சனி, மே 26, 2007

ம.தி.மு.க.வினரை எதிர்முகாமுக்குப் போகும் அளவிற்கு செய்ததில் மாறன் சகோதரர்களது பங்கு முக்கியமானது!

தி.மு.க. பிரசார மேடைகளில் இரண்டு பாட்டுக்கள் நிச்சயமாக ஒலிக்கும் _ அது, குமரிமுனையாக இருந்தாலும், குடந்தையாக இருந்தாலும். ஒன்று, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ மற்றொன்று...

‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா!

வஞ்சகரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா, அழிந்ததடா..’

1970_களில் நாகூர் ஹனிபா தன் வெண்கலத் தொண்டையில் ஸ்ருதி சுத்தமாகப் பாடிய பாடல்தான்

பின்னர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போன சிலருக்கும் அது சரியான சவுக்கடியாக இருந்தது. வைகோ தன் பட்டாளத்துடன் விலகியபோதும், ‘வளர்த்த கடா’ ஊர் பூராவும் தி.மு.க. மேடைகளில் முழங்கி வெறுப்பேற்றியது. அண்மையில் தீவுத்திடலில் ஹனிபாவின் ‘வளர்த்த கடா’ கணீரென்று மீண்டும் ஒலித்தபோது, உடன்பிறப்புகளுக்கு தயாநிதி சகோதரர்களை நினைவுபடுத்தி ரத்தத்தை சூடேற்றியது நிஜம். யாருக்கோ எழுதப்பட்டது, கடைசியில் தன் குடும்பத்தில் சிலருக்கே பொருத்தமாகும் என்று, கழக மேலிடம் கனவில் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை. கால கிரஹத்தின் இந்த சோகமான தமாஷை, கலைஞர் கருணாநிதியால் அவ்வளவு சுலபமாக ஜீரணித்துவிட முடியுமா? முடியவில்லை.

கடந்தவாரம் முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில் தன் ஆழ்மனதை அப்படியே வேதனை கொப்புளிக்க கொட்டித் தீர்த்துள்ளார்.

‘‘துரோகத்தால் எனைத் துளைத்துச் சென்ற தோழர்கள் சிலரும்’’,

தோள்மீது கைபோட்டுத் துணைக்கு வந்துவிட்டோம் என்பதும் கனவுதானே;

பலிக்காத கனவுகளால் மனம் வலிக்காது;

ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும்

பட்டை தீட்டிப் பார்த்தாலும் பலனில்லை..’’

என்று வருத்தப்பட்டுள்ள கலைஞர், ஓர் இடத்தில் மாறன், அமிர்தம், செல்வம் ஆகிய மருமகப்பிள்ளைகள் எல்லாம் தன் மான்குட்டிகளாய்

மார் மீதும், தோள் மீதும் விளையாடியதையெல்லாம் குறிப்பிட்டுக் ஓய்ந்துபோயினவே என் இளமையோடு அவை ஒழிந்தே போயினவே என்று கலங்கியுள்ளார்.

‘‘அந்தக் கவிதையைப் படிச்சிட்டு அப்படியே உட்கார்ந்துட்டேன். ராத்திரி ரொம்ப நேரம் தூக்கம் வரலை சார். உண்மையான பாசத்தை சட்டை செய்யாம எட்டி உதைச்சுட்டுப் போகும்போது, தலைவரால தாங்கிக்க முடியவில்லை. அதுவும் இந்த வயசுல. இந்த முடியாத உடம்புல, அவருக்கு சகோதரி புள்ளைங்க, தன் புள்ளைங்கன்னு வித்தியாசமே கிடையாது.

