தேசப் பிதா மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் ராமச்சந்திர காந்தி(70) டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மகாத்மாவின் பேரன் ராமச்சந்திரா காந்தி, தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார். தத்துவவியல் பேராசிரியரான காந்தி, சிறந்த எழுத்தாளரும் ஆவார்.
தனது இல்லத்தில் வசித்ததை விட டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில்தான் தனது நாட்களை அதிகம் கழித்துள்ளார் காந்தி. அந்த மையத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டு வந்தார்.
மையத்தின் ஏதாவது ஒரு பகுதியில் காந்தியைத் தவறாமல் காண முடியும். ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எழுதுவதையோ அல்லது ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருப்பதையோ காண முடியும். அந்த அளவுக்கு இந்திய சர்வதேச மையத்தை நேசித்தவர் காந்தி.
கடந்த 10ம் தேதி இந்த மையத்தின் வளாகத்தில் உள்ள எலைட் விடுதியின் 15ம் எண் அறையில் வந்து தங்கினார் காந்தி. நேற்று காலை நெடுநேரமாகியும் அறை திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து விடுதியை சுத்தம் செய்யும் ஊழியர்கள் கதவைத் தட்டிப் பார்த்தனர்.
ஆனால் பதில் ஏதும் வராமல் போகவே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காந்தி அறையின் தரையில் விழுந்து இறந்து கிடந்தார்.
இது இயற்கையான மரணமாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர். இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த தத்துவவாதி காந்தி. மொழியியல், தத்துவம் ஆகிய இரு பாடங்களிலும் டாக்டர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகளில் பாடம் நடத்தியவர். தாகூர் நிறுவிய சாந்திநிகேதன், பஞ்சாப் பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் தத்துவிவியல் பிரிவைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சூரியன்