சனி, நவம்பர் 25, 2006

பெரியார் என்ன? சொன்னார்? பெண் உரிமை பற்றி.

நான் சொல்வதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதே உனது அறிவை கொண்டு சிந்தி,பகுத்து ஆய்ந்து உன்னை தெளிந்துகொள்-பெரியார்.

பெண் உரிமை

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.


(கு3.11.79;8)


பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?
அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான்.


(கு.16.11.30;7)


பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.
அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள்.


(கு.8.2.31;12:2-1)


இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.


(கு.28.4.35;5:1)


பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.


(கு.16.6.35;7:3)


ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.


(வி.24.6.40;3:4)


ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.


(கு.21.7.46;2:2)


பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும்.


(வி.14.2.61;1:பெ,செ.)


திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள்.


(வி.5.4.61;1:பெ.செ.)


தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது.


(வி.15.4.61;1:பெ.செ)


இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்?


(பெ.சி.மி.187)


நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.


(வி.22.3.43;3:4)


பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்.


(கு.5.6.48;14:2-3)


கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள்.


(கு.29.9.40;15:3)


பெண்கள் மதிப்பிழந்து போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆபாசமாய்த் தங்களை அலங்கரித்துக் கொள்வதேயாகும்.


(வி.15.6.43;1:3)


தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை.


(வி.11.10.48;3:2)


சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.


(கு.1.5.27;5:3)


இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?


(கு.3.11.29;8)


பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும்.


(வி.22.3.43;4:2)


பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும்.


(பெ.சி.மி:170)


ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.


(கு.8.1.28;6:3)


கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.


(கு.8.1.28;15:1)


பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது?


(பெ.க.மு.தொ;134)


பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை.


(கு.1.3.36;11:3)


நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா?


(வி.1.6.68;3:5)


சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி.


(கு.12.8.28;10:2)


ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்: எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றது.


(கு.16.6.35;8:2)


மற்றவர்கள், பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும் குடும்பச் சொத்து குறையாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியம் என்று கூறுகின்றார்கள். பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சைபெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம்.


(கு.6.4.30;10:9)


பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும்.


(கு.12.2.28.13.3)


ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன, பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல. எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா?


(கு.12.8.28;10:1-2)


பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.


(கு.8.3.36;14:3)


இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவாகும்?எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம்.


(கு.27.10.40;3:3)


இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது.


(வி.26.5.58;1:பெ,செ.)


குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவைமணம்,கலப்புமணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால் இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும்.


(வி.21.3.50;பெ.செ.)


பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்க
். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார
கள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம்ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.


(கு.12.8.23;10:3)

நன்றி:-யாழ்களம்(நாரதர்)
மேலும் சூடான விவாதத்திர்க்கும், உங்கள்கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15965

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us