நண்பர் குழலிம்,மற்றும் வீதபியூப்பிள் கேட்டுகொண்டதற்கிணங்க, பெரியார் என்ன சொன்னார் பதிவு, பகுதி பகுதி பகுதியாக போடப்படுகிறது.
அறிவியல்
இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.
(கு.13.8.33;10:4)
இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிகளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள். தீ உண்டாக்கச் சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம்;இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்சார விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந்துள்ள நம் மக்களின் புத்தி மட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இருக்கிறதே!
(வி.2.3.61:பெ.செ.)
கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். கண்காட்சிச் சாலையின் ஒரு பக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் வெளிவருவதற்குள் ஒருவன் சகல துறைகளிலும் தன் அறிவை வளர்த்துக் கொண்டுவிடுவான். அவன் உலகத்தின் முன்னேற்ற வளர்ச்சியைத் தன் கண்முன் கண்டுகளித்துத் தெளிவு பெறுகிறான். பல ஆராய்ச்சி நுணுக்கங்களை அறியும் வாய்ப்புப் பெறுகிறான். பல அதிசயக் கருவிகளைக் கண்டு அக மகிழ்கிறான். சுருங்கக் கூறின் கலாசாலை சென்று பல ஆண்டுகள் படித்துப் பெற வேண்டிய அறிவு வளர்ச்சியை அவன் அந்தக் கண்காட்சி மூலம் ஒரு சில மணி நேரத்திலேயே பெற்றுவிடுகிறான்.
(வி.13.1.63:2:4)
கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப்பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக்கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள்.
(கு.11.8.29:10:2)
சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘‘எடிசன்’’. அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது.
(பெ.சி.மிமி: 1220)
உணவுத்துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்படவேண்டும். அரிசிக்குப் பதிலாக வேறு ஏதாவது இரசாயனப் பொருளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயக்க வைத்தோம், பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற் கேற்றாற்போல் மாற்றி ஓடச்செய்கிறோம். அதுபோல மனித எந்திரத்தையும் பெருந்தீனி மூலம் ஓடச்செய்யாமல் மின்சாரம் போன்ற சக்திப் பொருள் ஓன்றைக் கண்டுபிடித்து (சிறிய உணவு) அதைக் கொண்டே மனிதனை இயங்கும்படியும், உயிர் வாழும்படியும் செய்யவேண்டும்.
(பெ.ந.வா.நே.;8)
மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்துவிடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமாட்டார்கள். ஆண் பெண் உறவிக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.
(கு.30.1.36:15)
கல்வி
கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவனைத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்.
(கு.29.7.31;8:1)
எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடமையைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமாக காரியமாய் இருக்கிறது.
(கு.22.11.36;19)
ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்தவேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெறவேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி கற்பிக்கப்படவேண்டும்.
(கு.26.12.37;10:3)
கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
(வி.7.11.55;3:3)
ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
(கு.1.5.27;6:1)
எப்படியிருந்தாலும் புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்துத் தலையைச் சொரிந்துகொள்வது போலாகும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. எனவே, பண்டிதர்களைக் கிட்டச் சேர்க்கும் காரியத்தில் மிக விழிப்போடு இருக்கவேண்டும்.
(கு.18.5.30;14)
ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓரளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதளவாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.
(கு.12.2.44;9)
ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
(வி.5.10.60;பெ.செ.)
பெருமைமிக்க ஆசிரியர்கள் நமது பிள்ளைகளை மதவாதிகளாக்க வேண்டுமென்று கருதுவதைவிட, அறிவாளிகளாக்க வேண்டுமென்று பாடுபடவேண்டும்
(வி.16.12.69;3:6)
நாட்டில் சாதியின் பேரால் ஒருவன் எதற்காக இழிமகனாகவும், இழிதொழில் செய்பவனாகவும் இருக்க வேண்டும்? நாட்டில் எல்லா மக்களுக்கும் கல்வி அளித்துவிட்டால் இழித்தொழிலுக்கென்று ஒரு சாதி இருக்க முடியுமா? படிப்பின்மையால்தானே இவர்கள் இழிதொழிலைச் செய்ய வேண்டியிருக்கிறது? அதனால்தானே இழிமக்களாகவும் கருதப்படுகின்றனர்?
(வி.12.6.61;பெ.செ.)
சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்கவும் வேண்டும்.
(வி.21.7.61;3:4)
இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் கோயிலல்ல: பள்ளிக்கூடம்தான். அறிவால் பல அதிசய அற்புதங்களைச் செய்யலாம். அதனால் அறிவை வளர்ப்பதற்கு அடிப்படையான கல்விக்கூடங்கள்தான் இன்று நமக்கு மிக மிகத் தேவை.
