

ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.
ஹைதரபாத் திரைப்படச் சங்கமும், ஆந்திரப் பிரதேச திரைப்பட இயக்குநர் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த அனைத்துலக திரைப்பட விழா, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.03.07) தொடங்கி 29.03.07 ஆம் நாள் வரை நடைபெறுகின்றது.
உலகின் பல்வேறு மொழிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
ஆசிய அளவில் மிக முக்கியமாக தீவிர சினிமா ஆர்வலர்களாலும், அறிவுசார் வர்க்கத்தாலும் கவனிக்கப்படுகிற இந்த விழாவிற்கு ஆந்திர மாநில அரசும், பிரெஞ்சு தூதரகமும் இணைந்து அனுசரணை வழங்குகின்றன.
இந்த விழாவில் ஈழத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படமான ''ஆணிவேர்' திரைப்படம் இடம்பெறுவது ஈழத்தமிழர்கள் பெருமைப்படத்தக்க விடயம் ஆகும்.
இது பற்றி தற்போது ஹைதரபாத்தில் தங்கியிருக்கும் 'ஆணிவேர்' திரைப்பட இயக்குநர் ஜாணுடன் பேசிய போது.
"பொதுவாக ஒரு படத்தை எடுத்துவிட்டு உலகு எங்கிலும் நடக்கும் திரைப்பட விழாக்களுக்கு நாம்தான் படங்களை அனுப்புவோம். ஆனால் ஹைதரபாத் விழாவில் நடந்தது வேறு.
நான்கு நாட்களுக்கு முன்பு, அரி சாஸ்திரி என்கிற தெலுங்கு தயாரிப்பாளர் தொலைபேசியில் அழைத்து 'ஆணிவேர்' திரைப்படம் இந்த படவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துவிட்டு, நிறைய பாராட்டினார். இவருக்கு எப்படி 'ஆணிவேர்' திரைப்படம் பற்றி தெரியவந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் திரைப்பட விழாக்களுக்காக அமைக்கப்படும் ஜூரிக்கள் அனைவருமே இந்த படத்தை பார்த்திருக்கின்றார்கள். அதில் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ணவம், சி.ராம்கோபால் வர்மா போன்ற பிரபல இயக்குநர்கள் படத்தை பார்த்துவிட்டு தேர்ந்தெடுத்துவிட்டு அவர்கள்தான் என்னை அழைத்துக் கூறினார்கள்.
'ஆணிவேர்' படத்தை அவர்கள் சப்டைட்டில் இல்லாமல் பார்த்திருக்கின்றார்கள். அவர்கள் கேட்டதற்கு இணங்க ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய 'ஆணிவேர்' படத்தை இப்போதுதான் நான் கொடுத்திருக்கிறேன். அவர்கள் குறிப்பிட்ட இன்னொரு விடயம் வெறும் ஆறு பேர் போய் யுத்த பூமியில் சமகால பிரச்சனை குறித்து படம் எடுத்தது உங்கள் குழுவின் ஆர்வத்தையும் பொறுப்பையும் அக்கறையையும் காட்டுகிறது என்று பாராட்டினார்கள்.
இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் சஞ்சய், நடிகை மதுமிதா, நடிகர் நந்தா இன்னும் இந்த படத்தை வாழ வைத்த ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் நான் நினைக்கிறேன்" என்றார் 'ஆணிவேர்' படத்தின் இயக்குநர் ஜாண்.
நன்றி:-புதினம்.
3 கருத்துகள்:
பிருந்தன்,
இத்திரைப்பட விழா எப்பொழுது நடக்கிறது (அல்லது நடந்து முடிந்து விட்டதா?) என்பது பற்றிய விவரங்கள் தெரியுமா?
தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்…
"அருட்பெருங்கோ said...
பிருந்தன்,
இத்திரைப்பட விழா எப்பொழுது நடக்கிறது (அல்லது நடந்து முடிந்து விட்டதா?) என்பது பற்றிய விவரங்கள் தெரியுமா?
தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்…"
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.03.07) தொடங்கி 29.03.07 ஆம் நாள் வரை நடைபெறுகின்றது.
தகவலுக்கு நன்றி!
தமிழ் திரை உலகம் ஏன் இந்த படத்தை கண்டுகொள்ள வில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது?
கருத்துரையிடுக