- பின்னணியில் மருத்துவர்கள் -
தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர்.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்கு பழக்கமானவர் மல்லிகா. கடன், வறுமையில் சிக்கித் தவித்த மல்லிகை திடீர் வசதியான ராஜியை சந்தித்து' பணம் சம்பாதிக்க ஏதாவது வழி உண்டா?' என்று கேட்டுள்ளார். அப்போது தான் சிறுநீரக விற்பனை குறித்து ராஜி கூறியுள்ளார். முதலில் பயந்த மல்லி வறுமையின் பிடியில் இருந்து மீண்டு வர, சிறுநீரக புரோக்கர் ராஜியுடன் திருச்சிக்கு சென்றார். திருச்சி புரோக்கர் மல்லிகாவை மதுரைக்கு அழைத்துச் சென்றார். மதுரை சிவகங்கை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மல்லிகா. மருத்துவமனையில் மல்லிகாவின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் இருந்த மற்றொரு இலங்கை நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீரக புரோக்கர் ராஜி பேசிய தொகையை கொடுக்காதது குறித்து பொலிஸில் புகார் கொடுத்தார் மல்லிகா. அவ்வழக்கு மாநில குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (சி.பி.சி.ஐ.டி.,) மாற்றப்பட்டது. சிறுநீரகத்தை விற்பனை செய்த மல்லிகா வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி., பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நடந்துள்ள சிறுநீரக மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
சிறுநீரக மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜி சி.பி.சி.ஐ.டி., பொலிஸாரிடம் சிக்கினார். பொலிஸில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
காசிமேடு குப்பத்தில் வசித்து வருகிறேன். எனது முதல் மனைவி லட்சுமி. இரண்டாவது மனைவி அஞ்சலை. நான்கு குழந்தைகள் உள்ளனர். இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறேன். போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை காப்பாற்ற சிரமப்பட்டேன். இந்நிலையில் தான் திருச்சியைச் சேர்ந்த சிறுநீரக தரகர் சீனி பாய் என்பவர் என்னை அணுகினார். திருச்சி, புரோக்கருடன் மதுரைக்கு சென்ற நான் 2003 ஆம் ஆண்டு எனது சிறுநீரகத்தை வேறு ஒருவருக்கு கொடுத்தேன். அதில் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதேபோல், 2004 இல் எனது மனைவி லட்சுமியின் சிறுநீரகத்தை, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேறு ஒருவருக்கு கொடுத்தேன். அதில் 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. எண்பதாயிரம் ரூபாய் பணத்தில் பெட்டிக் கடை நடத்தி வருகிறேன். மல்லிகாவிடம் சிறுநீரகத்தை கொடுக்கச் சொல்லி நான் வற்புறுத்தவில்லை. வறுமையில் இருந்த மல்லிகாவுக்கு நான் உதவி செய்வதற்காக அவருடன் திருச்சி சென்றேன். திருச்சி புரோக்கர் தான் எங்களை ஏமாற்றிவிட்டார். இவ்வாறு ராஜி தெரிவித்துள்ளார்.
ஐந்து இலட்சத்துக்கு சிறுநீரகம் விற்பனை:
சிறுநீரகம் பாதிப்படைந்த வெளிநாட்டினர். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஐந்து இலட்சம் வரை புரோக்கர்களுக்கு கொடுத்துள்ளனர். மீனவ பெண்களை ஏமாற்றி முப்பதாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை தரகர்கள் சிலரும் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை மருத்துவமனை டாக்டர்களும், முக்கிய தரகர்கள் சிலரும் பகிர்ந்துள்ளனர். சிறுநீரக தரகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட டாக்டர்களுக்கும் சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் வலை விரித்துள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனைகளில் இருந்து எக்ஸ்ரே உட்பட முக்கிய ஆவணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
thanks> thinakkural.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக