செவ்வாய், பிப்ரவரி 27, 2007

ஜெயலலிதா பழைய பல்லவி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியான நேரம்-ஜெ.

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக தமிழகம் மாறி விட்டது. திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய இது போதுமானது. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய இதுவே சரியான தருணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இன்று இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது கடந்த 40 ஆண்டு காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை. லால் பகதூர் சாஸ்திரி, பண்டார நாயகே ஒப்பந்தத்திற்கு முன்பிருந்தே நிலவி வரும் பிரச்சினை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்பதும், தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இலங்கை பல காலம் இருந்தது என்பதும் வரலாற்று உண்மை.

தலைமுறை தலைமுறையாக இருக்கிற தமிழர்களுக்கு எல்லா வகையான சம உரிமைகளையும் இலங்கை அரசு தந்தேயாக வேண்டும். சிங்கள மொழி பேசுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை தமிழர்களுக்கும் உண்டு என்பதை இலங்கை அரசு மறந்து விடக் கூடாது.

சாஸ்திரிசிரிமாவோ பண்டார நாயகே ஒப்பந்தத்தின்போது, தமிழர்களுக்குப் பாதகமான பல விஷயங்கள் சேர்க்கப்பட்டு, ஆண்டாண்டு காலமாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட தமிழகம் நோக்கி அகதிகளாக வந்தனர்.

அப்போது ஆரம்பித்த இலங்கைப் பிரச்சினை சிங்கள இனிவெறியர்களால் தூபம் போடப்பட்டு இப்போது பெரிய அளவில் கடந்த 24 ஆண்டுகளாக நிலவி வருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்களை எதிர்ப்பதிலும் உறுதியாக உள்ளது.

நமது தமிழ் மொழி பேசும் மக்கள், நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தரப்பட வேண்டும் என்ற கருத்து தமிழகத்தில் சிலரிடம் இருந்தாலும், இறுதியில் அது தமிழகத்தில் தீவிரவாத பயங்கரவாத கலாச்சாரத்தை கொண்டு வந்து விடும் என்ற காரணத்தால் அதை அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த 14ம் தேதி இந்தியக் கடலோரக் காவல் படை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், தோட்டாகிகள், தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் மனித வெடிகுண்டு பெல்ட்டுகள், வெடிமருந்துப் பொருட்கள் ஆகியவற்றையும், மண்டபம் பகுதியில் இலங்கைக்கு ஆயுதங்களை கடத்திச் செல்வதற்காக வந்த படகு ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

15ம் தேதி 4000 கிலோ வெடிபொருட்கள் கொண்ட படகை தனுஷ்கோடி அருகே பிடித்துள்ளனர். தூத்துக்குடியில் வெடிபொருட்களை கொள்முதல் செய்து விட்டு இலங்கை திரும்பும்போது அந்தப் படகு பிடிபட்டதாக செய்தி வெளியானது.

16ம் தேதியன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி, கடலூர் ஆகிய பகுதிகளை மையமாகப் பயன்படுத்தி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்படும் வெடிபொருட்கள்,

ஆயுதங்கள் ஆகியவற்ரை மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை சிறு சிறு மூட்டைகளா கட்டப்பட்டு தூத்துக்குடி, ராமேஸ்வரம், கோடியக்கரை, தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டு பிறகு இலங்கைக்கு படகுகள் மூலம் கடத்திச் செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் பணிகளுக்கு தமிழகத்தில் பல ஏஜென்டுகள் இருப்பதும் தெளிவாக தெரிய வந்துள்ளது. ராமேஸ்வரத்தை ஒட்டி இலங்கைக்கு நடுவே இந்தியாவைச் சேர்ந்த ஆளில்லாத பல தீவுகள் உள்ளன. இவை ஏற்கனவே தீவிரவாதிகள், பயங்கரவாதிகளின் தளங்களாக, ஆயுதங்களைப் பதுக்கி வைக்கும் கிடங்குகளாக மாறி விட்டன.

தமிழகத்தின் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மதுரைக்கும், கடலோரப் பகுதிகளுக்கும் பயங்கரமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் வந்து சேருகின்றன என்றால், தமிழகத்தின் சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து எப்படி இந்தப் பொருட்கள் வந்து சேருகின்றன என்பதற்கு கருணாநிதி என்ன விளக்கம் தரப் போகிறார்?

திமுக ஆட்சிக்கு வந்தது முதலே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது. தீவிரவாத இயக்கங்களும், பயங்கரவாத இயக்கங்களும் பெரிய அளவில் இங்கு இயங்கத் தொடங்கி விட்டன. தீவிரவாதம், பயங்கரவாதத்தை நோக்கி தமிழகம் தள்ளப்பட்டு விட்டது.

விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்தால்தான் 1991ம் ஆண்டு திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இப்போதும் அதே காரணம் மிக வலுவாக நிலவுகிறது. எனவே திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய இதுவே போதுமானதாகும், ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய இதுவே சரியான தருணம்.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்தையும், நாட்டையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
http://thatstamil.oneindia.in/news/2007/02/26/jaya.html

4 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிடுவதே நல்லது என்று நானும் கருதுகிறேன்.

கலைஞர் மத்தளம் மாதிரி ஜெயலலிதாவிடம் ஒருபுறமும், ஈழத்தமிழர்களிடம் மறுபுறமும் அடிவாங்குவது காண சகிக்கவில்லை.

இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்களேன்.

பிருந்தன் சொன்னது…

லக்கி அண்ணா மனதை தளர விடாதீங்க, அரசியலில இதுவெல்லாம் சாதாரணம்:-))

பிருந்தன் சொன்னது…

உணர்வுகள் ஒட்டுமொத்த ஈழத்தமிழருக்கே எதிரானவர், அவர் எப்படி ஈழாத்தமிழருக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கும் கலைஞரை வாழ்த்துவார், தற்சமயம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பலர் பேசினாலும், அதிகாரம் இருப்பது கலைஞரிடம்தான், மத்தியில் செல்வாக்கும் இருப்பது கலைஞரிடம்தான். ஈழத்தமிழருக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்றால் அது அதிகாரம் உடைய கலைஞரால் மட்டுமே முடியும், ஈழத்தமிழருக்கு எதிராக செயற்படுபவர்கள் அதை குழப்பத்தானே பார்ப்பார்கள். லக்கி யதார்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.

பெயரில்லா சொன்னது…

உங்கள் பதிவில் உங்கள் அறிமுகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் படம் (குழந்தை ஒன்று புகைப் பிடிப்பதுபோல்) மிகவும் வக்கிரமமாக இருக்கிறது. தயவு செய்து அதை அகற்றி விடுங்கள்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us