சனி, நவம்பர் 25, 2006

பெரியார் என்ன? சொன்னார்? பகுத்தறிவு பற்றி.

இந்தத் தலைப்பில் உண்மையில் பெரியார் என்ன சொன்னார் என்று ஒவ்வொரு விடயம் பற்றியும் எழுத/படி எடுத்துப் போட இருக்கிறேன்,அப்போதாவது பெரியார் எப்படிப்பட்டவர் என்பது விளங்கலாம் என்பதால்.

ஏனெனில் பெரியார் என்றால் எதோ பிராமணரை எதிர்க்கப் பிறந்த மனிதர் என்பதாக சிலர் இன்று தமிழ் இணயத்தில் அவர் மேல் வசைமாரிப் பொழியும் பிராமணர்களின் எழுத்துக்களை இங்கே வந்து போட்டுள்ளார்கள் அவர்களுக்கு பெரியார் மேல் இருக்கும் ஒரே கோவம் அவர் தாம் பிறந்த இந்து மதம் பற்றி அவர் வைத்த விமர்சனம் தான்.
அதற்கு மேல் இவர்களுக்கு அவர் என்ன சொன்னார் என்பதுவோ ஏன் சொன்னார் என்பபதுவோ புரிந்ததாகத் தெரியவில்லை.


பகுத்தறிவு

கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளிநாட்டான் கூறவேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக்கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு, இந்த ஓலிப்பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பதை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று கவனிக்க வேண்டும். பொது அறிவு வளர உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்படவேண்டும்.


(வ¤.6.12.47;1:3)


உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான். மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிகமிக முன்னேறிக் கொண்டு வருகிறான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தால¢மிகமிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக் கொண்டு கோயில் குளம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்டவெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.


(வ¤.22.5.61.1:பெ.செ.)


மற்ற நாட்டில் எல்லாம் அறிவுக்குத்தான் மதிப்பு, அறிவைத்தான் நம்புவான். அறிவைத்தான் ஆதாரமாகக் கொள்வான். இந்த குப்பைக் கூளங்கள், சாத்திர சம்பிரதாயங்கள், கடவுள், மதம், இவைகளைத்தான் நம்புகிறான்.


(வ¤.10.7.61;3:2)


சிந்தனை அறிவு ஒன்றுதானே உண்மையறிவாகக் கருதப்படக்கூடியது? வெறும் புத்தக அறிவு அறிவாகிவிடுமா? அதைக் குருட்டுப் பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா? அப்படியானால், படித்த மேதாவிகள், பட்டதாரிகள், விஞ்ஞானப் பாடத்தில் பட்டதாரிகள், கல்லைக் கடவுள் என்று நம்பி அதன் காலில் விழுந்து வணங்குவார்களா? மகா விஞ்ஞானம் படித்த மகோன்னதப் பண்டித நிபுணர் என்பவர்களெல்லாம் பாபவிமோசனத்திற்காகத்தான் தீர்த்தமென்று சேற்று நீரை வாரித் தெளித்துக்கொள்வார்களா? அவர்கள் படித்த அறிவியலுக்கும் இந்தச் சாணி மூத்திரக் கலவைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?


(பெ.சி.மி.102)


இராமாயணத்திலும், பாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?


(பெ.ச¤.மிமி;651 - 2)


ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்ந்துப் பாருங்கள். அவன், (இங்கிலாந்தில் வளர்ந்தவன்) எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பான்,


(பெ.சி.மிமி;971)


எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும் ஆராய்ச்சி செய்யவோ ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே, நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும் குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.


(கு.4.5.30;10:4)


நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர, மூட நம்பிக்கைக் கடவுளை விட, குருட்டுப்பழக்க மதத்தைவிட சீர்திருத்தக் கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை.


(கு.26.2.33;8:4)


மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும், பாட்டாளியும், பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கலவையற்ற தன்மையையும் உண்டாக்கித் தரவேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.


(கு.25.5.35;15:2-3)


அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தில் பேராலோ மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலோ நடத்தப்படக் கூடாது.


(கு.29.9.40;1:4)


மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல, பகுத்தறிவை மனிதன் தப்பாய்ப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளை உருவாக்கிக் கொண்டான்.


