சனி, நவம்பர் 25, 2006

பெரியார் என்ன? சொன்னார்? சாதி ஒழிப்பு பற்றி.

நான் சொல்வதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதே உனது அறிவை கொண்டு சிந்தி,பகுத்து ஆய்ந்து உன்னை தெளிந்துகொள்-பெரியார்.


சாதி ஒழிப்பு


சாதி, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?


(கு.2.6.35;11)


ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர்களாகவும் மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழி மக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால், இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராச்சியம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும், சாத்திரமும், கடவுளும் யாருக்கு வேண்டும்?


(கு.23.6.35;12)


கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் சாதி இனத்தைப்பற்றியவைகளாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடக்கிறது.


(கு.18.12.43;3)


சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்கள் என்றும் இழிமக்களென்றும் கருதும் மதங்களும் , புராணங்களும் சட்டங்களும் இருக்கமுடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள்.


(வி.22.2.61;1)


எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்கவேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்படச் சாதி ஒழிய வேண்டும்.


(வி.13.11.61;1:பெ,செ.)


நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள், ஆனால் அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா? நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதிநோய்க்கான மூலகாரணங்களைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்.


(வி.25.7.62;1:பெ.செ.)


பிறவியால் கீழ்-மேல், உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதிமுறை என்பதை அடியோடு போக்கடிக்க வேண்டும்.


(பெ,ஒ,வா.நெ;29)


மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை. சாதியைவிட்டுத் தள்ளுவதில்லை. ஆனால் சாதியைவிட்டுச் சாதி சாப்பிட்டால் கல்யாணம் செய்தால் சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.


(கு.20.12.36;14:4)


ஓரிடத்தில் உப்பு நீர்க் கிணறும், நல்ல தண்ணீர்க்கிணறும் உள்ளது என்றால் நல்ல தண்ணீரை ஒரு பகுதி அனுபவிக்கவேண்டும். உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க வேண்டும். இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க லாயக்கற்றவர்கள் என்றிருக்குமானால் அக்கொடுமை எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட வேதனைதரும் அளவுக்குச் சாதிமுறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும் மற்ற பலர் வேதனைப்டுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட சாதிமுறைகள் இந்நாட்டை விட்டு அகலும்வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்.


(வி.30.3.56;3:6)


நமக்கு ஓர் அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைவு என்றாலும் சாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் சாதி இல்லை. நமக்குள்ள இழிவு, சாதியால் தானே, இதை சிந்திக்க வேண்டாமா?


(வி.8.7.61;3-4:6-5)


சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடம் தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே, அது வகுப்புத் துவேஷம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?


(வி.24.5.61;1:பெ.செ.)


சாதி எனும் வார்த்தையே வடமொழி. தமிழில் சாதி என்பதற்கு வார்த்தையே இல்லை. என்ன இனம்? என்ன வகுப்பு? என்று மட்டுமே கேட்பார்கள், பிறக்கும்போது சாதி வித்தியாசத்தை, அடையாளத்தைக் கொண்டு யாரும் பிறப்பதில்லை. மனிதரில் சாதி இல்லை. ஒரு நாட்டிலே பிறந்த நமக்குள் சாதி சொல்லுதல் குறும்புத் தனம்.


(வி.15.9.57;3:1-2)

நன்றி:-யாழ்களம்(நாரதர்)
மேலும் சூடான விவாதத்திர்க்கும், உங்கள்கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15965

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us