணுவம் சார்பில் வெளியிடப்படும் தகவல்கள் பொய்யானவை எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாதான், காட்டுக்குள் இருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம்கள் பற்றி இராணுவத்துக்குத் தகவல் சொல்கிறார் என்ற கேள்விக்கு விடையளித்துள்ள சிவாஜிலிங்கம், கிழக்குப் பகுதியில் உள்ள தகவல்கள் மாத்திரமே கருணாவுக்குத் தெரியும் எனவும் அதுவும் பழைய தகவல்களாகத்தான் இருக்கும் எனவும், புதிய மாற்றங்கள் பற்றி கருணாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசு இன்னும் தீவிர அக்கறை காட்டுவதற்காக, அங்குள்ள நிலையை நேரில் விளக்குவதற்காக இந்திய பிரதமர், காங்கிஸ் தலைவி சோனியா ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவுத் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilskynews.com/
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us