(வி.6.7.68;3:5)
நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்கக் கூடியவனாக இருக்கவேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.
(வி.26.7.68;3:1)
பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவது ஒரு துறையில் விளக்கத்தையும்தான் உண்டாக்க உதவும். வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல துறைகளிலும் ஞானத்தையும் உண்டாக்கும்.
(கு.6.3.38:8:1)
நாட்டில் பள்ளிக்கூடங்கள், உயர்தரக் கலாசாலைகள் எவ்வளவு இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு, ஒரு வரம்புக்கு அவை அடங்கியனவே.
இத்தகைய நிறுவனங்களால் படிப்பின் பயன் முழுமையாகக் கிடைத்துவிடாது, இந்தக் குறைபாட்டை நிறைவுபடுத்துவதற்குப் பயன்படுவன படிப்பகங்களேயாகும்.
(வி.8.1.61;2:5)
சுருங்கச் சொன்னால் படிப்பகங்களை ஒரு சர்வகலாசாலை என்றே கூறலாம்.
(கு.19.7.31:3)
நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்சிச்யும் ஏற்பட வேண்டும். மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.
(கு.22.8.37;10:3)
படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத்தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு.
(வி.25.1.47;3:3)
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு முதன்முதலில் ஒழுங்குமுறையைப் புகட்டுவதில்தான் கவலை வேண்டும். அதுதான் முக்கியம். அடுத்தபடியாக உள்ளதுதான் கல்வி. முதலில் எப்படிப் பழக வேண்டும் என்ற நல்லொழுக்கத்தைப் புகட்ட வேண்டும். நல்லொழுக்கம்தான் ஒரு மனிதனைப் பிற்காலத்தில் சிறந்த பண்புடையவனாக ஆக்குகிறது.
(வி.1.3.56;3:3)
நாட்டை நல்லமுறையில் வளப்படுத்த நான் நாட்டின் அதிகாரியாக இருந்தால், அதிக வரி போடுவேன். ஏழைகளிடத்தில் எவ்வளவுதான் கையில் கொடுத்தாலும் அதை உடனே செலவு செய்து விடுகிறார்கள். ஆகவே அவர்கள் கையில் பணம் கொடுக்காமல் வரியாகப் பிடித்து அவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம்.
(வி.23.7.56;3:5-6)
மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, சமுதாய இழிவு உள்ள நூல்கள் எவையானாலும் அவை பள்ளியில் மாத்திரமல்லாமல் அரசியலிலேயும் புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(வி.17.3.68;2:3)
பாரதிதாசன் அவர்களது பாடல்களை வகுப்புக்குத் தகுந்தபடி தொகுத்துப் பாடமாக வையுங்கள்: ஐந்தாண்டு அறிவு ஓர் ஆண்டில் தோன்றிடும்.
(வி.23.5.68;2)
பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்பதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான்.
மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அருங்குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருந்ததல். இவைகள் நமக்குக் கடவுளைவிட மேலானவை.
(வி.27.9.55;3:3)
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல நகைகள், ஆடம்பர உடைகள் உடுத்துவதுதான் பெருமையென்று கருதாமல் எளிய உடைகளே உடுத்த வேண்டும். படிக்கக்கூடிய இடத்தில், எல்லாப் பிள்ளைகளும் கலந்து பழகும்படியான இடங்களில், பேதங்கள் இல்லாமலிருப்பதுதான் நல்லது.
(வி.5.10.61;பெ.செ.)
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது. பள்ளியில் படிக்கும் காலம் மிகமிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனத்தை அலையவிடக்கூடாது. குறிப்பாக கூறவேண்டுமானால் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடாது.
(வி.9.4.62;பெ.செ.)
மாணவர்கள்-மாணவியர் ஆபாசப் படங்கள், கருத்துகள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்து வாழ்க்கையில் கெட்டுப் போகிறார்கள். அறிவுப் பெருக்கம் நிறைந்த-நல்ல கருத்துகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்துச் சிந்தித்து அறிவு ஆராய்ச்சி பெற வேண்டும்.
(வி.17.5.62;பெ.செ.)
முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல்தான் பாடம்.
(வி.15.7.62;பெ.செ.)
நன்றி:-யாழ்களம்(நாரதர்)
மேலும் சூடான விவாதத்திர்க்கும், உங்கள்கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15965
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக