
- தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை"(மே 1-15) இதழில் வெளிவந்த கட்டுரை -
மதத்தை மூலதனமாக வைத்து வணிகம் செய்யும் மதவாதிகள் இப்போதெல்லாம் காலத்திற்குத் தக்கவாறு மாறிக் கொள்கிறார்-கள். கருத்தால் மாற்றிக் கொள்ளவில்லை. கரன்சிக்காக மாறிக் கொள்கிறார்கள். இந்து மதத்தைத் தக்க வைத்துக்கொள்ள தியானம், யோகம், வாழும் கலை என்று புதிய பெயர்களுடன் கும்பலைத் திரட்டுகிறார்கள். கிறித்துவப் பிரச்சாரகர்களோ இன்னும் புதிய வழியைத் தேடுகிறார்கள்.
ஒரு மாதத்திற்கு முன் 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வு சமயம் தேர்வில் வெற்றி பெற பிரார்த்தனை என்று ஒரு கூட்டத்தைத் திரட்டினார் திருவாளர் பால் தினகரன். இவர் நீண்ட நாட்களாக இயேசுவை அழைத்துக் கொண்டிருக்கும் தினகரனின் மகன். தொலைக்காட்சிகளில் பார்க்கலாம், தனது மனைவி, குழந்தைகளோடு ஆடல் பாடல் மூலம் பிரார்த்தனை செய்வார். எல்லா வயதினரையும் ஈர்க்க இப்படி பகுத்தறிவோடு (?) புறப்பட்டு விடுகிறார்கள். மக்களும் தங்களது மூளைக்கு வேலை கொடுக்காமல் முண்டியடித்துக் கொண்டு வரிசை கட்டுகிறார்கள்
இந்த பால் தினகரனும் இவரது தந்தை தினகரனும் பிரார்த்தனை செய்யும் படத்துடன் வெளியாகியுள்ள இயேசு அழைக்கிறார் என்ற நூலின் நகலை நமக்கு வாசகர் திருநெல்வேலி ப.குமார் அனுப்பி வைத்துள்ளார். அந்தப் படங்களைப் பாருங்கள். அட்டையில் சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்த சகோதரர்கள் கைகுலுக்குகிறார்கள். இலங்கைக்காகப் பிரார்த்தனை என தலைப்பு. இதழ் 2006 ஜூன் என நாளிடப்பட்டுள்ளது.
உள்பக்கத்தில் “ஏப்ரல் 2 மற்றும் 7, 8, 9 தேதிகளில் (அதாவது 2006 ஏப்ரல்) சிறப்புக் கூட்டங்கள் மூலம் ஆண்டவர் தமது அன்பை வெளிப்படுத்தினார்” எனவும் “அரசு விருந்தினராக டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன், டாக்டர் பால் தினகரன் குடும்பத்தினர் வரவேற்கப்பட்டனர்” எனவும் செய்தி தரப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இலங்கை தேசியக் கொடியை பற்றியபடியே இலங்கையின் சமாதானத்திற்காக பிரார்த்தனை செய்தார்களாம். சர்வ மத குருக்களும் வருகை தந்தார்களாம். அடுத்த பக்கத்தில் தான் காமெடியே ஆரம்பம் படியுங்கள்.
டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் மூலம் வெளிப்பட்ட தீர்க்கதரிசனம்:
1. இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)
2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!
3. எல்லா தேயிலைத் தோட்டங்களும் செழிக்கும்.
4. இதனால் ஏற்றுமதி ஏராளமாக பெருகும், வருமானம் அதிகரிக்கும்.
5. இலங்கை அரசு பல தேசங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பணிபுரியும், வேலை வாய்ப்புகள் பெருகும், வேலையில்லாத் திண்டாட்டம் குறையும்.
6. நாட்டின் பெரும் பகுதி வருமானம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை தேவன் குறைப்பார், அதை நாட்டு மக்களின் நலனுக்காக செலவு செய்வார்கள்.
இதையெல்லாம்ஆண்டவர் அருளியதாக அள்ளிவிட்டுள்ளார் தினகரன். இந்த திருவாய் மலர்ந்ததெல்லாம் ஓராண்டுக்கு முன்பு. அதாவது கடந்த 2006 ஏப்ரல் 2 மற்றும் 7, 8, 9-களில்.
இந்த ஓராண்டில் என்னென்ன நடந்து விட்டது ஈழ மண்ணில். எத்தனை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளார்கள். செஞ்சோலையில் பிஞ்சுகள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசிக் கொன்றதே. குடியிருப்பு-களில் குண்டு மழை பொழிந்தார்களே. சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் மீதே தாக்குதல் தொடுத்துக் கொன்றதே.
டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் மூலம் வெளியிடப்பட்ட தீர்க்கதரிசனத்தில் இந்த உண்மைகளெல்லாம் வெளிப்படவில்லையே! ஏன்?
தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்தக் கறை படிந்த சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சேயின் கையைக் குலுக்கும் தினகரனுக்கு தன் தமிழினத்தை விட தன் மதமே பெரிதாய்ப் போய்விட்டது என்பதுதானே மெய்.
இந்த 2007ஆம் ஆண்டில் இலங்கை நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புச் செலவுகளுக்கு அதிக நிதியை மகிந்த ராஜபக்சே அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் தினகரனின் தீர்க்க தரிசனத்தில் பாதுகாப்பு செலவு குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.
கொழும்பில் தனது கடையைத் திறக்க வேண்டும் என்பதற்காக டி.ஜி.எஸ். தினகரன் வார்த்தைகளை வாரி இறைத்து விட்டு வந்துள்ளார்.
சிங்களப் பேரினவாத அரசு மக்கள் மீது குறி வைத்து பல ஆண்டுகளாக தாக்கி வருகிறது. அதன் இலக்குகளுக்கு இந்துக் கோயில்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பியதில்லை. ஜோசப் பராஜசிங்கம், என்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தேவாலயத்திலேயே கொல்லப்பட்டார். இந்தச் செய்தியெல்லாம் அற்புதச் செய்தி சொல்லும் தினகரனுக்குத் தெரியாதா? இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ள அந்த இயேசுவும் வரவில்லை.
கடவுள், மத மோசடிப் பித்தலாட்டங்களுக்கு இது ஒரு உதாரணம்தான். இந்த இயேசு அழைக்கிறார், புத்தகத்தைப் போலவே, பிற மத நூல்களையும் ஓராண்டு கழித்து எடுத்துப் பாருங்கள். இதேபோல நல்ல ஜோக்குகளாகத்தான் இருக்கும். அந்தந்த சீசனுக்கு சரக்கு விற்கும் தந்திரம்தான் இந்த ஆன்மிக ஆசீர்வாதங்கள்.
அன்பை போதித்த புத்தரின் உருவச் சிலைகளை ஆராதித்துக் கொண்டு உயிர்களைக் கொன்று குவிக்கிறது சிங்களப் பேரின வாதம். அந்த அரசோடு இயேசுவை அழைக்கும் தினகரனும் கைகுலுக்குகிறார். மதம் மதவாதிகளுக்குப் பயன்பட்டிருக்கிறதேயொழிய மக்களுக்குப் பயன்பட்டதுண்டா?
நன்றி>உண்மை