வியாழன், மார்ச் 22, 2007

பாகிஸ்தான் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர், நஞ்சூட்டிக் கொலை, பிரேத பரிசோதனையில் தெரிந்தது.


பாகிஸ்தான் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமேக்காவிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியா மற்றும் அயர்லாந்திடம் அடுத்தடுத்து படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் மர்மமான முறையில் இறந்தார்.

ஜமேக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஹோட்டல் அறையில் அவர் வாந்தி எடுத்தும், மூக்கில் இரத்தம் வழிந்த நிலையிலும் மயங்கிக் கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொப் வூல்மரின் மர்ம மரணம் குறித்து ஜமேக்கா பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருடன் சாப்பிடும் பொப் வூல்மர் சம்பவத்தன்று அவர்களுடன் சாப்பிடவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

பொப் வூல்மர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காரில் சென்றால் 15 நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடைந்து விடலாம். ஆனால், அவரை ஒரு மணிநேரத்துக்குப் பிறகே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அதுவரை அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், அவரது அறையில் இரத்தக்கறை படிந்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை ஜமேக்கா பொலிஸாரும் மறுக்கவில்லை. சம்பவத்தன்று பொப் வூல்மரை சந்தித்தவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் கொடுத்து கொலையா?

சூதாட்டக்காரர்களுடன் ஒப்பந்தம்செய்து கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள், வேண்டுமென்றே தோற்றதாகவும் இது பொப் வூல்மருக்குத் தெரிய வந்ததால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் தோல்வியை தாங்க முடியாமல் அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும் பல்வேறு யூகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பிரேத பரிசோதனை தாமதம்

இருப்பினும், பொப் வூல்மரின் மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்தான் உறுதியாகத் தெரியவரும். கிங்ஸ்டன் நகரின் உள்ளூர் சட்டப்படி மரணம் அடைந்தவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடன்தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால், பொப் வூல்மரின் குடும்பத்தினர் தென்னாபிரிக்காவில் கேப்டவுண் நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர்களால் உரிய நேரத்தில் வர இயலாத சூழ்நிலை உள்ளது.

எனவே, தாங்கள் வராமலேயே பிரேத பரிசோதனையை நடத்த ஜமேக்கா அதிகாரிகளுக்கு பொப் வூல்மரின் குடும்பத்தினர் அதிகாரம் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனையை கூடவே இருந்து கவனித்து பொப் வூல்மரின் உடலை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படி பாகிஸ்தான் அணியின் மற்றொரு பயிற்சியாளரான முரே ஸ்ரீவ்சனைப் பொப் வூல்மரின் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

பொப் வூல்மர் குடும்பத்தினரை எதிர்பார்த்து காத்திருந்ததால் பிரேத பரிசோதனை தாமதமாகவே தொடங்கியுள்ளது. அதன் அறிக்கை நேற்று வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டதாக பாகிஸ்தான் அணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன் பின்தான் பொப் வூல்மரின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் என்று தெரிகிறது.

வெளியேறத் தடை

பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று சிம்பாப்வேயை எதிர்கொண்டது. அதன் பின் இன்று பாகிஸ்தான் அணி மேற்கிந்தியாவிலிருந்து தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தது.

ஆனால், பொப் வூல்மர் மரணம் குறித்த மர்மம் தீரும் வரை ஜமேக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஜமேக்கா பொலிஸார், பாகிஸ்தான் அணியினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் தாயகம் திரும்பும் திட்டத்தை சனிக்கிழமைக்கு பாகிஸ்தான் அணியினர் தள்ளி வைத்துள்ளனர்
http://www.thinakkural.com/news/2007/3/22/...s_page23731.htm


பொப் வூல்மர் நஞ்சூட்டிக் கொலை பிரேத பரிசோதனையில் தெரிந்தது.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணிப் பயிற்சியாளர் பொப் வூல்மர் கொலை செய்யப்பட்டிருப்பதாக மேற்கிந்திய பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வூல்மரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியங்களை உறுதிப்படுத்துவதால் தற்போது வூல்மரின் மரணம் ஒரு கொலையென்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ஜமேக்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொப் வூல்மரின் உடல் ஜமேக்கா ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலின் உட் பகுதிகளை வெட்டி எடுத்து முழுமையாக பரிசோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் பல தடயங்கள் தென்பட்டன.

குடல் பகுதியை ஆராய்ந்து பார்த்த போது அதற்குள் இருந்த உணவில் விஷம் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை ஜமேக்கா பொலிஸார் உறுதி செய்தனர். பொப் வூல்மர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதாவது யாரோ பொப் வூல்மரை விஷம் கொடுத்து கொன்றிருக்கிறார்கள் என்று ஜமேக்கா பொலிஸார் கருதுகிறார்கள். எனவே, இந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் பொப் வூல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்து செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சப்பிராஸ் நவாசும் பொப் வூல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

இது பற்றி செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர் "எனக்கு கிடைத்த தகவல்படி பொப் வூல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சூதாட்டக்காரர்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

பொப் வூல்மர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிந்ததால் பாகிஸ்தான் வீரர்களை நாட்டை விட்டு வெளியேற ஜமேக்கா அரசு தடைவிதித்துள்ளது. பாகிஸ்தான் அணி நேற்று சிம்பாப்வே அணியுடன் மோதியது. இது முடிந்ததும் நாடு திரும்ப முடிவு செய்திருந்தனர். ஆனால், ஜமேக்கா அரசு தாங்கள் அனுமதிக்கும் வரை யாரும் நாடு திரும்பக் கூடாது என்று கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணம் என்று கருதிய விடயம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சூதாட்டக் காரர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிவதால் பல பிரபலங்கள் இதில் சிக்க வாய்ப்புள்ளது.
http://www.thinakkural.com/news/2007/3/22/...s_page23732.htm

1 கருத்து:

Bharateeyamodernprince சொன்னது…

கிரிக்கெட் சூதாடிகள் செய்திருக்கலாம்... இது ஒரு யூகம்தான். Scotland Yard காவல் துறையினர் களமிறங்க உள்ளனர். Lets wait and see!

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us