திங்கள், ஜூலை 02, 2007
சென்னை வந்தது நிமிட்ஸ்: கடும் எதிர்ப்பு!
சென்னை: பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தது. சென்னை துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் அது நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பெரும் அணு சக்தியால் இயங்கும் போர்க் கப்பல்களில் ஒன்று யுஎஸ்எஸ் நிமிட்ஸ். ஓல்ட் சால்ட் என்ற செல்லப் பெயர் கொண்ட இந்தக் கப்பல் ஈராக் போரில் பெரும் பங்கு வகித்தது.
Shot at 2007-07-02
இந்தக் கப்பலை தளமாக பயன்படுத்தித்தான் ஈராக் மக்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கி அழித்தன. இக் கப்பலில் இரண்டு அணு உலைகள் உள்ளன.
இக்கப்பல் பல்வேறு நாடுளுக்கு சுற்றுலாவாக சென்று வருகிறது. அந்த வகையில் சென்னைக்கும் இக்கப்பல் வந்துள்ளது. ஆனால் அணு சக்தியுடன் கூடிய இந்தக் கப்பல் சென்னைக்கு வந்தால் சென்னை நகருக்கும், தென் மாநிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் இதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிராகரித்தார். இக்கப்பலால் அணு கதிர்வீச்சு அபாயம் ஏதும் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் 6000 போர் வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நிமிட்ஸ் இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்தது. சென்னை துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் இக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து ஊழியர்களை, இன்னொரு அமெரிக்க கப்பல் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வரும். பின்னர் வருகிற 5ம் தேதி வரை சென்னையில் அவர்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.
சென்னை துறைமுகத்திலிருந்து நேராக அவர்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கிருந்தது பல்வேறு பிரிவுகளாக பேருந்துகள் மூலம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையே, நிமிட்ஸ் கப்பலால் ஆபத்து ஏதும் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும், இந்திய கடலியல் பகுதியை பாதுகாக்கும் நோக்கத்துடனும், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பல் நிமிட்ஸ் கப்பலைக் கண்காணித்தபடி இருக்கும். இதில், அணு சக்தித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழு தங்கியுள்ளது.
நிமிட்ஸ் வருகையை எதிர்த்து இன்று சென்னை துறைமுகம் எதிரே இடது சாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளன.
எந்த ஆபத்தும் இல்லை-நிமிட்ஸ் கேப்டன்
இதற்கிடையே நேற்று பத்திரிக்கையாளர்கள் நிமிட்ஸ் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடல் எல்லையில் நின்று கொண்டிருந்த நிமிட்ஸ் கப்பலுக்கு சிறிய கப்பல் மூலம் பத்திரிக்கையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களிடம் கப்பலின் கேப்டன் மைக்கேல் மெனசீர், கமாண்டர் ஜான் டெரன்ஸ் பிளாக், ஆகியோர் பேசினர். அவர்களிடம் கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தக் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் கூடியது.
57 ஆண்டுகளாக இது பயன்பாட்டில் உள்ளது. இதுவரை எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை. இதனால் உங்களுக்கு (இந்தியாவுக்கு) எந்தவித ஆபத்தும் கிடையாது என்று உறுதியளிக்கிறோம் என்றனர்.
அணு ஆயுதங்கள் உள்ளதா என்று மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது, சில விஷயங்களை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது என்று மழுப்பலாக அவர்கள் பதிலளித்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2007/07/02/nimitz.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக