
குளிர்ந்த காலைவேளையில்
பனித்துளிகள் மூடி நிற்கும்!
பனித்துளியின் பாரம் தாங்காது
இளம்தளிர்கள் தலை சாய்த்திருக்கும்!
அவற்றுக்கு விடுதலை கொடுப்பதற்கு
புறப்பட்டான் இளம் சூரியன்!
அவன் கதிர்பட்டவுடன் உருக்கிய
வெள்ளி போன்று கரைந்தோடியது பனி!
கதிரவனின் வருகையினால்தான்
எத்தனை ஆர்ப்பாட்டம்!
அவனை வரவேற்க
ஒவ்வொரு உயிரினமும் கானம்பாடின!
குஞ்சுகள் கூட தமது
சின்னவாயால் வரவேற்பு கொடுத்தன!
மொட்டுக்கள் அவிழ்ந்தன
பூ மணம் பரப்பின!
விலங்கினங்கள் கூட
கண் விழித்தன!
மனிதன் மட்டும்
போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!
அவனை எழுப்ப வேண்டும்
கடிகார சத்தம்!
இன்ப ஓசையில் எழும்பாத அவன்
இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.