வியாழன், மே 24, 2007

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!




தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்....?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர... ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல.... கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே... கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா... நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஆந்திராவிற்கு மாமா N.T.R- ஐ கவிழ்த்து ஒரு சந்திரபாபு கிடைத்தார். தமிழ் நாட்டிற்கு ???

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us