செவ்வாய், ஜூன் 26, 2007
'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்!!!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 15 வயதே ஆகும், 10வது வகுப்பு படித்து வரும் சிறுவன், தனது தந்தையின் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இந்த செயலுக்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காந்திமதி முருகேசன் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்களாக முருகேசனும், அவரது மனைவி காந்திமதியும் உள்ளனர்.
மணப்பாறை பிரிவு இந்திய மருத்துவர் சங்கத்தின் கூட்டம் கடந்த 6ம் தேதி மணப்பாறையில் நடந்தது. அப்போது டாக்டர் முருகேசன் ஒரு வீடியோ படத்தை அங்கு திரையிட்டார். ஒரு பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது போன்ற காட்சி அதில் இடம் பெற்றிருந்தது.
இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று டாக்டர்கள் கேட்டனர். அதற்கு முருகேசன், இருக்கிறது, இந்த அறுவைச் சிகிச்சையை செய்தது எனது 15 வயது மகன் திலீப் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முருகேசனின் செயலுக்கு டாக்டர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது மிகவும் தவறு என்று கூறினர். அதை மறுத்த முருகேசன், கின்னஸ் சாதனைக்காக இந்த அறுவைச் சிகிச்சையை எனது மகன் செய்தான். வெற்றிகரமாக இந்த அறுவைச் சிகிச்சை முடிந்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று எதிர் கேள்வி கேட்டார் முருகேசன்.
ஆனால் அங்குள்ள டாக்டர்களால் முருகேசனின் செயலை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்ச்சையில் சிக்கியுள்ள திலீப், பத்தாவது வகுப்பை முடித்து விட்டு மணப்பாறையில் உள்ள மான்போர்ட் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறான்.
முருகேசனின் செயலைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மணப்பாறை பிரிவு அவசரமாக கூடி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அகில் இந்திய தலைமை அலுவலகத்திற்கும் இந்த தீர்மான நகலை அனுப்பியுள்ளனர்.
டாக்டர் முருகேசனின் செயல், ஒரு உயிருடன் விளையாடியதற்கு ஒப்பாகும். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் மோகன்தாஸ், முருகேசனின் செயலை கடுமையாக கண்டித்துள்ளார். அவரது டாக்டர் படிப்பை ரத்து செய்யும் வகையில் பரிந்துரை செய்ய முடியும். திருச்சி மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் அறிக்கை கிடைத்தவுடன் இதுகுறித்து தீர்மானிப்போம் என்றார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கோட்டாட்சியர் இந்த விசாரணையை நடத்தி ஆட்சித் தலைவருக்கு அறிக்கை கொடுப்பார். அதன் அடிப்படையில் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
http://thatstamil.oneindia.in/news/2007/06/21/doctors.html
'சிசேரியன்' சர்ச்சை: டாக்டர் தம்பதி கைது மகன் தலைமறைவு
ஜூன் 25, 2007
திருச்சி: கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவன் பிரசவம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய மணப்பாறை டாக்டர் முருகேசன் மற்றும் அவரது மனைவி டாக்டர் காந்திமதி ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 15 வயதே ஆகும் 11வது வகுப்பு படிக்கும் திலீபன் ராஜ் என்பவர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ததாக அவரது தந்தை டாக்டர் முருகேசன் சமீபத்தில் டாக்டர்கள் சங்க கூட்டத்தில் அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கின்னஸ் சாதனைக்காக இந்த பிரசவத்தை திலீபன் ராஜ் பார்த்ததாக அவரது தந்தை கூறியது மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. சிறுவனை விட்டுப் பிரசவம் பார்க்க வைத்த டாக்டர் தம்பதியை கைது செய்ய வேண்டும், அவர்கள் டாக்டர் தொழில் பார்க்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆர்.டி.ஓ ரமணீதரன் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் இறங்கியது.
கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் டாக்டர் தம்பதி, திலீபன் ராஜ், பிரசவத்திற்கு வந்த பெண் நீலா, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதுதவிர முருகேசனின் மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பிரசவங்கள், சிசேரியன் அறுவைச் சிகிச்சை குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் சேகரித்தனர்.
பிரசவம் செய்து கொண்ட பெண்களிடமும் நேரில் போய் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டதட்ட 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.