மாறனுக்கும் அவருக்கும் எப்பவாவது மனஸ்தாபம் வரும். சட்டுன்னு சொல்லிக்காமலேயே எந்திரிச்சு விருட்டுன்னு போய்டுவாரு மாறன். அம்மா (தயாளு அம்மாள்) சுடச்சுட டிபன் கொண்டு வருவாங்க. மேஜையிலேயே அது ஆறிகிட்டுக் கிடக்கும். தலைவர் பாட்டுல சுவரைப் பார்த்துட்டு உட்கார்ந்திருப்பார். அப்புறம் ஓசைப்படாமல் அம்மா மாறன் ஐயாவுக்கு போன் பண்ணி, தலைவர் அப்செட் ஆனதைச் சொல்வாங்க. அடுத்த ஐந்தாவது நிமிஷத்துல வீட்டுக்கு வேகமா வருவார். அப்போ அவருக்கும் ஒரு பிளேட் டிபன் வரும். இவர் சட்டுன்னு தன் பிளேட்டை தலைவர் பக்கம் திருப்பிட்டு, அந்த ஆறிப்போன டிபனை எடுத்துச் சாப்பிட்டுகிட்டே ஒண்ணுமே நடக்காத மாதிரி, வேற எதையோ பேசுவார். தலைவர் முகத்துல சிரிப்பைப் பார்க்கணுமே... மாறன் ஐயா முழங்கைய பிடிச்சுகிட்டே குழந்தை மாதிரி சாப்பிடுவார். பல தடவை இப்படி நடந்திருக்கு. செல்வத்திடமும் அப்படித்தான் பாசத்தை வச்சிருந்தார் தலைவர். அதெல்லாம் இந்த புத்திசாலிப் புள்ளைங்களுக்குப் புரியுமா சார்?’’ கலைஞர் குடும்பத்தில் பல வருடங்களாகப் பணியாற்றி விட்டு கொஞ்ச காலம் முன்பு ஓய்வுபெற்ற பெரியவர் நெஞ்சு நிறைய பாரத்துடன் நம்மை நிமிர்ந்து பார்த்தார்.

மாறன் சகோதரர்களின் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம், பேராசைதான் என்பது நம்மிடம் பேசிய தென் சென்னை தி.மு.க. அனுதாபிகள் பலரது கருத்து.

‘‘பூமாலை கேஸட் வியாபாரம் செய்தவர்கள், முதலில் அங்குசத்தைத்தான் வாங்கினார்கள். இப்போது யானைகளை வாங்குகிறார்கள். அவர்கள் டி.வி. நாலு மாநிலங்களிலும் கிளைவிட்டு வியாபித்துள்ளது. விளம்பர வருமானம் பல கோடிகளைத் தாண்டுகிறது. வேகவேகமாக பத்திரிகை துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்கள். ஆக, தொட்டதெல்லாம் லாபம் என்ற நிலை வரும்போது, அவர்களுக்கு தலை கால் புரியவில்லை. அரசியலையும் தங்கள் சாம்ராஜ்யத்திற்குள் வளைக்க நினைத்தார்கள். அது பணத்தால் வருவதில்லை. அவர்கள் வளர்ச்சியின் அஸ்திவாரமே தி.மு.க.வும், கலைஞரும் என்பதை மறந்து ஆடிய ஆட்டம்தான் எல்லாம்’’ என்றார், ஓர் மூத்த மாநகராட்சி உறுப்பினர்.

தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை இன்னும் இன்னும் என்று நாளுக்குநாள் பெருக்கி, அதிலேயே குறியாக இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரத்த உறவுகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்று, இந்த விவகாரத்தை தத்துவார்த்தமாக அலசுகிறார் மூத்தபத்திரிகையாளர் சோலை.

‘‘அவ்வப்போது பரபரப்பான, உணர்ச்சிமயமான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற தனியாத தாகம், இந்த சாம்ராஜ்ய அதிபர்களுக்கு வந்துவிடும். சொத்தைத்தான் பிரித்தாகிவிட்டது. எனவே, சகோதரர்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்கிற மிதமிஞ்சிய நிலை. அப்போது நான்கு விஷயங்களையும் முன்யோசிக்கும் தாத்தாவின் எச்சரிக்கை ஒலி காதில் விழுமா?’’ என்று கேட்கிறார் சோலை.

