வெள்ளி, அக்டோபர் 31, 2008

தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா?: "ஜனசக்தி" நாளேடு கேள்வி

தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள இலங்கைத் தமிழர் நிவாரண நிதி திரட்டல் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான தமிழ் நாளிதழான "ஜனசக்தி" கேள்வி எழுப்பியுள்ளது.

"இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம நீட்டுவது நமது இன்றியமையாக கடமையாகும்"

"ஈழத்தில் வேதனையால் விழி நீர்பெருக்கி வாடிக் கொண்டிருக்கும் சகோர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் இயன்றதை வழங்கி உதவிடுவிர்"

"இலங்கைத் தமிழர் நிவாரணை நிதி முதல்வர் கலைஞர் பத்து இலட்சம் ரூபாய் வழங்கினார்"

29.10.08 முரசொலியின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள வரிச் செய்திகள்.
இது முதல்வரின் ஏடு. வேண்டுகோளும் முதல்வரால் வெளியிடப்பட்டள்ளது.
கருணை உள்ளம் கொண்டு, கண்ணீர் வடிப்போருக்கு உதவிட முற்படுவதைக் குறைகூறுவதே ஒரு பெருங்குற்றமாகும். ஆனால் இதற்குள் அரசியல் கேள்விகள் அடங்கியுள்ளன.

நாங்களும் - நீங்களும், சகோதர - சகோதரிகளுக்கு உதவி எனும்போது, புலிக்கு உதவி என்பதும் கேட்கிறதா?

தமிழ்நாட்டு மக்கள், இலங்கையில் பிறந்த ஒரே காரணத்தால், பல்லாண்டுகளாக வேட்டையாடப்பட்டு வரும், சகோரதர சகோதரிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய எப்போதும் தயங்கியதே இல்லை.

விடுதலைப் புலிகள் மீது மட்டும் பாயும் குண்டும், சுடும் துப்பாக்கியும் உண்டா? மக்களைக் கவசமாக பயன்படுத்துவதாகக் கூறுவோர் வானூர்தி குண்டு வீச்சுக்கு கவசம் கண்டு பிடித்துள்ளனரா? அரசியல் நெறி என்ற பெயரால், கொலைகாரர்கட்குத் துணை போகலாமா? இலங்கைத் தமிழர்களான சகோதர - சகோதரிகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தடுக்க இந்தியத் தமிழ் மக்கள் நேரில் சென்று உதவிட முடியாது. எனவேதான் தமிழ் மொழி பேசும் இந்தியக் குடிமக்கள் இந்திய அரசிடம் சில வேண்டுகோள்களை முன்வைத்தனர்.

1. சிறிலங்கா அரசிடம் பேசி வானூர்தி தரைப்படைத் தாக்குதலை நிறுத்தச் செய்யுங்கள்.

2. இந்திய அரசு, எங்கள் சகோதர - சகோதரிகளைச் சுட்டுக்கொல்ல, இந்திய அரசு ஆயுதங்களையும், இராணுவ வீரர்களையும் அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

3. அகதிகளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கட்கு இந்திய அரசு நிவாரணப் பொருட்கள் அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தரும் பொருளை அனுப்பி அனுமதி வேண்டும்.

மக்கள் இந்த வேண்டுகோள்களை வைப்பதற்கு முன்பே, மத்திய அரசுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள 'இக்கட்டான நேரம்' - அதற்குரிய காரணம் தெரியும்.
தெரிந்தும் எந்த முடிவையாவது நடிவடிக்கையாவது எடுத்ததா?

அனைத்து கட்சிக் கூட்டம், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவில நேரிடும் என்ற எச்சரிக்கைக்கு பின் வெளிவிவகார அமைச்சர், தமிழக முதல்வரைச் சந்தித்துள்ளார்.

போர் நிறுத்தப்படும் என்று கூறவில்லை. குண்டுகள் சுடுகிற வானோடிகளை அனுப்ப மாட்டோம் எனக் கூறவில்லை. மத்திய அரசுக்கு ஆபத்தில்லை என்றே கூறினார்.

எனவே, மத்திய அரசு தானாக மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எதையும் செய்யவில்லை. எனவே தான் முதல்வரின் நம்பிக்கை மக்களுக்கு ஏற்படவில்லை.
இப்போது நன்கொடை வசூல், தானம் உதவி என்ற தமிழக முதல்வர் தொடங்கியிருக்கிறார். இவை எப்படி அங்கு போய்ச் சேரும்? யார் இதை அவதிப்பட்ட மக்களுக்கு வழங்குவது?