விசாரணையின் முக்கிய திருப்பமாக, திலீபன்ராஜ் சிசேரியன் செய்து, குழந்தையை வெளியே எடுப்பது போன்ற விசிடியையும் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். விசாரணை அறிக்கையையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில், டாக்டர் தம்பதியைக் கைது செய்யுமாறு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை முருகேசனும், காந்திமதியும் கைது செய்யப்பட்டனர்.
உடனடியாக வளநாடு காவல் நிலையத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் மணப்பாறை போலீஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இன்று மாலைக்குள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில் அதிகாரிகள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் டாக்டர் தம்பதிகள் செய்த தவறு நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அதில் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திலீபன் ராஜ் தலைமறைவு
இதற்கிடையே, டாக்டர் தம்பதியின் மகனும், சிசேரியன் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளவருமான திலீபன் ராஜ் தலைமறைவாகி விட்டார். உறவினர்கள் யாருடைய வீட்டிலாவது அவர் பதுங்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2007/06/25/doctors.html
மகன் சாதனைக்காக சட்டத்தை மீறினாரா மருத்துவர்?
‘‘உயிர் என்றால் இளப்பமா?
திருச்சி மாவட்டம்
மணப்பாறையில் ‘மதி சர்ஜிகல் மற்றும் மகப் பேறு மருத்துவமனை’யை டாக்டர் முருகேசன் என்பவரும் அவரது மனைவி டாக்டர் காந்திமதியும் நடத்திவருகிறார்கள். இவர்களுக்கு திலீபன்ராஜ் என்ற ஒரே மகன். பத்தாம் வகுப்பு முடித்து தற்போது பதினோராம் வகுப்புக்குப் போயிருக்கும் திலீபன்ராஜை சாதனைக்காக(!) சிசேரியன் ஆபரேஷன் செய்ய வைத்திருக்கிறார் முருகேசன். அதை வீடியோவாகவும் எடுத்து கடந்த மாதம் 6-ம் தேதி மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) கிளைக் கூட்டத்தில் சக4 டாக்டர்களுக்குப் போட்டுக் காண்பித்திருக்கிறார் டாக்டர் முருகேசன். அதைப் பார்த்து திகைத்துப்போன சக டாக்டர்கள், முருகேசனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இதையடுத்து இந்த விவகாரம் மருத்துவ உலகில் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஐ.எம்.ஏ-வின் மணப்பாறை செயலாளர் டாக்டர் பிரசாத்திடம் பேசியபோது, ‘‘அன்று முருகேசன் அந்த சி.டி-யை போட்டுக் காட்டியதும் அதிர்ந்து போனோம். ‘நீங்கள் செய்திருப்பது மருத்துவத் துறைக்கே எதிரான செயல். டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமா இது..?’ என்று அவரைக் கண்டித்தோம். அவரோ, ‘உங்களால் என் மகனின் சாதனையை ஜீரணிக்க முடிய வில்லை. உங்கள் பிள்ளை இப்படி செய்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடுவீர்கள்...’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். அதன் பிறகுதான் எங்கள் மாநிலத் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாக இது குறித்து புகார் அனுப்பினோம். இந்நிலையில், இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் வரை போய் இப்போது ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது...’��
என்றார்.
டாக்டர் முருகேசன் தனது அக்கா பழனியம்மாளின் மகளான நீலாவுக்குதான் மகனை விட்டு சிசேரியன் ஆபரேஷன் செய்திருப்பதாக தெரிந்ததும் விராலிமலை சென்று நீலாவை சந்தித்துப்பேசினோம்.
‘‘அந்த ஆஸ்பத்திரியிலதான் என்னை பிரசவத்துக்கு சேர்த்தாங்க. ஆபரேஷன் பண்ணித்தான் குழந்தையை எடுத்தாங்க. யார் ஆபரேஷன் பண்ணினாங்கன்னு எனக்கு தெரியாது. நல்லபடியா குழந்தையை எடுத்து கொடுத்ததும் பணத்தை கட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். ஆபரேஷனுக்கு பிறகு எனக்கு வேற எந்த தொல்லையும் இல்லை. எங்களுக்கு வேற எதுவும் தெரியாது’’ என்றார் அப்பாவியாக.