அடுத்தது, கலைஞருடன் ஒற்றுமையாக இருந்த ம.தி.மு.க.வினரை, கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பேற்றி, அவர்கள் எதிர்முகாமுக்குப் போகும் அளவிற்கு செய்ததில் மாறன் சகோதரர்களது பங்கு முக்கியமானது என்பதை, கழகத்தின் சில சீனியர்கள் சங்கடத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள். ‘‘ம.தி.மு.க. செய்திகளை இருட்டடிப்பு செய்யாதீர்கள் என்று பலமுறை கலைஞர் சொல்லியது எங்களுக்குத் தெரியும். இவர்கள் கேட்கவில்லை. அப்போதே இவர்கள் ஓர் அரசியல் கணக்குப் போட்டிருக்கிறார்கள்’’ என்கிறார், ஓர் முன்னாள் அமைச்சர். ஒரு காலத்தில் துரைமுருகன், க. சுப்பு ஆகியோரோடு சட்டசபையில் அசாத்தியமாக முழங்கி, இப்போது காரணமின்றி ஓரங்கட்டப்பட்டவர்.

மாறன் சகோதரர்கள் விஷயத்தில் இன்னொரு திகைப்பான தகவல், அவர்கள் வரிசையாக நான்கு விமானங்கள் வாங்கியது, கலைஞருக்கே சற்றுத் தாமதமாகத்தான் தெரியும். அதாவது, ஜெயலலிதா இதுபற்றி அறிக்கை விட்டு, கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்த பிறகுதான், கலைஞரே என்ன நடக்கிறது என்று சுதாரித்துக் கொண்டாராம்.

‘‘நாற்பது பேர் பயணம் செய்யக் கூடிய ஜெட் விமானம்தான் முதலில் வாங்கப்பட்டது. தற்போது ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ இதன் பராமரிப்புப் பணிகளைக் கவனிக்கிறது. அப்புறம் ஆறு பேர் பயணம் செய்யக் கூடிய ஒன்றும், மூன்று பேர் பயணம் செய்யக் கூடிய ஒன்றையும் வாங்கினார்கள். இவற்றை ஏர்ஜெட் என்பார்கள். இது இரண்டையும் சவூதி ஏர்லைன்ஸ் பராமரிக்கிறது. நான்காவதாக ஒரு குட்டி விமானம், பிலிப்பைன்ஸ் நாட்டு பயிற்சி நிலையத்தில் (திறீஹ்வீஸீரீ சிறீஉதீ) உள்ளது. குட்டி விமானங்கள் இரண்டில் ஒன்றை சேலத்திற்கும், மற்றதை பாண்டிக்கும் விட அனுமதி கேட்டிருக்கிறார்கள். விரைவில் ஜாம் ஜாமென்று சகோதரர்களின் விமானப் போக்குவரத்தையும் எதிர்பார்க்கலாம்’’ என்று பீஹாரி ஆங்கிலத்தில் சொல்லும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ஓர் விமான நிலைய அதிகாரி, இறுதியாகச் சொன்ன கொசுறு தகவல்.

‘‘இரண்டு வாரங்களுக்கு முன்பு, மத்திய தொழில்நுட்பப் பாதுகாப்புப் படையின் அனுமதியோடு தயாநிதியும், கலாநிதியும் தங்கள் விமானங்களைப் பார்வையிட்டனர்.’’

திடீரென்று ஒரு காலையில் தயாநிதிமாறன் பொறுப்பிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ள நிலையில், தென்னிந்தியாவின் மற்ற சாட்டிலைட் அதிபர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக ஓர் தகவல். அவர்கள் நிம்மதிப் பெருமூச்சோடு காய்களை இப்போது நகர்த்துகிறார்கள்.