மத்திய அரசு, சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவ உதவி செய்வதால், இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத துணை புரியும் டில்லியிடம் மன்றாட மக்கள் தயாராக இல்லை. அங்கிருந்து எந்த நற்காரியத்தையும் எதிர்பார்க்க இயலவில்லை.

ஆனால் தமிழக முதல்வரிடம் ஒரே ஒரு வேண்டுகோளுக்கு விடை கேட்கிறோம்.

1. குண்டுத்தாக்குதலை நிறுத்தாமல் இருக்கும்போது அங்கு உதவிப் பொருட்களை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?

2. சில மாதங்கட்கு முன்னர் திரு.பழ. நெடுமாறன், மருத்துவப் பொருட்களை அனுப்பிட, வசூலித்து வைத்த பின்னர் கேட்டபோது மறுக்கப்ட்டதே. ஏன்? இப்போது எங்கிருந்து வழி பிறந்தது?

3. இலங்கைத் தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா? அவர்கள் கையால் தமிழ் மக்கள் வாங்கிச் சாப்பிடுவார்களா?

சர்ச்சைக்கு உட்படாத சமூகத் தலைவர்கள் நேரில் சென்று உணவு உதவி வழங்கிட சிறிலங்கா அரசும் இந்திய அரசும் மறுப்பது ஏன்?

எல்லாவற்றிற்கும் மேலாக குண்டு போட்டுக் கொல்லப்படுவது நிறுத்தப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக ராஐபக்ச பிரகடனம் செய்துவிட்ட பிறகு நீங்க்ள கருணையுடன் அனுப்பும் பாலும், பருப்பும், பாகும், சைவ - அசைவ விருந்தாக அமைந்தாலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சாகத்தானே வேண்டும்.
பட்டினி கிடந்து குண்டடிப்பட்டுச் சாகாதே நன்கு சாப்பிட்டு விட்டு சா என்று கூறுவதாகத்தானே உங்களது அழைப்பு அமைந்துள்ளது.

முதலில் குண்டுப்போரை நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையேல் இதுவும் கொடை மடம் என்றே வருணிக்கப்ட நேரிடும். மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? என்பதை முதல்வரின் முடிவுக்கே விட்டுவிடலாம்.
இது கட்சியின் கோரிக்கை அல்ல. மக்களின் புலம்பல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

buthinam.com

2 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இந்திய-இலங்கை அரசியல் நாடகத்தில் தமிழனின் பிணங்கள்...

பெயரில்லா சொன்னது…

கலைஞர் கருணாநிதி - தமிழர்களில் அனுபவமிக்க, மூத்த நாடகக் கலைஞன்

- தேசப்பித்தன்

வன்னியிலிருந்து அனுப்பப்பட்டதாக சொல்லப்படும் ஓர் இறுவட்டை பார்த்ததும், தமிழக முதலமைச்சரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்று 29ம் திகதி சுபமாக, அதாவது முதல்வர் கருணாநிதிக்கு சுபமாக முடிவடைந்துள்ளது.

ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி ஆறு அம்ச தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்துடன் (?) ஆரம்பித்த கூத்தை, சொந்தப் பணத்தில் பத்து இலட்சம் ரூபாயை வழங்கியும் இந்திய மத்திய அரசின் முயற்சிகளுக்கு நன்றி கூறியும் நிறைவு செய்து வைத்துள்ளார் கருணாநிதி. இந்தியா என்ன செய்து கிழித்துவிட்டதென்று நன்றி கூறினாரோ, அது வேறு விடயம்.

கலைஞர் அரங்கேற்றிய இந்த நாடகத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தன. தமிழக முதல்வர், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்தியப் பிரதமர், காங்கிரசின் தலைவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழ் சினிமாத்துறை, இலங்கை அரச அதிபர், இலங்கை அதிபரின் ஆலோசகர் எனப் பலரும் பங்கு பற்றியிருந்தனர். நாடகத்தில் பங்கு பற்றிய அனைவருமே தமது தரப்புக்களிற்கு ஏதுவான சாதகமான இலாபப் பங்குகளை பெற்றுக் கொள்ளத் தவறவில்லை.

இந்த கூத்தாட்டத்தில் பயனடைந்தவர் என்றால் அது கருணாநிதியும் அவரது குடும்ப அரசியல் தலைமையும், இந்திய மத்திய அரசின் அதிகார மையமும் எனலாம். இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் இலங்கையின் இனவாத அரசியல் தலைவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால், ம.தி.மு.கவின் தலைவர்களும், தமிழ்ப் பற்றுக்கொண்ட தமிழ்த் திரை இயக்குநர்களும் எனலாம். ஏமாற்றப்பட்டவர்கள் என்ற வகையில் வஞ்சக நோக்கங்கள் எதுவுமின்றி ஈழத் தமிழர்களுக்காக வெயிலிலும் கடும் மழையிலும் தமது ஆதரவுக் கரங்களை உயர்த்திய சாதாரண தமிழகத் தமிழர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். ஏமாறுவோம் எனத் தெரிந்தும் சொந்த மக்களையும் ஏமாற்றி, தாங்களும் ஏமாளியானவர்கள் யாரென்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் போன்ற தமிழக தலைவர்களும்தான். ஒட்டுமொத்தமாக, இந்த நாடகத்தில் பழைய அனுபவத்தையே பாடமாகக் கற்றுக் கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமே என்றால் அதை மறுப்பதற்குமில்லை.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு என்பவற்றால் மதிப்பிழந்திருந்த கருணாநிதி தலைமையிலான ஆளும் தரப்பு, மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேவேளை அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்ற சட்டசபைத் தேர்தல்களுக்கான கூட்டணியாக மீண்டும் காங்கிரசுடனான தற்போதைய கூட்டை பலமானதொரு நிலையில் புதுப்பிக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதாவது மத்தியில் தமிழக கூட்டணியின் 40 எம்.பிக்கள் எனும் பலத்தை ஆளும் காங்கிரசுக்கு உணர்த்த வேண்டிய தருணமாகவும் இன்றைய காலம் தி.மு.கவிற்கு விளங்குகின்றது.

ஆனந்தவிகடன் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைந்து நடாத்திய கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தப்பட்ட புலிகள் இயக்கம் அதன் தலைமைத்துவம் ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பன பற்றிய தமிழக மக்களின் உணர்வலைகளை சாதகமாக பயன்படுத்த துணிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நாடகக் கூத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் தெரியும்..

மூதூர் கிழக்கில் இருந்து தமிழ்மக்கள் விரட்டப்பட்டு கிழக்கில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து அவலப்பட்டு, குண்டுவீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் முன்னூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டபோது வாய்மூடி கண்ணயர்ந்திருந்த கருணாநிதி, மத்திய அரசின் இலங்கைத் தமிழர் கொள்கையே தனது கொள்கை என்று சப்பைக் கட்டு கட்டிய கருணாநிதி, விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் எக்காலத்திலும் இடமில்லை என்று கூறி, இலங்கை அகதிகளுக்கெதிரான போக்கை சொல்லிலும் செயலிலும் காட்டி வந்த கருணாநிதி

இன்று இறுவெட்டை பார்த்து கண்ணீர்விட்டு, பத்து இலட்சம் ரூபா பணம் கொடுத்து நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்க தயாராகின்றார் என்றால் அது தேர்தல் நோக்கத்தைத் தவிர வேறொன்றில்லை.

தமிழ்நாட்டு எம்.பிக்கள் பதவிகளை துறக்க மாட்டார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போல இந்திய நடுவண் அரசும் கூட நன்கு அறியும். இருந்தும் கருணாநிதியின் நாட்டியத்திற்கு உணர்ச்சியூட்டி இலங்கையை மிரட்டியதன் மூலம் இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருக்காது என்பதும் உண்மை.

ஈழப் போராட்டத்தின் இறுதி மூலோபாயமாக ஆயுதப் போராட்டம் அமைந்துள்ளதும், அதன் முதன்மையானதும், ஒரே போராட்ட அமைப்பாகவும் ஜனநாயக மறுப்பையும், ஈவு இரக்கமற்ற படுகொலைக் கலாச்சாரத்தையும் பிரதான தந்திரோபாயங்களாக கொண்ட புலிகள் அமைப்பே தற்போது விளங்குகின்றது.

புலிகளை ஜென்ம விரோதியாக ஒதுக்கி வைத்துள்ள இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைக்கக் கூடிய மாற்று அமைப்புக்களோ, வழிகளோ வடகிழக்கில் கிடையாது. அதற்காக புலிகளை மறைமுகமாகவேனும் ஆசிர்வதிக்கும் எண்ணமும் தற்போதைக்கு இல்லை. இந்த நிலையில் இலங்கை அரசின் யுத்த அரசியலுக்கு முண்டு கொடுப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இந்தியாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. இலங்கை அரசு தன்னைவிட்டு விலகிச் செல்வதை தடுப்பதற்கு.

ஆனாலும் இலங்கை அரசோ இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் உண்மை. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் கப்பல்கள்மூலம் கனரக யுத்த உபகரணங்களை எந்தவிதமான நிர்ப்பந்தங்களும் நிபந்தனைகளுமின்றி தென்கோடியில் இறக்கிவிட்டு செல்ல பாகிஸ்தானும் ஈரானும் சீனாவும் தயாராக உள்ளன. பொருளாதார உதவிகளை வழங்கி, இந்திய - மேற்குலக இராஜதந்திர அழுத்தங்களை உதாசீனப்படுத்தக் கூடிய பலத்தை இலங்கைக்கு கொடுக்க சீனாவும் ஈரானும் தயாராக உள்ளன.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் அடிப்படையாக இருந்த வட-கிழக்கு இணைப்பு விவகாரம் சிங்கள சமூகத்தால் தூக்கி வீசப்பட்டபோது கையாலாகாத நிலையில் இருந்த இந்தியா இன்று, கிழக்கு அதிகாரம் வேண்டும். வடக்கிற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பது கூட்டறிக்கையின் சுவைக்கு இடப்பட்ட வாசனைத் திரவியங்களை போன்றதே. இந்தக் கோலத்தில், இந்தியாவுக்கு சொல்லி இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தச் செய்யலாம் என்று நினைத்த அனைத்து அரசியல் கூத்தாடிகளையும் என்ன பெயர் சொல்லி அழைப்பதென்றே தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழ் ஆயுத அமைப்புக்களை வைத்து இலங்கையை மிரட்டிய இந்தியா, மிகவும் பலவீனப்பட்டு போயுள்ள தனது இலங்கை சம்பந்தமான இராஜதந்திர நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்திக் கொள்ள கலைஞரின் உதவியை பெற்று செயற்பட முயற்சிக்கிறது போலும். இருந்தும் இந்தியா இதில் வெற்றிபெறப் போவதில்லை. எதிரியை வெல்ல முடியாவிடின் இணைந்துவிடுவதே மேல் என்று சொல்வதுபோல் இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவும் மறுபுறத்தில் முயற்சிக்கிறது.. ஆனாலும் அதிலும் இந்தியாவிற்கு வெறும் தோல்விதான். இலங்கை அரசின் நண்பர்கள் வரிசையில் இந்தியாவுக்கு முன்னால் பல நண்பர்கள் நிற்கிறார்கள். உலகிலேயே சிறந்த நண்பன் இந்தியாதான் என்று புதுடில்லியில் பசில் கூறியது ஏமாற்று என்பது பசிலுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் புரியும்.

இவற்றையெல்லாம் மேவி கலைஞர் இந்திய மத்திய அதிகார வர்க்கத்துடன் இணைந்து நடாத்திய நாடகத்தின் பிரதான விளைவுகள் எனச்சிலவும் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

கருணாநிதி கொடுத்த (?) இரண்டுவார காலக்கெடு பகுதியில் வடக்கில் இலங்கை விமானப்படை குண்டு வீச்சுக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையை இலங்கை அரசு இந்திய அரசின் கையறுநிலையை ஆசுவாசப்படுத்த மேற்கொண்டிருந்தது என்பதை, மீண்டும் நேற்று (காலக்கெடு முடிவின் முதல்நாள்) இலங்கை விமானங்கள் நடாத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சில் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்துகின்றது.

அடுத்ததாக, எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில், ஈழத் தமிழர்கள் சார்பாக அந்த மக்களால் முன்னெடுக்கப்படும் எத்தகைய எழுச்சிகளையும் அரசும், அதன் தோழமைக் கட்சிகளும் கணக்கிலெடுக்காமலிருக்கக் கூடிய துணிச்சலையும் ஈழத்தமிழர்களுக்காக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஆதரவு நிலை வட கிழக்குக்கு வெளியே இருக்கப் போவதில்லை எனும் மோசமான நிலையையும் தமிழர்கள் தரப்பில் கருணாநிதியின் கூத்து உருவாக்கியுள்ளது.

ரஜீவ் காந்தியின் படுகொலையின் பின்பு, நீண்ட காலத்தின் பிறகு, சாதாரண தமிழக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆரோக்கியமான கரிசனையை ஈழத் தமிழர்களாகிய நாம் அவமதிக்க வேண்டாம் வரவேற்போம். அதேநேரத்தில் தமிழக அரசியல் தலைமைகளிற்கு ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் அவர்களின் சுயநலமற்ற பங்கு, பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ʽஅ" இலிருந்து சொல்லிக் கொடுக்க யாராவது முன் வந்தேயாக வேண்டும். என்றோ ஒரு நாளிலாவது, ஈழத் தமிழர்களுக்காக அர்த்தபுஷ்டியான ஆதரவை வெளிப்படுத்த அதை நெறிப்படுத்தக்கூடிய தலைமை உருவாகும் என்று காத்திருப்போம்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us