ஐ.எம்.ஏ-வின் மாநில செயலாள ரான டாக்டர் ரவிசங்கர் நம்மிடம், ‘‘விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்ததும் முருகேசனிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டோம். ‘தன் பையன் ஆபரேஷன் செய்ய வில்லையென்றும், தான் ஆபரேஷன் செய்தபோது அவன் உடனிருந்தான்’ என்றும் விளக்கமளித்தார். அதில் எங்களுக்கு திருப்தி இல்லை. அடுத்து அவரை நேரில் அழைத்து விசாரிக்க இருக்கிறோம். அவர் தவறு செய்திருப்பது உறுதியானாலும் எங்களால் அவரை சங்கத்திலிருந்து நீக்க மட்டுமே முடியும். மெடிக்கல் கவுன்சில்தான் அவருக்குத் தக்க தண்டனை வழங்க முடியும்’’ என்றார்.
வெகுசிரமத்துக்குப் பிறகு முருகேசனின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாக அவரிடம் பேசினோம். ‘‘என் மகன் திலீபன்ராஜ் அறுவை சிகிச்சை செய்ததாக சொல்வது முற்றிலும் தவறானது. நான் அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருந்தபோது அவனும் ஆபரேஷன் தியேட்டரில்தான் இருந்தான். என் அருகில் நின்று ஆபரே ஷனை கவனித்துக் கொண்டிருந்தான். கிருமிகள் எதுவும் பரவி விடக்கூடாது என்பதால் அவன் கையிலும் உறை மாட்டியிருந்தான். நடந்தது இதுதான். இதைத் தவிர, என் பையன் ஆபரேஷன் செய்தான் என்பதும், அதை நான் வீடியோவாக போட்டு காட்டினேன் என்பதும் சுத்த பொய்’’ என தன் மீதான குற்றச்சாட்டை ஒரேடியாக மறுத்தார்.
சிறுவன் செய்த ஆபரேஷன் விஷயத்தால் கொதித்துப் போன மனித உரிமை ஆர்வலர்களான சில வக்கீல்கள், ‘முருகேசன் மீதும் அவர் மகன் மீதும் நடவ டிக்கை எடுக்கவேண்டும்’ என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் வச்சானியிடம் புகார் கொடுத்தனர்.
அந்த வக்கீல்களில் ராஜசேகர், சுப்ரமணி ஆகிய இருவரிடம் பேசினோம். ‘‘இப்படி உயிரோட விளையாடறது பெரிய கொடுமை. மகன் சாதனை செய்யவேண்டுமென்பதற்காக இரண்டு உயிர்களோடு விளையாடிப் பார்த்திருக்கிறார் முருகேசன். கேட்டால் ‘என் அக்கா மகளுக்குத் தான் எனது பையன் ஆபரேஷன் செய்தான்’ என்கிறார். அவருடைய அக்கா மகள் உயிர் என்றால் இளப்பமா? ஆபரேஷன் ஃபெயிலியராகி அந்தப் பெண் இறந்து போயிருந்தால் என்ன செய்வார்? மருத்துவத் தொழிலையே இழிவுபடுத்தியிருக்கும் இவர், டாக்டராக நீடிக்கக்கூடாது. இவருடைய மருத்துவர் பட்டத்தை உடனடியாகப் பறிக்க வேண்டும். இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்...’’ என்று கோபப் பட்டனர்.
வழக்கறிஞர்களின் புகாரைத் தொடர்ந்து திருச்சி ஆர்.டி.ஓ&வான ரமணிதரன், மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் எழிலரசி, உதவி இயக்குநர் வீரபாண்டியன் ஆகியோர் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கலெக்டர் ஆஷிஸ் வச்சானி.
நன்றி - விகடன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
3 கருத்துகள்:
இதை சரியாக செய்ய எத்தனை பேரில் பழகி இருப்பான், எத்தனை செத்திச்சுதோ, எத்தனை பேர் பாதிப்படைந்தாங்களோ?
Are they really educated or not? That Doctor family don't have any humanity concern I guess. They interested in their own records or whichever damn reason that they involve their son with the Caesarian. This is uncivilised act.
இதே அமெரிக்ககாரன் செஞ்சா 15 வயது சிறுவன் சாதனை பின்பு கைது செய்ய்து சிறையில் அடைப்புனு தமிழ் பத்திரிக்கைகள் வெளியிட்டு இருக்கும்
காசுக்காக பிரசவம் இங்கே கத்தில் முடிகிறது 99%
கருத்துரையிடுக