‘‘அது கேரளாவாகட்டும், ஆந்திராவாகட்டும் இவர்கள் ஆதிக்கம்தானே. கேரளாவில் மார்க்சிஸ்ட்கள் நடத்தும் ஏஷியாநெட்டு

க்கு பல நெருக்கடிகள் தந்தார்கள். அதேபோல் ஏசியா நெட்டுக்கும். விளைவு முதலிடத்தில் இருந்த கைரளி பின்னுக்குப் போக, இவர்களது சூர்யா நம்பர் ஒன் ஆனது. ஆந்திராவில் ஈ.டி.வி.யின் செல்வாக்கை இவர்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் ஈ.டி.வி, ஜெமினி, தேஜா எல்லாமே சமமான இடத்தில் உள்ளது! கர்நாடகத்தில் இவர்கள் ராஜ்யம்தான். இப்போது தயாநிதி பதவி இறங்கிவிட்ட அடுத்த நிமிஷமே, கர்நாடக முதல்வர் குமாரசுவாமியின் மனைவி வேகமாக களத்தில் இறங்கிவிட்டார். விரைவில் அவர்கள் குடும்பத்து டி.வி. வரப்போகிறது. எங்கே சார், இவர்கள் ஆரோக்யமான போட்டிக்கு வழி வகுத்தார்கள்?’’ என்று கேட்கிறார் ‘வெற்றிகரமான’ டி.வியைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி.

‘சன் டி.விக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்று தயாநிதி கூறியதைக் கேட்டு, இவர்கள் ‘நல்ல ஜோக்’ என சிரிக்கிறார்கள்.

விளைவுகளைப் புரிந்துகொள்ளாமல் சிலம்பம் சுற்றி விட்டு, இப்போது மெதுவாக சுதாரித்துக் கொண்டு பச்சைக்கொடிக்கு மாறன் குடும்பத்தினர் தயாராவதாக ஓர் உறுதியான தகவல். ஏற்கெனவே மருமகன்கள் செல்வம் மற்றும் அமிர்தம் கலைஞரைச் சந்திக்க முயற்சி செய்தபோது எகிறி முகத்தில் அடித்த பந்து போல சீறி வந்தது, ‘அந்த’ ஜொலிக்காத கூழாங்கற்கள்’ கவிதை! தன் பத்திரிகை ஊழியர்களை உசுப்பிவிட்டுவிட்டு செய்வதறியாமல் ஜெனீவாவிற்குப் பறந்த கலாநிதி மீதுதான் கலைஞருக்கு அதிக கோபமாம். தற்போது பரபரப்பாகப் பேசப்படுவது, 28_ம் தேதி மாறனின் கடைசி மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு! தன் பேத்தி மீது மிகுந்த பாசம் கொண்ட கலைஞர், அங்கு வரலாம் என்றும், தயாநிதியும் கலாநிதியும் அங்கே வைத்து தாத்தாவிடம் சமரசம் ஆகலாம் என்றும் கூறப்பட்டாலும், அதற்கு சாத்தியமில்லை என்றே நம்பப்படுகிறது. எனவே, சென்னையிலிருந்து ஊட்டிக்கு விழாவை மாற்றி விட்டதாகவும் செய்திகள். ஊட்டியில் நடந்தால் தயாளு அம்மையாரை மட்டும் கலைஞர் அனுப்பலாம்!

‘‘வயதான தலைவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில், இவர்கள் அவரை நோக அடித்தது மன்னிக்க முடியாத குற்றம். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். கடவுளின் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்’’ என்றார் தீர்மானமாக கலைஞர் மீது மிகவும் பற்று கொண்ட ஓர் தமிழறிஞர்! இனியும் வளர்த்த கடா முதல்வரின் மார்பில் பாயக்கூடாது. காரணம், அதைத் தாங்கும் சக்தி அவர் முதுமைக்கில்லை
நன்றி>குமுதம்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஓர் முன்னாள் அமைச்சர். ஒரு காலத்தில் துரைமுருகன், க. சுப்பு ஆகியோரோடு சட்டசபையில் அசாத்தியமாக முழங்கி, இப்போது காரணமின்றி ஓரங்கட்டப்பட்டவர்.

Rahman Khan?

மாசிலா சொன்னது…

ஆஹா ஆஹா, என்ன அருமையான பாசம் பொங்கும் ஒரு குடும்பக்கதை? ஒரே சிரிப்புதான் போங்க! இருந்தாலும் கேலி பண்றதுக்கு உங்களுக்கு ஒரு எல்லையே இல்லாம போயிடுச்சு
:-)))))

இந்த தள்ளாத வயசிலும் முதலைமைச்சர் ஆனதே பெரிய தப்புதானுங்க. தமிழகத்தில திறமை வாய்ந்த இளைஞர்கள் எக்கச்சக்கமா இருக்க ஏந்தான் இப்படியோ? திட்டம் போட்டு சதி செய்து முதலமைச்சர் ஆகக்கூடிய அனைத்து திறமையும் உடைய வை.கோ வை பூண்டோடு அழிச்சாரு. (வன்னிய ராசா ராமகிலாஸு கூட கூடிக்கினு)

யாருக்கு சார் வேனும் இந்த செல்லாத கதையெல்லாம். நல்ல ஜோடிப்பு. இப்ப இன்னாங்க இவரு வீட்டுல சாப்பிடறதுக்கு சோறு தண்ணி இல்லையா? அல்ல கேஸ் கரண்ட் இல்லையா? தமிழ்நாட்டுல ஏகப்பட்ட ஏழைங்க இது எதுவுமே அலையாறாங்க. போய் அத கவனிக்க சொல்லுங்க. உண்மை பொதுநல சேவையாளர்களுக்கு இவங்கதான் உண்மையான குடும்பம், பந்தம், பாசம் எல்லாமே. மறைந்த பெருந்தலைவர் காமராசர் மாதிரி மக்களுக்கு என தன்னை முழுமையா ஒப்படைச்சி வாழ்ந்து காட்டுனும்க. அதுதான் தலைவனுக்கு அழகு. மத்தது எல்லாமே ச்சும்மா, டுபாக்கூருங்க. இப்ப இன்னாங்க உலக தமிழருங்க அத்தன பேரும் உக்காந்து ஒப்பாரி வெக்கனம்னு நெனைக்கிறாரோ? அதலாம் அந்த காலம்க. இப்ப சனங்க எல்லாம் முழுச்சிகினாங்க. இந்த சால்ஜாப்பு ஒன்னும் இனி வேவாதுங்க.

கலைஞரை நான் மதிக்கிறேனுங்க. ஆனா அதுக்குனு, கண்ண மூடினு கண்டதுக்கெல்லாம் ஜால்ரா போடமுடியாதுங்க.

எம்பங்குக்கு நானும் ஒரு பழமொழிய சொல்லிட்டு போயிறேனுங்க : அரசன் அன்று கொல்வாருங்க, தெய்வம் நின்று கொல்லும்க!

அப்டீயும் இல்லீனா, "வினை விதைத்தவன் வினை அருப்பான்" அப்டீயும் சொல்லிபுடலாம்க.

இந்த குடும்ப அரசியலே நாத்தம் அடிக்குதுங்க. போதுங்க பொறுத்தவரைக்கும்.

வர்ரேனுங்க.

பெயரில்லா சொன்னது…

What a nice comment from Masila, on this Kumudam Article. I agree with Masila's comment.
I ever give respect to Kalaighar. But, If he can not control his family on the political issue, Why are still getting involement of family on politics? If he can not control the family, He can get away from the politics and give a chance to a new person. There are so many talented people in tamil naadu. give a chance to 1 of 65 000 000 people. dont give this family PULAMBAL to public. If you are a good leader keep your family with you house. Think about the poor people living in Tamil Nadu. Until then Tamil Nadu can not be deveoped. As a Sri lankan tamil I feel sorry for tamil Nadu people. Please let them to live.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us