(கு.23.11.46;7:2)


வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப்போட்டித் தொல்லை எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பகுத்தறிவு இல்லை என்றும் எந்த நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத் திருப்தியுடன் இருப்பார்களானால் அந்த நாட்டில் பகுத்தறிவு ஆட்சி புரிகிறது என்றும்தான் அர்த்தம்.


(வ¤.5.2.51;3:1)


மன¤தன¢தனது சமூகததை வஞச¤த்துப¢பொருள் சேர்த்துப் பகுத்தற¤வுள்ள தன் பெண்டு பிள்ளைகளுக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்றுசொல்லுக¤றான். ஆனால் மிருகம, பட்ச¤ ஆகியவைகள் பகுத்தற¤வு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்திவிடுகின்றன. அவற்றைப் பற்றி கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.


(வி.19.2.58.மி;பெ.செ.)


இரண்டாயிரம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள் சொந்தப் புத்தியை உபயோகிக்கும் உரிமையை முற்றிலும் இழந்திருந்தார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்கவே உரிமையில்லாதவராய் எழுதியதைப் படிப்பவர் சொல்லியபடி கேட்டனர். சிந்தித்தால், தர்க்கித்தால், சந்தேகித்தால் பாவம் என்று கூறி அழுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். எனவேதான் அறிவு வளரவில்லை. சமுதாயம் மேலோங்கவில்லை.


(வ¤.12.1.61;பெ.செ.)


கடவுள் சொன்னது, மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.


(வ¤.3.4.61;3:5)


பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.


(வ¤.14.6.61;1.பெ.செ.)


குருட்டு நம்பிக்கையை அறவே விட்டுப் பகுத்தறிவைக் கொண்டு பார்ப்பதானால் ஒரு மதமும் நிலைக்காது.


(வ¤.15.10.62;2:பெ.செ.)


பேராசையில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பமாட்டான். பின்பற்றமாட்டான்.


(வ¤.17.10.62.2.பெ.செ)


நம் மக்கள் பக்குவமடைய மனித அறிவு பெற இன்னும் எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தமிழ்நாடு புயலால், வெள்ளத்தால், பூகம்பத்தால் அடிப்படை உட்பட அழிந்து புதுப்பிக்கப்பட்டாலொழிய விமோனமில்லையென்றுதான் கருத வேண்டியிருக்கிறது.


(வி.30.1.68;2:3)


பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது, எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்கவேண்டும்.


(கு.9.12.28;11:2)


பகுத்தறிவு மூலம் மனிதனின் ஆயுசு வளர்ந்ததோடு மனிதனின் சாவு எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டது.


(வி.4.10.67;2:6)


அறிவாளிக்கு, இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது. உடல் நலத்துக்கு ஊசி போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது. அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை. வலி இருந்தாலும் அதைப் பொருத்துக் கொண்டால்தான் சுகம் ஏற்படும் என்று கருதிப் பொறுத்துக் கொள்ளுகிறானே, அதுதான் அறிவின்தன்மை.


(வி.13.9.68;2:3)


சிந்தனாசக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும் பட்சிகளிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனிதனைவிட எவ்வளவோ பலம் பெற்றிருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.

மனிதனிடமுள்ள வேறு எந்த சக்தியைக்காட்டிலும் பகுத்தறியும் சக்திதான் அவனை மற்ற எல்லா உயிர்களினின்றும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக்குத்தான் அவன் மனித்தன்மை பெற்றியங்குவதாக நாம் கூறமுடியும். பகுத்தறிவை உபயோகிக்காதவன் மிருகமாகவே கருதப்படுவான்.


(கு.1.5.48;5:3)


இதைச் சிந்தித்தால் பாவம், இந்தக் காரியத்தை ஆராய்ந்தால் பாவம் என்று சொல்லிச் சொல்லி நம்மைப் பயமுறுத்திவிட்ட காரணத்தினால், இப்போது எந்தச் சங்கதியையும் நம்மால் ஆராய முடியாமல்போய்விட்டது. கொஞ்சம் துணிச்சலாக இந்தப்பக்கம் திரும்பிவிட்டோமானால் அப்புறம் வேகமாக வளர்ச்சி காணமுடியும்.

காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன், பகுத்தறிவில்லாதவன், இரண்டும் இருந்தும் சிந்திக்காதவன், சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகியவர்கள் காட்டுமிராண்டி என்பதுதான் எனது கருத்து.


(வி.3.11.67;2:2)


மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.


(5.11.67;பெ.செ.)


நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவது போல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன்போல் காணப்படுவது எப்படித் தவறாகும்?


(வி.5.11.67;2:2)


எந்தக் காரியமானாலும், எந்த நிகழ்ச்சியானாலும் எதைச் செய்தாலும் அதற்குமுன், ‘‘இது ஏன்? எதற்காக? அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, அறிவிற்கு ஒத்துவருகிறதா?’’ என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ச்சி ஏற்படும்.
அப்படி இல்லாமல் பழக்கம், பழைமை, முன்னோர்கள் என்று போனால் அறிவு வளர்வதற்குப்பதில் முட்டாள்தனம்தான் வளர்ச்சியடையும்.


(வி.27.11.69;3:4)


அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னோருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள்!


(கு.30.10.32;9)


பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது?


(கு.1.11.36;5:1)


மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும்.


(வி.6.12.47;1:3)


ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான் பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.


(கு.1.5.48;12:2)


இன்று நமக்கு வேண்டியது அறிவு வளர்ச்சி. அறிவு வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும். அறிவு ஆட்சி செய்தல் வேண்டும்.


(வி.7.3.61;3:2)


மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான், பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட, புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடவேண்டும்.


(வி.14.3.61;3:1)


உங்களை ஆள்வது கடவுளோ, மதவாதிகளோ அல்ல, உங்கள் அறிவுதான். நீங்கள், நான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் பகுத்தறிவுக்குச் சரியென்று பட்டதை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளி விடுங்கள்.
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். உயிரினங்களில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.


(வி.16.8.69;2:1)


சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.


(பெ.பொ:8)


மனிதன் நம்பிக்கைவழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை பெறமுடியும்.


(வி.13.8.61;3:5)


உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழிகாட்டி. அதை நல்ல முறையில் பயன்படுத்தி, பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன்னோர் சொல்லித் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல. அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந்தப்படாமல் நீயே செய்ய - கண்டுபிடிக்க முயற்சி செய். அறிவுக்கே முதலிடம் கொடு.


(வி.13.1.63.2:பெ.செ)


உலக உயிர்களில் அறிவு நிரம்பப் பெற்ற உயிர் பகுத்தறிவுள்ள உயிர் மனிதன்தான். அவன் தன் அறிவைப் பயன்படுத்தினால் மிகச் சிறந்த காரியங்களை எல்லாம் சாதிக்க முடியும்.


(வி.16.12.69;3:6)


மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.


(கு.20.1.35;10:4)

விடுதலை மற்றும் உண்மை இதழ்களிலிருந்து.





நன்றி:-யாழ்களம்(நாரதர்)
மேலும் சூடான விவாதத்திர்க்கும், உங்கள்கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15965

3 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

//ஏனெனில் பெரியார் என்றால் எதோ பிராமணரை எதிர்க்கப் பிறந்த மனிதர் என்பதாக சிலர் இன்று தமிழ் இணயத்தில் அவர் மேல் வசைமாரிப் பொழியும் பிராமணர்களின் எழுத்துக்களை இங்கே வந்து போட்டுள்ளார்கள் அவர்களுக்கு பெரியார் மேல் இருக்கும் ஒரே கோவம் அவர் தாம் பிறந்த இந்து மதம் பற்றி அவர் வைத்த விமர்சனம் தான்.
அதற்கு மேல் இவர்களுக்கு அவர் என்ன சொன்னார் என்பதுவோ ஏன் சொன்னார் என்பபதுவோ புரிந்ததாகத் தெரியவில்லை.
//
வாழ்க உம்மையும் தூண்டியவர்கள், அவர்களின் சேவை நாட்டுக்குத்தேவை....

குழலி / Kuzhali சொன்னது…

இதை ஒரு மூன்று பதிவாக பிரித்து போடுங்கள் நிறைய இருப்பதால் ஒரே சமயத்தில் படிக்க சிரமமாக இருக்கும்

நன்றி

We The People சொன்னது…

//குழலி / Kuzhali said...
இதை ஒரு மூன்று பதிவாக பிரித்து போடுங்கள் நிறைய இருப்பதால் ஒரே சமயத்தில் படிக்க சிரமமாக இருக்கும்

நன்றி //

நானும் வழி மொழிகிறேன்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us