சென்னை: திமுக அரசின் செல்வாக்கு கடும் சரிவைக் கண்டுள்ளாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியை விட ஜெயலலிதா பல வகையிலும் சிறந்தவராக விளங்குவதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடும். பொதுவாக திமுகவுக்கு சாதமாகவே இக்கல்லூரியின் கருத்துக் கணிப்பு அமையும். இந்த நிலையில் கடந்த ஒரு வருட திமுக ஆட்சி குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு பாதகமான முடிவுகளை இக்கல்லூரி வெளியிட்டுள்ளது.
இக்கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு இன்று வெளியிட்டது. இதில் திமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் விவரம் வருமாறு,
கடந்த ஒரு ஆண்டு திமுக அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 39.9 சதவீதம் பேர் ஆட்சியின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். நடு நிலை வாக்காளர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 25.7 சதவீத நடுநிலை வாக்காளர்கள் திமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதேசமயம், திமுகவின் சொந்த செல்வாக்கு சரியவில்லை. அது 31.8 சதவீதமாக உள்ளது.
இப்போது யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுகவுக்கு என 31.8 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு என்று 27.6 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு என்று 15.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இக்கல்லூரி கடந்த முறை நடத்திய கருத்துக் கணிப்பை விட இந்த முறை திமுக மற்றும் தேமுதிகவின் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த முறை திமுகவுக்கு 34 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு 17 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக 58.9 சதவீதம் பேரும், குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை என்று 26.4 சதவீதம் பேரும், மோசம் என 14.7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சியாக அதிமுகவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 46.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மோசம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சி மற்றும் இப்போதைய திமுக ஆட்சியில் எது பெஸ்ட் என்ற கேள்விக்கு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
தாமதிக்காமல் முடிவு எடுப்பதில் சிறந்தவர் ஜெயலலிதா என 53.3 சதவீதம் பேரும், கருணாநிதி என 45.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர், கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்காதவர், உட்கட்சி ஜனநாயகத்தை காப்பவர் உள்ளிட்டவற்றில் சிறந்தவர் ஜெயலலிதா என்றும் கருத்துக் கணிப்பில் தெரிந்துள்ளது. இவற்றில் ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா கொண்டு கேபிள் டிவியை அரசுடமையாக்கும் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது. 62.6 சதவீதம் பேர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேவையில்லை என 14.3 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சரத்குமார் கட்சி ஆரம்பிப்பார் என 35.6 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நாடார் சமுதாய அமைப்புகளுடன் சேர்ந்து ஆரம்பிப்பார் என 19.2 சதவீதம் பேரும், ரசிகர்களின் துணையுடன் ஆரம்பிப்பார் என 16.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் கட்சி தொடங்குவது சந்தேகம் என 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக