புதன், மார்ச் 07, 2007

ஜெயா டீவியின் சேறு பூசலுக்கு, ஜெகத் கஸ்பர் அடிகளாரின் பதில்


மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘சென்னை சங்கமம்.. -மர்மங்கள்’ என்ற செய்தித் தொகுப்பில் பல கேள்விக் கணைகள் விடப்பட்டது. குறிப்பாக சென்னை சங்கமம் நிகழ்ச்சியை அரங்கேற்றிய ‘தமிழ் மைய’த்தின் அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் ராஜ், விடுதலைப்புலிகளுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்... அமெரிக்காவில் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் அந்த நாட்டு அரசாங்கத்தால் வளைக்கப்பட்ட நாச்சிமுத்து சாக்ரடிஸ் என்பவரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்... இவர்களைப் பற்றி மத்திய, மாநில புலனாய்வுத் துறைகள் விசாரிக்க வேண்டும்...’ என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கியது ஜெயா டி.வி.

இது ஒருபுறமிருக்க, வேறு சில தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தமிழ் மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந் நிலையில் ‘தமிழ் மைய’த்தின் அமைப்பாளரான ஜெகத் கஸ்பர் ராஜை சந்தித்தோம்.

‘‘சாதாரண கிறிஸ்தவ பாதிரியாராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்கள், விறுவிறுவென வளர்ந்து, இன்று பல கோடிகளுக்கும், பல நிறுவனங்களுக்கும் அதிபதி ஆகிவிட்டீர்கள் என்கிறார்களே?’’

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் நான் பாதிரியாராக பணியாற்ற ஆரம்பித்தேன். அப்போதிருந்தே நான் ஒரு சமூகப் போராளியாகத்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். தாழ்த்தப்பட்ட&பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறுவிதமான பணிகளைச் செய்து வருகிறேன்.

நான் என்னவாக இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேனோ அது எனக்கு கிடைத்ததா என்றால் இல்லை. ஆனால், கிடைத்த வாய்ப்புக்களெல்லாம் என்னுடைய வாழ்க்கைத் தரத்தை மேன்மையாக்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் ஒன்றில் மேற்படிப்புக்காக நான் செல்லவிருந்த சூழ்நிலையில், மணிலாவில் இருக்கும் ‘வெரிதாஸ்’ வானொலியில் பணியாற்ற வேண்டும் என்று அருட்தந்தை ஆரோக்கியசாமி என்னைப் பணித்தார்கள். அங்கு சென்றதும், கிடைப்பதற்கரிய வாய்ப்புகள்-அனுபவங்களெல்லாம் எனக்குக் கிடைத்தது. 1995-ஆம் ஆண்டிலிருந்து 2001-ஆம் ஆண்டு வரையில் நான் ‘வெரிதாஸ்’ வானொலிக்காக பணியாற்றி இருக்கிறேன்.

ஊடகம், அரசியல் என்று பலதுறைகளில் நான் முது நிலை பட்டப்படிப்பு படித்திருக்கிறேன். உலக நாடு களான கனடா, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். அங்கிருக்கும் தமிழர்களெல்லாம் என்னோடு நட்போடு பழகி வருகி றார்கள்.

இப்படி பல்வேறு தளங்களில் என்னை உயர்த்திய இறைவன், நல்ல வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறார். அந்த வகையில் ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த ‘தமிழ் மைய’மும், ‘குட்வில் கம்யூனிகேஷன்’ நிறுவனமும்...’’

‘‘விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கும் நாச்சி முத்து சாக்ரடிஸ் என்ற தமிழரோடு நீங்கள் நெருக்கமாக இருப்பதாக புகைப்படங்களையெல்லாம் வெளியிட்டு இருக்கிறார்களே..?’’

‘‘அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட் டமைப்பு ‘ஃபெட்னா’ (FETNA-Federation of Tamil Sangam”s of North America). அந்த அமைப்பின் முக்கியப் பொறுப் பாளர் தான் நாச்சிமுத்து சாக்ரடிஸ். நம் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் அவர். அமெரிக்காவில் அணு துறையில் பணியாற்றிய மிகச் சிறந்த விஞ்ஞானி. தற்போது அமெரிக்காவில் பெரிய அளவில் கிரானைட் தொழில் செய்து கொண்டிருப்பவர்.



‘ஃபெட்னா’ அமைப்பு ஆண்டு தோறும் ஜூலை 3&ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரையில் அமெரிக்காவில் பல்வேறு நகரங்களிலும் மிகப் பிரமாண்டமாக தமிழ் கலாசாரம், பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முக்கிய கலைஞர்கள் மற்றும் அறிஞர்களையெல்லாம் அங்கு அழைத்து சிறப்பு செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்காக அழைக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம். எனக்கு மூன்றாண்டுகள் அந்த வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தில் இருந்து அந்த நிகழ்ச்சிக்கு செல்லாத பிரபலங்களே இருக்க முடியாது. நாச்சிமுத்து சாக்ரடிஸ் தமிழகத்தில் இருந்து செல்லும் அத்தனை கலைஞர்களையும் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் பண்பாளர். நல்ல தமிழ் உணர்வாளர். அந்த வகையில்தான் எனக்கு அவரோடு நல்ல நட்பு ஏற்பட்டது. நானும் அவரும் ஒரே மேடையில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள் இங்கிருக்கும் சிலர். அமெரிக்காவில் உள்ள ஒரு வழக்கில் அவர் சிக்கி உள்ளதையும், எனக்கும் அவருக்குமான நட்பையும் முடிச்சிட்டு பேசுவதும்கூட அரசியல்தானே தவிர, அதில் உண்மை எதுவுமில்லை.’’

‘‘விடுதலைப் புலிகளுக்கு நிதித் திரட்டும் அமைப்பு களில் நீங்கள் தீவிரமாக செயல்பட்டதாகச் சொல் கிறார்களே...’’

‘‘ ‘வெரிதாஸ்’ வானொலியில் நான் பணியாற்றிய காலத்தில் ‘உறவுப் பாலம்’ என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். ஈழத்திலே போர் முனையில் தங்கள் உற்றார்-உறவினர்களை இழந்து தவித்த எத்தனையோ பேர் இந்த நிகழ்ச்சி மூலமாக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ஈழத்துப் போரிலே அனாதைகளான குழந்தைகள் நல்வாழ் வுக்காக ‘உறவு பாலம்’ நிகழ்ச்சி மூலம் ஏராளமான ஸ்பான்ஸர்-ஷிப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.



ஈழத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில்தான் உதவியிருக்கிறேன். மொழி உணர்வோடும் தமிழ் இன உணர்வோடும் இருப்பது சட்ட விரோதமனது அல்லவே..?’’

‘‘தங்களின் ‘குட்வில் கம்யூனிகேஷன்’ நிறுவனம் சார்பாக வெளியான கருத்துக் கணிப்புகள் எல்லாம் உங்களை தி.மு.க. ஆதராவாளராகத்தான் அடையாளம் காட்டியிருக்கிறது என்கிறார்களே?’’

‘‘குட்வில் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மூலம் தேர்தலின்போது நாங்கள் எடுத்த கருத்துக் கணிப்பு நூற்றுக்கு நூறு நிஜமாகி இருக்கிறதா இல்லையா? அதேபோல, தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னால் நூறு நாட்களை கடந்து எடுத்த கருத்துக் கணிப்பிலும் உண்மையானத் தகவல்களைத்தான் சொல்லி இருந்தோம். அப்போது மக்கள் இலவச அரிசி கொடுப்பதால் ஆட்சி மீது திருப்தியாக இருந்தார்கள். அதனையெல்லாம்தான் அதில் குறிப்பிட்டிருந்தோம். அதன்பிறகு இப்போதும் கூட கருத்துக் கணிப்பு எடுத்திருக்கிறோம். அதன் முடிவுகள் வரும்போது என்மீது பூசப்படும் அரசியல் சாயத்துக்கெல்லாம் விடை கிடைக்கும். நாங்கள் ‘குட்வில் கம்யூனிகேஷன்’ நிறுவனத்தை தொழில்முறை நிறுவனமாகத்தான் நடத்தி வருகிறோம். இதில் அரசியல் பாகுபாடெல்லாம் கிடையாது. நாளையே கூட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எங்களை அணுகி, ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்று கணித்துச் சொல்லுங்கள்’ என்று கேட் டால், நாங்கள் தயங்காமல் அதனை நேர்மையோடு செய்து தருவோம்...’’

‘‘கனிமொழி உங்களுக்கு எப்போது எப்படி அறிமுகமானார்?’’

‘‘கவிஞர் கனிமொழியை நல்ல படைப்பாளியாக நான் அறிவேன். சில கூட்டங்களில் நான் அவரைச் சந்தித் திருக்கிறேன். தேர்தல் சமயத்தில் கருத்துக் கணிப்பு விஷயமாக நேரில் வந்து என்னிடம் அவர் விவாதித்தார். அப்போதுதான் எனக்கு அவர் நண்பரானார். அதற்குப் பின் ‘தமிழ் மைய’த்தில் சேர்ந்து பல்வேறு பணிகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தற்போது ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப் பாகச் செயல்பட்டார்.’’

‘‘ ‘சென்னை சங்கமம் விழா குறித்து கிளம்பி இருக்கும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உங்கள் பதில் என்ன?’’

‘‘இந்த நிகழ்ச்சியின் வெற்றி சில பேருக்கு பொறாமை யையும் எரிச்சலையும் கிளப்பி இருக்கிறது. அதனாலேயே மலிவான குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள். தமிழக அரசு இந்நிகழ்ச்சிக்காக பணம் எதுவும் தரவில்லை. மக்களுக்கு கிராமிய-நாட்டுப்புற கலைகள் சென்று சேர வேண்டும் என்பதற்காக அரங்கங்கள், போக்குவரத்து வசதி, கிராமிய கலைஞர்கள் சென்னைக்கு வந்து தங்குவதற்கான ஏற்பாடுகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் பூங்காக்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி போன்ற வசதிகளை மட்டுமே அரசு செய்து கொடுத் தது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு பல தனியார் அமைப்புகளும் தாராளமாக உதவியது.

எய்ட்ஸ் விழிப்புணர்வில் ஆரம்பித்து பல்வேறு திட்டங்களை தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து அரசு ஏற்கெனவே செயல் படுத்தி வருகிறது. இம்முறை ‘தமிழ் மைய’த்துடன் சேர்ந்து செயல்பட்டவுடன், ஏகத்துக்கும் சர்ச்சை கிளப்புகிறார்கள். ஆரோக் கியமான விமர்சனத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரம் உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்தும் சிலரின் செய்கை களைக் கண்டு வருந்துகிறோம்.’’

‘‘சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக வேக வேகமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறுவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’

‘‘சுற்றுலா வருவாயை இந்நிகழ்ச்சி அதிகரிக்கச் செய்யும் என்பதால்தான் சுற்றுலாத் துறை எங்களோடு கைகோத்து செயல்பட்டது. அரசாணை போன்ற டெக் னிகலான விஷயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுபற்றியெல்லாம் அரசு அதிகாரிகளைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்...’’

‘‘இளையராஜாவின் ‘திருவாசகம்’ வெளியீட்டு விழாவுக்கு வைகோ-வை அழைத்திருந்தீர்கள்... தற்போது முதல்வர் கருணாநிதியோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். அரசியலில் நுழையும் எண்ணத்தோடு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வதாகச் சொல்கிறார்களே...’’

‘‘திருவாசகம் விவகாரத்தில் நான் பட்ட வலி-வேதனை களை எங்கும் சொன்னதில்லை. இசைஞானி இளையராஜா மிகப் பெரிய திறமைசாலிதான். இருந்தாலும், அவரும் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிதான் உணர வைத்தது. இவ்வளவு பெரிய இசைப் பேழையை உருவாக்கிய எங்களிடம் இன்றைக்கு ஒரு மாஸ்டர் காப்பிகூட இல்லை. அதாவது கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு உரிமையையும் எங்களுக்கு கொடுக்கவில்லை. ‘திரு வாசகம்’ சிம்பொனி முயற்சிக்கு மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டோம். அதற்காக எனது சொத்தைக்கூட விற்றேன். கிடைத்த வருவாய் வெறும் பதினைந்து லட்ச ரூபாய்தான். இதுதான் உண்மை. ஆனால், வெளியில் ஆளாளுக்கு ஏதோதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றியெல்லாம் நான் விரிவாகச் சொன்னால் அது பலரது மன உணர்வு களை காயப்படுத்தும். அதனால் நாகரிகத்தோடு அதைத் தவிர்க்கிறேன்... திருவாசக நிகழ்ச்சிக்கு வைகோவை அழைத்ததிலும் தற்போது சென்னை சங்க மத்துக்கு முதல்வர் கலைஞரை அழைத்ததிலும் எந்த அரசியலும் இல்லை. இதிலிருந்தே தெரியவில்லையா நான் எல்லோருக்கும் பொதுவானவன்தான் என்று! எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் கிடைக்காத சுதந்திரம் எனக்கு திருச்சபையில் கிடைத்திருக்கிறது. அதனால், அரசியலில் எனக்கு விருப்பமில்லை. நான் ஒடுக்கப்பட்ட&பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபடும் சமூக குரலாக இருக்கவே விரும்புகிறேன். ஒருவேளை அரசியலுக்கு வருவதாக இருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாகவே வருவேன்...’’

நம் கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பர் ராஜ் தயங்காமல் பதிலளித்தார். இருந்தாலும், இவரது கூற்று எந்தளவுக்கு உண்மை என்று தெரிந்து கொள்ள நிச்சயம் தமிழக மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். தமிழக அரசே வெள்ளை அறிக்கை வெளியிட்டால் இதில் இருக்கும் சந்தேகங்கள் அனைத்துக்கும் சரியான விடை கிடைத்துவிடும்.



சில சந்தேகங்கள்...

அரசு நிதி உதவியுடன் தனியார் அமைப்பான தமிழ் மையம், 'சுற்றுலாவையும் தமிழ் பாரம்பரியத்தையும் ஊக்குவிப்பதற்காக' என்று சொல்லி நடத்திய சென்னை சங்கமத்தின் அசல் நோக்கம் என்ன?

வரையறுத்திருக்கும் உச்ச வரம்புக்கு மேல் கூடுதலாக செலவிடுவதற்காக விதியை தளர்த்தி சிறப்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றுலா& பண்பாட்டுத்துறையின் 'அரசாணை (நிலை) எண் 20' சொல்லும் நோக்கம்தான் என்ன?

'தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டையும் இலக்கியத்தையும் பெரிதும் கண்டுகளிக்க விரும்பு வதால், அவர்கள் பேராவலைத் தணிக்கும் பொருட்டு சென்னையில் தனியார் ஒத்துழைப்புடன் பண்பாட்டுப் பெருவிழா நடத்தப் போவதாக, ஏற்கெனவே மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சுற்றுலா அமைச்சர் அறிவித்திருந்தாராம்! அதன்படிதான், "தனியார் அமைப்பான தமிழ் மையத்தால் நடத்தப்படவுள்ள சென்னை சங்கமம், பாரம்பரியமிக்க தமிழகப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளைத் தக்க வைக்கவும், புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழகம் வரும்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதத்திலும் அமையும்’’ என்று அரசாணை சொல்லியிருக்கிறது.

சுற்றுலா ஊக்குவிப்பு, புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆர்வம் என்பதெல்லாம் நிதி வரையறையை தளர்த்துவதற்காக அரசாணையில் காட்டப்படும் காரணங்கள் மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், பிப்ரவரி 21 முதல் 26 வரை சென்னை நகரப் பூங்காக்களிலும், திறந்தவெளி அரங்கங்களிலும் திரளாகக் கூடியவர்களில் நூற்றுக்குப் பத்து பேர்கூட புலம் பெயர்ந்த தமிழர்களோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளோ அல்ல. இது அந்த நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிகிறது. கலையார்வமுடைய புலம் பெயர்ந்த தமிழர்களும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் டிசம்பர் சீசனுக்கு வந்து விட்டுப் பொங்கல் முடியும்போது திரும்பிப் போய்விடுவார்கள் என்பது, இது போன்ற கலை நிகழ்ச்சித் துறைகளில் ஈடுபட்டுள்ள எல்லோரும் அறிந்த உண்மை.

அப்படி இருக்க எதற்காக பிப்ரவரி 21-26 இதை தனியாக இத்தனை செலவழித்து நடத்த வேண்டும்?

'பொங்கல் சமயத்திலேயே நடத்த திட்டமிட்டோம். அப்போது அது முடியாமல் போய்விட்டது' என்று அமைப்பாளர்கள் சொல் கிறார்கள். அப்படியானால், அடுத்தப் பொங்கலின்போது நடத்த வேண்டியதுதானே? இப்போது என்ன அவசரம்?

இந்த வருட பட்ஜெட் ஒதுக்கீடு முடியும் முன்பாக எஞ்சியிருக்கும் நிதியை எடுத்து செலவு செய்யும் அவசரமா?

'இதில் அவசரமாக எதுவும் நடக்கவில்லை' என்று பதில் கூற வாய்ப்பில்லை. ஏனென்றால், அரசாணையில் உள்ளபடி, 'தமிழ் மைய ஒருங்கிணைப்பாளர் கனிமொழி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு' மடல்கள் அனுப்பிய நாட்கள் - 25-1-2007, 6-2-2007. உடனே, கடிதம் அனுப்பப்பட்ட அதே 6-2-2007 அன்றே சுற்றுலாத் துறை செயலாளர் நேர்முகக் கடிதம் எழுதி சென்னை சங்கமத்துக்கு விளம்பரம் செய்ய நிதி வழங்குவதற்கான உச்ச வரம்பை தளர்த்திடக் கோருகிறார். அரசாணை பிறப்பிக்கப்படுவது ஒரே வாரத்தில் -அதாவது 13-2-2007 அன்று. அதே நாளில் நிதித் துறையும் இசைவு கொடுத்து ஆணை பிறப்பித்துவிடுகிறது.

புலம் பெயர்ந்த தமிழர் கலிஃபோர்னியாவிலிருந்து கணியான் கூத்துப் பார்க்க விமானத்தில் சென்னைக்குப் பறந்து வரும் வேகத்தைவிட அதி வேகத்தில் தலைமைச் செயலகத்தில் இந்தக் கோப்புகள் பறந்திருக்கின்றன.

ஆட்சியாளர் மனநிலைக்கு ஏற்ற மாதிரி கோப்பெழுதும் ஆற்றல் தானே மி.கி.ஷி. (In Ayya’s Service அல்லது In Amma’s Service)!

இன்னும் சில அடிப்படையான கேள்விகளும் உண்டு... ஏன் இந்த நிகழ்ச்சியை ஒரு தனியார் அமைப்பிடம் அரசு தரவேண்டும்? அரசிடம் இத்தகைய நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஆற்றலோ அமைப்போ இல்லையா?

மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் இரு அரசு சார்ந்த கலாசார அமைப்புகள் இருக்கின்றனவே! ஒன்று தஞ்சையில் இயங்கும் தென் மண்டல கலாசார மையம். கிராமியக் கலைஞர்களை அனுப்பி வைக்கும் தரகர் வேலை மட்டும் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு ஆண்டுதோறும் முழுமையான கலை விழாக்களை தானே நடத்தி வரும் அனுபவம் உடைய அமைப்பு. இதேபோன்ற இன்னொரு அமைப்பு சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.

ஏன் இந்த இரு அமைப்புகளிடமும் விழாப் பொறுப்பு தரப் படாமல், தனியார் அமைப்பான தமிழ் மையத்தின் ஏவல்படி செயல் படும் நிலைக்கு அவை கீழிறக்கப்பட்டன?

முதலில் இந்த தமிழ் மையம் என்பது என்ன? இந்த தனியார் அமைப்பில் நேற்று வரை கனிமொழி ஒருங்கிணைப்பாளராக இல்லை. துல்லியமாக சொல்வதானால், தி.மு.க ஆட்சி அமையும்வரை இல்லை. ஜகத் கஸ்பர் ராஜ் என்பவர்தான் தமிழ் மையத்தின் முகம்.

அவர் மீதான முந்தைய சர்ச்சைகள் எதுவுமே அரசுக்குத் தெரியாதா?

இப்படிப்பட்ட விழாக்கள் கலையின், கலைஞர்களின் அசல் பிரச்னைகளை கவனிக்க விடாமல் மறைக்கின்றன. சென்னைப் போன்ற பெரு நகரம் தொடங்கி சிற்றூர்கள் வரை கலைகளுக்கு ஏற்ற சூழல் அரசால் உருவாக்கப்படவும் இல்லை. நசுக்கப்படுவதே அதிகம். சென்னையில் அரசு வசம் இருக்கும் அரங்கங்களில் விதித்துள்ள கட்டணத்தை செலுத்தி நிகழ்ச்சி நடத்துவதானால், எந்த நாடகக்குழுவும் கலைக் குழுவும் பார்வையாளர்களிடம் நூறு ரூபாய் டிக்கெட் போடாமல் நிகழ்ச்சி நடத்த முடியாது. இல்லாவிட்டால், தனியார் ஸ்பான்சர்களிடம் கௌரவப் பிச்சை எடுக்க வேண்டும். நாடக, கலைப் பயிற்சிகளுக்கு எளிய கட்டணத்தில் அரசு ஹால்களை ஏற்படுத்தித் தரவேண்டுமென்ற கோரிக்கை 30 வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

