
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் கொண்ட உருவமாகவும், உசேன் என்பவருக்கு ஐந்துவிரல் கொண்ட உருவமாகவும் வடிவமைத்து சப்பரத்தில் வைத்து ஊரை வலம் வருகின்றனர்.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இந்துக்கள் முறைப்படி காப்புக்கட்டி, விரதமிருந்து தீ மிதிக்கின்றனர். ஆண்கள் தீ மிதிப்பதும், பெண்கள் பூ மெழுகுதல் என தீக்கங்குகளை எடுத்து உடலில் கொட்டுவதுமாக விழா நடக்கிறது. இதனால் நோய் தாக்காது என நம்புகின்றனர்.
மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதிப்பதற்கு குழிகளை வெட்டுகின்றனர். ஐந்தாம் நாள் வரை குழிகளை காய வைக்கின்றனர். அடுத்த மூன்று நாள் குழிகளில் விறகுகளை காய வைத்து தீ மிதிப்பதற்கு தயார்படுத்துகின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவு முடிந்து அதிகாலை 3 மணியளவில் தீ மிதி திருவிழா நடக்கிறது. 10ம் நாளான மொகரம் பண்டிகையில் தீமிதிக்கும் குழியை மூடி விழாவை நிறைவு செய்கின்றனர். பள்ளிவாசலை கோவிலாக வழிபடும் இந்துகளுக்கு பூசாரியாக முஸ்லிம் உள்ளார். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத் திருவிழாவைக்காண ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜாங்க்பிரித், மனைவி ஹோடி வந்திருந்தனர்.
http://www.dinamalar.com/
2 கருத்துகள்:
இது போன்ற செய்திகள் அதிகம் கவனிக்கப் படுவதில்லை [அ] முதன்மைப் படுத்தப்படுவதில்லை!
மதவெறியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிடிக்காத நிகழ்வு இவையெல்லாம்!
பின்னூட்டங்கள் கூட பத்து தேறினால் அதிகம்!
என்ன செய்வது?
மத ஒற்றுமையை யாரப்பு இப்ப கண்டுக்கிறாங்க?
கருத்துரையிடுக