பூங்காக்களில் வீதி நாடகக் குழுக்கள் நாடகம் போட அனுமதி இல்லை. கடுமையான காவல்துறை முன் தணிக்கையும் கெடுபிடிகளும் இருக்கின்றன. சென்னை சங்கமம் திருவிழாவில் ஒப்புக்கு சப்பாணியாக மூன்றே இடங்களில் முப்பது நிமிடம் மட்டுமே பாட அழைக்கப்பட்ட சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழு மறைந்த இசை மேதை எம்.பி.சீனிவாசனால் உருவாக்கப்பட்டது. சேர்ந்திசை என்ற அருமையான வடிவத்தை பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு கற்றுத் தருவதற்கான திட்டத்தை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அன்றைய அமைச்சர் அரங்கநாயகம் செயல்படுத்தினார். நூற்றுக்கணக்கான குழந்தைகள் தமிழகம் முழுவதும் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்கள்.

அந்தத் திட்டத்தைப் பின்னர் நிறுத்தியது யார் என்பது இப்போது அரசுப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நினைவிருக்கிறதா?

சென்னை சங்கமத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி அந்த விழாத் துவக்கத்தில் பேசியதிலிருந்தே வெளிப்பட்டு விட்டது.

கனிமொழியை தன் வழித் தோன்றலாக அங்கே வர்ணித்தார். எந்தத் துறைக்கு? உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதில் தன் வாரிசு கனிமொழி என்று அறிவித்தார்.

ஆக, சென்னை சங்கமத்தில் சங்கமித்தது மக்களும் கலையும்தானா? அல்லது அரசியலும் ஆதாயமுமா?புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் கருத்துடைய இரு நாடகங்களை, சென்னை சங்கம விழாவில் மாநில நூலகத் துறை நிகழ்த்தச் செய்தது. அதே சமயம், ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலேயே நடந்து முடியவேண்டிய நூலகங்களுக்கான புத்தகங்கள் தேர்வு ஐந்து மாதமாகியும் இன்னும் நடக்கவில்லை!

அதுசரி... வேகமாக பறப்பதற்கு, கோப்புகளுக்கு சில சமயம் சிறகுகளுக்குப் பதிலாக கிரீடம் அல்லவா வேண்டியிருக்கிறது..?
நன்றி>விகடன்.கொம்

13 கருத்துகள்:

ஸ்ரீ சரவணகுமார் சொன்னது…

ஜகத் காஸ்பரின் ஒரிரு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். பல துறைகளில் அவருடைய திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். திருவாசகத்தின் பல வரிகளை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு கிருத்துவராக இருந்தாலும் அவர் வாயால் நீங்கள் திருவாசகம் கேட்க வேண்டும். அவ்வளவு இனிமை. இளையராஜாவின் திருவாசகம் வெளிவர அவர் கொண்ட முயற்சிகள் அளப்பரியது. சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த ஜகத் போன்ற முழு மனதோடு ஈடுபடுபவர்கள் தான் தேவை. அரசே எடுத்து நடத்தினால் அதில் ஊழலும் ஒழுங்கின்மையும் தான் இருக்கும். 'Jaya' TV சொல்வது போல் அரசின் நிதி வேறு எங்காவது சென்றிருக்குமானால் அதையும் முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

Boston Bala சொன்னது…

can you disable the auto-play for audio in the sidebar? :)

thanks

சிறில் அலெக்ஸ் சொன்னது…

//‘‘சாதாரண கிறிஸ்தவ பாதிரியாராக வாழ்க்கையைத் தொடங்கிய நீங்கள், விறுவிறுவென வளர்ந்து, இன்று பல கோடிகளுக்கும், பல நிறுவனங்களுக்கும் அதிபதி ஆகிவிட்டீர்கள் என்கிறார்களே?’’
//

இது எப்டி..? அவர் இன்னும் பாதிரியார் இல்லையா?

பொதுவா பாதிரியார்கள் இலாபநோக்குள்ள தொழில்கள் செய்ய அனுமதி கிடைப்பதில்ல.

பங்குகளை நிர்வகிக்கும் பாதிரியார்கள் 'ஏழ்மை' எனும் வார்த்தைப்பாடு(vow) எடுப்பதில்லை. ஆனாலும் அளவுக்கதிக சொத்தெல்லாம் அவர்கள் தனியா சேர்க்க இயலுவதில்லை. (அதெல்லாம் சர்ச்தான் செய்யும் :)

பெயரில்லா சொன்னது…

கஸ்பர் அடிகளார் பேச்சினையும் அவரின் தாழ்த்தப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மீதான, முக்கியமாக ஈழத்தமிழரின் பால் உள்ள அன்பும் அளப்பரியது.
பேட்டியில் அவர் குறைப்பட்டிருக்கும் இளையராஜா பற்றிய கதைகளையும் அறிந்திருக்கிறேன். அக்கதைகளை திரு.கஸ்பர் வெளியே சொன்னால் இளையராஜா பற்றி விழுந்து விழுந்து எழுதும் பத்திரிகைகள், பத்தி எழுத்தாளர்கள் மற்றும் வலைப்பதிவர் அதற்கு அப்பதிவையும் விஞ்சும்வண்ணம் பின்னூட்டமிடுவோர் எல்லோரும் வெட்கித்தலை குனியும் வண்ணம் இருக்கும்!!!!கஸ்பரின் நற்குணம் இளையராஜாவின் நல்லகாலம்!!!!

Thamizhan சொன்னது…

கேள்விகளைக் கேட்டு அதற்கு மனந்திறந்த பதில்கள் அளித்தபின் சந்தேகங்கள் என்று போட்டிருப்பது ச்ந்தேகங்களா?விஷமங்களா?
பத்திரிக்கை சுதந்திரம் வேண்டும் ஆனால் பண்பாடு வேண்டாமா?அவருக்குப் பதிலளிக்க வாய்ப்புத் தராமல் போட்டிருப்பதி்லிருந்து பத்திரிக்கை நடத்துகிறாயா?அரசியல் நடத்துகிறாயா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.
ஒரு மனிதரின் உழைப்பைப் பாராட்டாவிட்டாலும்,பலர் உளந்திறந்து உண்மையாகவே பாராட்டியிருக்கிறார்கள்,இந்த மாதிரி பத்திரிக்கை என்ற நாய்ச்சங்கிலியை மாட்டிக்கோண்டு அலையும் சோ,விகடன் தான் சென்னை சங்கமத்தைப் பற்றி அவதூறாக எழுதி்யிருக்கிறார்கள்.அவர்களது முகமூடிகள்தான் கிழிக்கப்பட்டுள்ளன.இவர்களை ஆதரிக்கும் தமிழர்களே அதுகளைக் குப்பையில் போடுங்கள,பாடங்கற்பியுங்கள்.

பெயரில்லா சொன்னது…

ஜெகத் கஸ்பாரை நன்கறிவேன். அவருடன் உரையாடிய பொழுதுகளிலெல்லாம் அவருடைய சமூக அக்கறை தொனிக்கும். வெறும் பேச்சில் மட்டுமல்லாமல் அவருடைய நூல்களை நீங்கள் வாசித்துப் பார்த்தாலே அதில் தமிழ் இலக்கியத்தின் அழகும், சமூகப் பார்வையின் ஆழமும் புரியும். மதம் சார்ந்த உணர்வுகளைக் கிளப்பாமல், சமூகம் சார்ந்த அக்கறையைக் கிளப்பும் அவருடைய நூல்களை நான் விரும்பிப் படிப்பதுண்டு.

திமுக விற்கு ஆதரவான தொனி அவரிடம் உண்டு என்பதை அவர் மறுத்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். கலைஞரிடம் ஒரு தலைவர் என்னும் நிலையையும் மீறி தந்தைக்குரிய பாசம் உண்டு என்று சொன்னவர்.

மதங்கள் கடந்த ஒரு உறவுப் பாலத்தை ஏற்படுத்த ஜெகத் கஸ்பார் போல பல கத்தோலிக்கப் பாதிரியார்கள் முயல்வதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இன்றைய சமூகத்தின் பிரிவினைக் கீறல்களைத் தீர்க்க திறந்த மனதோடு கஸ்பாரைப் போல பணியாற்றும் மக்கள் தேவை.

அன்னை தெரசா சொன்னதுபோல,
ஒரு இந்து நல்ல இந்துவாக வேண்டும்,
ஒரு கிறிஸ்தவன் நல்ல கிறிஸ்தவனாக வேண்டும்
ஒரு இஸ்லாமியர் நல்ல இஸ்லாமியர் ஆகவேண்டும்

இதுவே நம் சமூகத்துக்கு இன்றைக்குத் தேவை.

பிருந்தன் சொன்னது…

Anonymous said...
கஸ்பர் அடிகளார் பேச்சினையும் அவரின் தாழ்த்தப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மீதான, முக்கியமாக ஈழத்தமிழரின் பால் உள்ள அன்பும் அளப்பரியது.
பேட்டியில் அவர் குறைப்பட்டிருக்கும் இளையராஜா பற்றிய கதைகளையும் அறிந்திருக்கிறேன். அக்கதைகளை திரு.கஸ்பர் வெளியே சொன்னால் இளையராஜா பற்றி விழுந்து விழுந்து எழுதும் பத்திரிகைகள், பத்தி எழுத்தாளர்கள் மற்றும் வலைப்பதிவர் அதற்கு அப்பதிவையும் விஞ்சும்வண்ணம் பின்னூட்டமிடுவோர் எல்லோரும் வெட்கித்தலை குனியும் வண்ணம் இருக்கும்!!!!கஸ்பரின் நற்குணம் இளையராஜாவின் நல்லகாலம்!!!!


அனானி உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே அடிகளாரிடம் பேட்டி எடுத்தால் பேட்டியைமட்டும் போட்டு இருக்கவேண்டும், பின்னால் தமது கருத்தையும் புகுத்தியது அனாகரிகமான செயலே. கருத்து கூறுவது என்றால் தனியாக ஒரு கட்டுரையை போட்டிருக்கலாம். அடிகளாரின் பேட்டியுடன் தமது கருத்தையும் புகுத்தியமையால் விகடன்.காம் இன், பின்புலத்தை ஆராயும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது. கருத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு அதை நாகரீகமாக கூறலாம். அவ்விடயத்தில் விகடன் தவறிவிட்டது.

பிருந்தன் சொன்னது…

மன்னிக்கவேண்டும் மேலே நான் போட்ட பின்னூட்டம் தமிழனுக்குரியது.

Thamizhan said...
கேள்விகளைக் கேட்டு அதற்கு மனந்திறந்த பதில்கள் அளித்தபின் சந்தேகங்கள் என்று போட்டிருப்பது ச்ந்தேகங்களா?விஷமங்களா?
பத்திரிக்கை சுதந்திரம் வேண்டும் ஆனால் பண்பாடு வேண்டாமா?அவருக்குப் பதிலளிக்க வாய்ப்புத் தராமல் போட்டிருப்பதி்லிருந்து பத்திரிக்கை நடத்துகிறாயா?அரசியல் நடத்துகிறாயா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.
ஒரு மனிதரின் உழைப்பைப் பாராட்டாவிட்டாலும்,பலர் உளந்திறந்து உண்மையாகவே பாராட்டியிருக்கிறார்கள்,இந்த மாதிரி பத்திரிக்கை என்ற நாய்ச்சங்கிலியை மாட்டிக்கோண்டு அலையும் சோ,விகடன் தான் சென்னை சங்கமத்தைப் பற்றி அவதூறாக எழுதி்யிருக்கிறார்கள்.அவர்களது முகமூடிகள்தான் கிழிக்கப்பட்டுள்ளன.இவர்களை ஆதரிக்கும் தமிழர்களே அதுகளைக் குப்பையில் போடுங்கள,பாடங்கற்பியுங்கள்.

பெயரில்லா சொன்னது…

http://www.tis-usa.com/blog/

http://www.tis-usa.com/blog/2005/09/cd-release-at-fetna-photos-and-audio.html

Fr. Jegath addressing the audience during the release function. Others in the picture (from left to right) are Dr. Sankarkumar, Mr. Paul Pandian and Mr. Nachimuthu Socrates.

If the logic is a visiting Fr. Jegath standing with a photo with Socrates means nexus to LTTE, the same logic goes to Dr. Sankarkumar Pandian and too. Most of us know SK is not such a person. Can we blame Fr. Jegath?

பெயரில்லா சொன்னது…

Also note this photo where Fr, Sankarkumar, Paul Pandian and Socrates are. It shows Vikatan sponsers the event.

http://www.tis-usa.com/images/FETNA-1.jpg
Now they write ill about Fr. Kaspar. Vikatan editors should be arrested like JJ did earlier

பெயரில்லா சொன்னது…

Jegth gasparaj is a good servent of Jesu. He is a good friend of
POOR PEOPLE.

பெயரில்லா சொன்னது…

I know Fr.Jagat Kasper,

He is a wonderful human. He loves humans. Such kind and active humans are rare now days. Please don't blame him.

JJ makes all political. how this 'Gnani' (Aanatha vikatan) became JJ. amazing.

பெயரில்லா சொன்னது…

உங்கள் பதிவுக்கு நன்றி ப்ருந்தன்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us